தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு… எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 2438 பயிற்சிப் பணியிடங்களுக்கான (Apprentice) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிப் பணியிடங்களில் சேர தேர்வு எழுதத் தேவையில்லை. ஐடிஐ, 10, 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்: கோவை போத்தனூர், சென்னை பெரம்பூர், ராயபுரம், ஆவடி, தாம்பரம், சேலம், அரக்கோணம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்பட தெற்கு ரயில்வேயின் பல்வேறு பணிமனைகளில் பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக் காலம்: பணியின் தன்மைக்கேற்ப ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை சம்பளத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஐடிஐ படிப்பு அல்லது 10, 12ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதிக்கேற்ப பணியின் தன்மை மாறுபடும் எனத் தெற்கு ரயில்வேயின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு போன்ற இடங்களைச் சேர்ந்தவராகவும், ஆந்திரப் பிரதேசத்தின் எஸ்பிஎஸ்ஆர் நெல்லூர், சித்தூர் அல்லது கர்நாடகத்தின் தட்சிண கர்நாடகம் பகுதியைச் சேர்ந்தவராக மட்டும் இருக்க வேண்டியது கட்டாயம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் பணி அனுபவம் இல்லாதவராக இருந்தால், 15 வயது நிரம்பியவராகவும், 22 அல்லது 24 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இது குறித்த விரிவான தகவல்களுக்குத் தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை: https://sr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,4,1618,1905 என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ரூ.100 பதிவுக் கட்டணம் செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
முக்கியத் தேதி: ஆகஸ்ட் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, மதிப்பெண், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு: https://sr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,4,1618,1905 என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.
