

அக்.10: இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவின் பெண் எழுத்தாளர் ஹன் காங்குக்கு அறிவிக்கப்பட்டது.
சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக டென்னிஸ் ஜாம்பவான்களில் ஒருவரான ஸ்பெயினின் ரபேல் நடால் அறிவித்தார். இவர் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் 63 ஏடிபி தொடர் பட்டங்களையும் வென்றவர்.
அக்.11: அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதத்துக்கு எதிரான ஜப்பானின் ‘நிஹான் ஹிடாங்க்யோ’ அமைப்புக்கு அறிவிக்கப்பட்டது.
அக்.14: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு டேரன் அசெமோக்லு (அமெரிக்கவாழ் துருக்கியர்), சைமன் ஜான்சன் (பிரிட்டிஷ் அமெரிக்கர்), ஜேம்ஸ் ஏ. ராபின்சன் (பிரிட்டன்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
கனடாவில் உள்ள இந்தியத் தூதர், பிற தூதரக அதிகாரிகள் மீது ஆதாரமின்றி கனடா அரசு குற்றம்சாட்டிவரும் நிலையில், இந்தியாவுக்கான கனடா தூதரகப் பொறுப்பு அதிகாரி ஸ்டூவர்ட் வீலரை அழைத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.
அக்.15: மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கு நவ.20இல் ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் சட்டமன்றத்துக்கு நவ.13, 20 என இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அக்.16: ஜம்மு - காஷ்மீர் மத்திய ஆட்சிப் பகுதியின் முதல்வராகத் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லாவுக்குத் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அக்.17: ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக பாஜகவின் நயப் சிங் சைனிக்கு ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமிக்கத் தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முறைப்படி பரிந்துரைத்தார்.
அசாமில் குடியேறிய வங்கதேச அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் இந்தியக் குடியுரிமைச் சட்டப்பிரிவு 6ஏ செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசமைப்பு சாசன அமர்வு தீர்ப்பளித்தது.
பெங்களூருவில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 46 ரன்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி ஆட்டமிழந்தது. உள்நாட்டில் இந்திய அணியின் மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.
டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சீன அணி 5 தங்கம், 3 வெண்கலம் என எட்டுப் பதக்கங்களுடன் முதலிடத்தையும், இந்தியா 2 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் ஒன்பதாம் இடத்தையும் பிடித்தன.