சேதி தெரியுமா?

சேதி தெரியுமா?
Updated on
1 min read

ஆக.23: ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய (2,492 காரட்) வைரம் கண்டெடுக்கப்பட்டது. இதற்கு முன்பு 1905இல் தென்ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 3,106 காரட் வைரமே மிகப் பெரியது.

ஆக.23: சுவிட்சர்லாந்தின் லாசன் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.49 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாமிடம் பிடித்தார்.

முறைகேடாகக் கடன் வழங்கி நிதி மோசடியில் ஈடுபட்டதால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் உள்பட 24 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய ஐந்து ஆண்டுகளுக்குப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியம் (செபி) தடை விதித்தது.

ஆக.24: அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் அறிவித்தார். இவர் 34 டெஸ்ட், 167 ஒரு நாள், 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஆக.24, 25: பழநியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது.

ஆக.25: மத்திய அரசு ஊழியர்களுக்குப் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு (யுபிஎஸ்) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஆக.26: நாட்டில் முதல் மாநிலமாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) மகாராஷ்டிர அரசு அமல்படுத்தியது.

ஆக.27: மாநிலங்களவையில் காலியாக இருந்த 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 9 பேர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்மூலம் மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா போட்டியின்றித் தேர்வானார். இளம் வயதில் ஐசிசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்.

ஆக.28: முஸ்லிம் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் வக்பு வாரியச்சொத்து ஆகாது என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17ஆவது பாராலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கின. 22 விளையாட்டுப் பிரிவுகளில் 4,400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in