சட்டக் கல்வியும் மனித உரிமைக் கல்வியும் ஏன் தேவை?

சட்டக் கல்வியும் மனித உரிமைக் கல்வியும் ஏன் தேவை?
Updated on
2 min read

அப்போது மணி 5 இருக்கும். பள்ளியில் பயிரிடப்பட்டிருந்த காய்கறித் தோட்டத்துக்குள் நின்று கொண்டிருந்த ஆசிரியரை நோக்கி மூச்சிரைக்க ஒரு பெண் வேகமாக ஓடி வந்தார். “டீச்சர் வேகமாக வாங்க. நம்ம தீபக்கைப் போட்டு அடிக்கிறாங்க” என்று கூறியவரைப் பின்தொடர்ந்து ஆசிரியர் ஓட்டமும் நடையுமாகப் புறப்பட்டார்.

சட்டம் அறிதல்

பள்ளி முடிந்த பிறகு நடந்த அந்தச் சம்பவத்தை எப்படிக் கையாளப்போகிறோமோ என்கிற குழப்பத்துடன் அந்த ஆசிரியர் சம்பவ இடத்தை நெருங்கினார். மாணவர்கள் சூழ்ந்திருந்த கூட்டத்துக்கு மத்தியில் முகத்தில் ரத்தம் வழிய நின்றுகொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவரைப் பார்த்ததும் ஆசிரியருக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

தன்னுடைய ஆசிரியரைக் கண்டதும் அடி வாங்கிய தீபக்கிற்கு ஆத்திரம் பொங்கியது. “நீங்கதானே டீச்சர் சட்டம் சொல்லிக் கொடுத்தீங்க. நான் இவனைத் திருப்பி அடிக்க மாட்டேன். சட்டப்படி பார்த்துக்கிறேன்” என்று அவன் பேசியதைக் கேட்ட ஆசிரியருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அருகில் சென்று அவரை ஆற்றுப்படுத்தி முதலுதவி செய்தார். அடித்தவர்களை எச்சரித்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பியவருக்குப் பதற்றம் குறையவில்லை.

சமூக அறிவியல் பயிற்றுவிக்கும் ஆசிரியரான அவர் தன்னுடைய ஓய்வு நேரத்தில் மாணவர்களோடு முக்கியச் சட்டங்கள் குறித்துப் பேசுவார். சில வழக்குகளை உதாரணமாகக் கூறி அதில் கிடைக்கப்பெற்ற தண்டனை குறித்தும், தீர்ப்பு விவரங்களைக் குறித்தும் உரையாடுவார். ஒருவன் தவறிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கும், முறையாக வாழ்வதற்கும் சட்டம் வழிசெய்யும் என்று நினைத்துத்தானே கற்றுக் கொடுத்தோம்; இப்படி அடி வாங்கி நிற்கிறானே என்கிற மனத்தாங்கல் ஆசிரியருக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது. எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் பிரச்சினை பெரிதாகி இரண்டு ஊருக்கான சண்டையாக மாறிப்போனது தெரியவந்தது.

விழிப்புணர்வு அவசியம்

பக்கத்து ஊரிலிருந்து இந்தப் பள்ளிக்குப் படிக்க வரும் பெண் பிள்ளைகளைக் கேலி செய்வது உள்ளூர் ஆண் பிள்ளைகளுக்கு வழக்கமான ஒன்றாக இருந்தது. அதைத் தட்டிக்கேட்ட தீபக்கை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அடுத்த நாள் பள்ளிக்கு வரும் வழியில் ஊர்த் தலைவர் ஆசிரியரைச் சந்தித்துப் பேசினார். காவல் துறையினர் அடித்த பையன்மீது எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்ய முற்பட்டபோது தீபக் அதைத் தடுத்து, “எஃப் ஐ ஆர் எல்லாம் வேண்டாம், அவன் வாழ்க்கை வீணாகிவிடும். எஃப்.ஐ.ஆர் போட்டா என்ன தண்டனை கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். அவனை எச்சரிக்கை செய்து மட்டும் விடுங்க” என்று விவரமாகச் சட்டம் பேசியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது என்று ஊர்த் தலைவர் கூறியதும் மகிழ்ச்சியுடன் ஆசிரியர் பள்ளியை நோக்கி நடந்தார்.

நடைமுறை வாழ்க்கைக்கு எது தேவையோ அதைக் கற்றுக்கொடுக்க வேண்டியது கல்விக்கூடங்களின் கடமை அல்லவா? இன்று பதின் பருவத்து மாணவர்கள் கொலை, கொள்ளை போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டுத் தண்டனைக்கு உள்படுத்தப்படுவது தினந்தோறும் செய்தியாகி விட்டது. பின்விளைவு தெரியாமல் ஏதோ உணர்வு வேகத்தில் செயல்படுவதே பல குற்றங்களுக்குக் காரணமாகி விடுகிறது.

பள்ளிகளில் சட்டக் கல்வி

குற்ற நடவடிக்கைகள் பெருகிக் கொண்டிருக்கக்கூடிய சமூகச் சூழலில் சட்டக் கல்வியும் மனித உரிமைக் கல்வியும் பள்ளியிலேயே கொடுக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் தேவை. சட்டமும் அதன் பிரிவுகளும் மட்டுமல்லாமல் மாதிரி வழக்குகளும் அவற்றில் வழங்கப்பட்ட தண்டனைகளும் மாணவர்களுக்குப் பாடப்பொருளாகக் கொடுக்கப்பட வேண்டும். போக்சோ சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம், வரதட்சிணை தடுப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களின் முக்கிய பிரிவுகளும் வழக்குகளும் அவற்றின் தீர்ப்புகளும் பாடமாக்கப்பட வேண்டும்.

முறையான சட்டக் கல்வியும் மனித உரிமைக் கல்வியும் மட்டுமே சிறார்களைக் குற்ற நடவடிக்கையில் இருந்து மீட்கும். சட்டங்களும் தண்டனைகளும் குறித்த விழிப்புணர்வு இன்மையே சிறார்களைப் பெரும் குற்ற நடவடிக்கையில் எளிமையாகப் பயன்படுத்த வழிவகை செய்கிறது. சட்டக் கல்வியும் மனித உரிமைக் கல்வியும் மட்டுமே இன்றைய மாணவர்களை எதிர்காலத்தில் சிறந்த குடிமகன்களாக உருவாக்கும். அதைச் செய்யத் தவறினால், கல்வி பெரும் கோணலான ஒன்றாக மாறிவிடும்.

- கட்டுரையாளர், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in