ஏப்ரல் 23: உலகப் புத்தக நாள்: படி… படி… படி...

ஏப்ரல் 23: உலகப் புத்தக நாள்: படி… படி… படி...
Updated on
1 min read

தினம் படி
உனக்குள்
ஒரு படிப்பாளியும்
ஒரு படைப்பாளியும்
உருவாகிறான்!

படிப்பது சுகம்
படிப்பது தவம் என்பதை
உணர்ந்தே அறிய முடியும்!

அறிந்தவர் சொன்னால் கசக்கும்;
அனுபவம் இருந்தால் இனிக்கும்!

அறிவு வேண்டுமா படி...
வாழ்வில் வெற்றி வேண்டுமா படி...
நல்ல வேலை வேண்டுமா படி...
உயர்வு வேண்டுமா படி…
படி... படி... படி...

படித்தால்
உயர்வு நிச்சயம்...
இது காலம் சொல்லும்
உண்மை!

உலகில் பட்டதாரிகள்
உருவாக்கப்படுகிறார்கள்;
ஆனால்,
ஒரு படிப்பாளிகூட
உருவாக்கப்படுவதில்லை!

பட்டத்திற்கும் படிப்பிற்கும்
தொடர்பு இல்லை.

படிப்பு என்பது
நம்மை ஒரு நல்ல
சிந்தனையாளனாகவும்
பண்பாளனாகவும்
பகுத்தறிவாளனாகவும்
அறிவாற்றல் மிக்கவனாகவும்
ஆற்றல் மிக்கவனாகவும் மாற்றுகிறது!

படிப்பது மட்டும் போதாது...
படிப்போடும் படிப்பினையோடும்
நாம் அறிந்துகொள்ளும் அனைத்தும்
மற்றவர்களுக்கும் பயனுறச் செய்து
முன்னேற்றுவதே படிப்பு.

வாழ்க்கையில் நாம்
படிப்படியாகக் கற்றதை
நாம் பிறருக்குக் கற்பித்து
வாழ்தலில் இருக்கிறது
நம் வெற்றி!

கற்போம்;
கற்பிப்போம்!

மாணவப் பருவத்தில்
படி என்றால்
பெற்றோரும் ஆசிரியரும்
எதிரி போல் தோன்றலாம்.

அதே நாம் பெற்றோர்
ஆன பிறகு நம் பிள்ளைகளுக்கு
நாம் ஹீரோவாகத் தெரிவோம்!

படிப்பு வாழ்க்கைத் தரத்தை
மட்டும் உயர்த்தாது,
பண்பாளராகவும் மாற்றுகிறது.

படித்தவரை இந்தச்
சமூகம் அங்கீகரிக்கத்
தவறியதில்லை.
படிப்பு நம்மை
வெற்றி எனும் படிக்கட்டுகளில்
பயணிக்க வைக்கும்!

நல்ல நூல்களைப் படிப்போம்;
பயன்பெறுவோம்!

- ஜெ.இராஜ்குமார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in