

நவ.2: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கனடா அமைச்சர் டேவிட் மோரிசன் குற்றம் சாட்டிய நிலையில், கனடா தூதரக அதிகாரிக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பி கண்டனத்தைப் பதிவுசெய்தது.
நவ.2: இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சாஹா, மூன்று வடிவ கிரிக்கெட்போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
நவ.3: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0 - 3 என்கிற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முழுமையாக இழந்தது. இதன்மூலம் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி உள்நாட்டில் ‘ஒயிட் வாஷ்’ ஆனது.
நவ.4: உத்தராகண்டில் அல்மோரா மாவட்டத்தில் 650 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
நவ.5: 2026ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கை நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்தியா கடிதம் வழங்கியது.
நவ.5: அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். மொத்தம் உள்ள 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்களில் டொனால்டு ட்ரம்ப் 295 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றார். கமலா ஹாரிஸுக்கு 226 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. 132 ஆண்டுகளுக்கு பிறகு இடைவெளி விட்டு வெற்றி பெற்ற இரண்டாவது நபர் ட்ரம்ப்.
நவ.6: முன்னாள் உள்துறைச் செயலாளர், முன்னாள் மாநிலத் தேர்தல் அதிகாரி, முன்னாள் அதிமுக எம்.பி. எனப் பல பதவிகளை வகித்த கே. மலைச்சாமி (87) வயது முதிர்வால் சென்னையில் காலமானார்.
நவ.6: இலகுரக மோட்டார் வாகனத்துக்கான ஒட்டுநர் உரிமம் வைத்திருப்பவர், 7500 கிலோவுக்குக் குறைவான எடை கொண்ட வணிகப் போக்குவரத்து வாகனத்தை இயக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு சாசன அமர்வு தீர்ப்பளித்தது.
நவ.7: அரசு உதவி பெறும் தேவாலயப் பள்ளிகளில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் சம்பளமும் வருமான வரி பிடித்தத்துக்கு உட்பட்டதே என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவ.8: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய டி.ஒய். சந்திரசூட் ஓய்வுபெற்றார்.