டிஜிட்டல் டைரி 11: மீண்டும் பார்க்க முடியாத வினோத இணையதளம்

டிஜிட்டல் டைரி 11: மீண்டும் பார்க்க முடியாத வினோத இணையதளம்
Updated on
2 min read

இணையதளங்களை உருவாக்குவதற்கான நோக்கங்களில் அதிக பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்பதும் ஒன்று. பெரும்பாலான தளங்கள், பார்வையாளர்களை மீண்டும் வருகை தர வைப்பதற்கான உள்ளடக்கத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த வழக்கமான வடிவத்துக்கு மாறாக ‘ஒன்லி விசிட் ஒன்ஸ்’ (onlyvisitonce.com) என்கிற தளத்தை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘ஒன்லி விசிட் ஒன்ஸ்’ தளத்தில் நுழைந்ததுமே ‘வணக்கம் பயனரே, நீங்கள் பதிவு செய்ய விரும்பும் வாழ்க்கை அறிவுரையை எழுதுக அல்லது வாசிக்க’ என்கிற செய்தியைக் காண்பிக்கிறது. நீங்கள் விருப்பப்பட்டால் செய்தியைப் பதிவு செய்யலாம் அல்லது செய்தியை வாசித்துவிட்டு இணையதளத்திலிருந்து வெளியேறலாம். ஒரு வேளை, இரண்டாம் முறை அதே தளத்துக்குச் சென்று நீங்கள் பார்க்க விரும்பினால், ‘ஏற்கெனவே இத்தளத்தைப் பார்த்திருக்கிறீர்கள். உங்கள் பயணம் முன்னோக்கி இருக்க வேண்டும், திரும்பிப் பார்க்க வேண்டாம்’ என்கிற வாசகத்தைக் காண்பித்து விடை கொடுத்து அனுப்புகிறது.

ஒரு முறை தளத்தைப் பார்த்த இணைய வாசிகள் மீண்டும் வருகின்றனரா என்பதைக் கண்காணிக்க ‘ஐபி’ முகவரி சேகரிக்கப்படுவது தொடர்பான தனியுரிமையைப் பற்றிய விளக்கத்தையும் இத்தளம் தெளிவாகத் தருகிறது. நோவா பாரன் என்பவர் இத்தளத்தை உருவாக்கியிருக்கிறார். இத்தளம் உருவாக்கப்பட்டதன் நோக்கம்தான் என்ன? வித்தியாசமான முறையில் சிந்தித்து இணைய வாசிகளைக் கவர்ந்து இழுக்கவே இம்முயற்சி என்றாலும், ’வாழ்வில் முன்னோக்கிச் சென்று கொண்டே இருங்கள்’ எனும் செய்தியைச் சொல்லவும் நேர்மறை எண்ணத்தை விதைக்கவும் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதோடு, இத்தளத்தை உருவாக்கிய நோவா பாரன், வித்தியாசமான மற்றொரு இணையதளத்தையும் அமைத்திருக்கிறார். அத்தளத்தை நீங்கள் அணுகும் ஒவ்வொரு முறையும், ஏதாவதொரு இணையதளத்துக்கு உங்களைக் கொண்டுசெல்லும். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய இணையதளத்தை உங்களுக்கு அது அறிமுகம் செய்யும். இத்தளத்தைப் பார்க்க - https://visitarandomwebsite.com/

இப்படி ஏதாவதொரு ஒரு இணையதளத்தை அடையாளம் காட்டும் வகையில் ஏற்கெனவே ஒரு தளம் இயங்கி வருகிறது. அது - https://clicktheredbutton.com/ எனும் தளம்.

அடுத்து, https://ismy.blue/ எனும் தளத்தைப் பார்க்கலாம். இத்தளத்தை நீங்கள் பார்க்கும்போது ஒரு வண்ணம் திரையில் தோன்றி, ‘இது என்ன நிறம்?’ என்கிற கேள்வியை உங்களிடம் கேட்கிறது. நீங்கள் பதில் சொல்லும்போது அடுத்த நிறம் திரையில் தோன்றும். இப்படி நீலமும், பச்சையும் கலந்து வரும்போது ஏதாவதொரு நிறத்தைத் தேர்வு செய்ய வேண்டும். முடிவில், வண்ணங்கள் தொடர்பான ஒரு செய்தியை அத்தளம் உங்களுக்கு காண்பிக்கிறது. விளையாட்டும், செய்தியும் அடங்கிய ஒரு தளமாக இது இயங்குகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in