

நமது பழந்தமிழ் இலக்கியம், உலக அளவில் மிகப் பெரிது. இந்திய வரைபடங்களில் அசோகர் காலம் முதல் அக்பர் காலம் வரையான தமிழ் நிலப்பகுதி மட்டும் தனித்திருப்பதைப் பார்க்கலாம். பல துறை அறிவும் தமிழில் இருந்தது. சான்றுகள் -அன்றைய தமிழரின் உலக வணிகம்; கல்லணை, பெரியகோயிலின் பொறியியல்; ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி – கிழமைகளின் பெயர்களில் தெரியும் அறிவியல்; களரி முதலான போர்க்கருவி, நாற்படை நுட்பம்; மூலிகை மருத்துவம்; இவற்றின் அடிப்படையான எண் எழுத்தறிவு சார்ந்த இலக்கியங்கள்.
தமிழர் வளர்ந்தால் தமிழ் வளரும்
இடைக்கால இலக்கியம் பக்தி சார்ந்தே இருந்தது. பிற துறை அறிவுக்காக வேற்று மொழியினரைத் தமிழர் சார்ந்திருந்த நிலையும் பிற துறைசார் அறிஞர் தமிழைத் தீண்டாத நிலையும் ஏற்பட்டது. ‘அவர்கள் பிள்ளையாரைக் கரைத்து விடுவார்கள். இங்கிருப்பதோ கல்லுப் பிள்ளையார்’ (‘மானுட வாசிப்பு’ – பக்-27, வானவில் பதிப்பகம்) என்பது போலும் நுட்பமான சிந்தனைகளைத் தந்த பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன் போலும் பலதுறைசார் தமிழாசிரியர் மிகவும் குறைவு.
20ஆம் நூற்றாண்டின் இடையில் தனித்தமிழ், திராவிட இயக்க எழுச்சியால் ‘மணிப்பிரவாள’ நடை கட்டுக்குள் வந்தாலும், 1990 முதல் பன்னாட்டு அரசியல் பண்பாட்டுக் கலப்பால் ஆங்கில மோகமும் தமிழ் மீதான அலட்சியமும் தமிழரிடம்‘நுனிக்கொம்பர்’ ஏறியது. உயர் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் தமிழே தேவையில்லை எனும் இழிநிலை. மாணவர், பெற்றோர், ஆசிரியர் எனப் பல தரப்பினரும் தமிழைக் கைவிட, ஊடகங்களில் கலப்புத் தமிழ் ஊடுருவ, “என் மகனுக்குத் தமிழ்தான் ‘வீக்’”என்று பெருமை பேசித் திரிந்தனர் ‘மறத்தமிழர்’. பிறிதொரு பக்கம் வெளிநாடுவாழ் தமிழர் இணையத் தமிழோடு தாமும் வளர, உள்நாட்டுப் பண்டிதரோ திருச்சியில் புதுக்கவிதையை எதிர்த்து 1977இல் தீர்மானம் போட்டுத் தமிழ் ‘வளர்த்தனர்’.
நம்பிக்கை ஊட்டும் அரசு
2010இல் அன்றைய முதல்வர் கருணாநிதி, தமிழ்வழி மாணவர்க்கு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு முன்னுரிமை தர, பயிற்று மொழியே வயிற்று மொழியாக ஒரு வாசல் திறந்தது. 2023இல் ‘யார் வேண்டுமானாலும் அரசுப் பணிக்கு வரலாம்; ஆனால், அடிப்படைத் தமிழறிவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்’ என்கிற அரசு அறிவிப்பால் கல்லூரியில் மறந்த தமிழை வேலைக்காக இப்போது பிள்ளைகள் படிக்கின்றனர். இவை போதாது. தமிழ்ப் பாட நூல்கள் வெறும் இலக்கியமாக இல்லாமல் பலதுறை அறிவையும் தமிழில் தரும் நூல்களாக வரவேண்டும். நடைமுறைத் தமிழிலக்கணம் அதில் தரப்பட வேண்டும்.
தனியார் அரிச்சுவடியிலும் மக்கள் வழக்கிலும் இருக்கும் கிரந்த எழுத்துச் சொற்களில் ‘சில’வற்றைத் தமிழில் சேர்த்துக்கொள்ளலாம் என ‘தமிழ்நூல்’ எழுதிய தனித்தமிழறிஞர் த.சரவணத்தமிழன், ‘தென்னூல்’ எழுதிய பாவலர் ச.பாலசுந்தரம் இருவரும் தத்தம் இலக்கண நூல்களில் எழுதியுள்ளனர். ஆனால், ‘இலக்கண வரலாறு’ எழுதிய பெரும்புலவர் இரா.இளங்குமரன் மறுக்கிறார் (மணிவாசகர் பதிப்பகம் - பக் 440).
தமிழர் எப்போதும் புதியன விரும்பிகள். தமிழ் எண்களுக்கு மாற்றாக ரோம-அரபி எண்களை ஏற்றோம். தமிழ் எனும் சொல் இல்லாத குறள்தான் அதிக மொழிகளில் ஆக்கப் பெற்றது. ஏனெனில் தமிழ் எனில் வெறும் இலக்கியமல்ல; வாழ்க்கைமுறை, மனித சமத்துவம். நம் தலைமுறையின் நுனிமுனைக் கொழுந்தான பிள்ளைகள் இனிதாகத் தமிழ் கற்கத் திட்டமிடுவதே வாழ்வின் பெரும் கடன்.
‘இனிமைத் தமிழ்மொழி எமது’ - பாரதிதாசன்
(நிறைவடைந்தது)