சேதி தெரியுமா?

சேதி தெரியுமா?
Updated on
1 min read

ஆக.9: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் 18 மாதங்களுக்குப்பிறகு முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்தார்.

ஆக.10: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதானி குழுமத்தில் செபி அமைப்பின் தலைவர் மாதவி புரி புச், அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றச்சாட்டை முன்வைத்தது.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயரை (வசதியானவர்கள்) அடையாளம் கண்டு நீக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரையை மத்திய அமைச்சரவை நிராகரித்தது.

ஆக.11: முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் (95) உடல் நலக் குறைவால் காலமானார். இவர் முன்னாள் பிரதமர்கள் ராஜிவ் காந்தி, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.

பாரிஸில் நடைபெற்ற 33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. 126 பதக்கங்களுடன் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தையும், 91 பதக்கங்களுடன் சீனா இரண்டாமிடத்தையும், 45 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாமிடத்தையும் பிடித்தன. இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் 71ஆம் இடத்தைப் பிடித்தது.

ஆக.13: மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டார்.

வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக பாஜக மூத்த உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் நியமிக்கப்பட்டார்.

ஊக்க மருந்து கட்டுப்பாடு விதிகளை மீறியதாக இந்திய பாரா பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்தை 18 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்தது. இதனால், இவரால் பாரிஸ் பாராலிம்பிக்கில் பங்கேற்க முடியாது.

ஆக.15: நாட்டில் மதம் அடிப்படையிலான சட்டம் தேவையில்லை என்றும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் டெல்லி செங்கோட்டையில் 78ஆவது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

சென்னை கோட்டையில் நடைபெற்ற 78ஆவது சுதந்திரத் தின விழாவில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 1000 ‘முதல்வர் மருந்தகங்கள்’ தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in