ஆளுநர்கள் நியமனம் முதல் ‘ஸ்பேடெக்ஸ்’ வரை: சேதி தெரியுமா? @ டிச.24-31
டிச.24: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பிஹார் மாநில ஆளுநராகவும், பிஹார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கேரள ஆளுநராகவும் நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார். மிசோராம் ஆளுநராக ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ ஜெனரலும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.கே. சிங், ஒடிஷா ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி, மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
டிச.24: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பாக மறு ஆய்வு செய்யுமாறு இந்திய புவியியல் ஆய்வு மையத்துக்கு (ஜிஎஸ்ஐ) மத்திய அரசு பரிந்துரை செய்தது.
டிச.25: பிரபல மலையாள எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான எம்.டி. வாசுதேவன் (91) உடல்நலக் குறைவால் கோழிக்கோட்டில் காலமானார்.
டிச.25: அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கஜகஸ்தானின் அக்டா நகரில் விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.
டிச.25: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதேபோல இசை முரசு என்றழைக்கப்படும் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.
டிச.25: பிரதமர் நரேந்திர மோதி ரூ.44,605 கோடி செலவில் செயல்படுத்தப்படும் கென் - பெட்வா நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
டிச.26: இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். 2004 - 2014 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர். 1991-96இல் மத்திய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் இவர்.
டிச.26: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணுவின் நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
டிச.26: பல துறைகளில் சிறந்து விளங்கும் 17 சிறார்களுக்கு பிரதமரின் பால புரஸ்கார் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
டிச.27: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிச.28: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிச.29: தென் கொரியாவின் முவான் நகரில் தரையிறங்கியபோது விமானம் தீப்பிடித்த விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர், 2 ஊழியர்கள் மட்டுமே உயிர் தப்பினர்.
டிச.29: நியூயார்க்கில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் பட்டத்தை 2ஆவது முறையாக வெல்லும் முதல் இந்தியர் கொனேரு ஹம்பி.
டிச.30: தமிழ்நாட்டில் 6-12ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் வகையில் ‘புதுமைப்பெண்’ திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
டிச.30: கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழாவின் ஒரு பகுதியாக விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையையும் இணைக்கும் வகையில் கண்ணாடி இழை நடைபாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
டிச.30: 2022இல் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர் சதிஷுக்கு தூக்குத் தண்டனை வழங்கி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
டிச.30: இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்படி இரட்டை விண்கலன்கள், பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்ட்டு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.
டிச.30: மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர்.
டிச.30: மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையில் ‘சிஆர்450’ என்கிற உலகின் அதிவேக புல்லட் ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது.
டிச.30: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் (100) உடல்நலக் குறைவால் ஜார்ஜியாவில் காலமானார். இவர் 2002இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்.
தொகுப்பு: மிது
