

‘PM convoy take a detour’ என்பதற்குப் பொருள் என்ன?
‘Convoy’ என்பது அணிவகுத்துச் செல்லும் வாகனங்களைக் குறிக்கிறது. இப்படி அவை அணிவகுத்துச் செல்வதற்கான காரணம், அவற்றில் ஒரு வாகனத்தில் பயணிப்பவருக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு. போகும் இடத்துக்கு நேர்ப் பாதையில் செல்லாமல் சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். இது வழியில் யாரையோ சந்திப் பதற்காக அல்லது நேர்ப் பாதையில் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினையைத் தவிர்ப் பதற்காகவும் இருக் கலாம். இப்படிச் சுற்றிச் செல்வதை ‘detour’ என்பர். இது சற்று அதிகத் தொலைவு கொண்டதாகவும் அதிக நேரம் பிடிப்பதாகவும் இருக்கும் மாற்றுப்பாதை.
‘Bigotry’ என்றால் என்ன?
‘ஆழ்ந்த நம்பிக்கை’ என்பதைச் சிறிது எதிர்மறையான விதத்தில் சித்தரிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது அநியாய மான நம்பிக்கைகள், தனது விருப்பத்துக்கு எதிரான நம்பிக்கைகள் கொண்டிருப்பவரை வெறுப்பது போன்றவையும் இதில் அடங்கும். ‘Bigots’ என்பவர்களை ‘extremists’,‘fanatics’ என்றும் கூறலாம்.
‘Nod given’ என்பது எதைக் குறிக்கிறது?
‘Nod’ என்பது தலை அசைவைக் குறிக்கிறது. அதாவது மேலும் கீழுமான தலை அசைவு. ஏற்றுக் கொண்டதற்கான அடையாளம். ஒரு விஷயத்துக்கு ‘nod given’ என்றால் அது ‘ஏற்றுக்கொள்ளப்படுகிறது’ என்று பொருள். ‘I asked her if she liked him and she nodded.’ ‘The project was given a nod.’
| ‘She is charming’ என்றால்?அவளிடம் கவர்ந்திழுக்கக்கூடிய தன்மை இருக்கிறது என்று பொருள். மலைப்பாம்பு என்பது ஆங்கிலத்தில்?‘Python’ ஒருக்கால் என்பதை உணர்த்தும் ‘perhaps’ என்கிற சொல்லை எப்படி விவரிக்கலாம்?‘Possible but not certain’ |
‘Nocturnal animal’ என்றால்?
பகலில் தூங்கி இரவில் வேட்டை யாடும் விலங்குகள், பறவைகளை இப்படிக் குறிப்பிடுவார்கள். எடுத்துக்காட்டு - ஆந்தை. ஒரு மனிதனை ‘owl’ என்றோ ‘nocturnal person’ என்றோ விவரித்தால் அவரும் இப்படி இரவில் இயங்குபவராக இருப்பார். ‘Nocturnal’ (நாக்டர்னல்) என்பதன் எதிர்ச்சொல் ‘diurnal’ (டையர்னல்). இந்த வகை விலங்குகள் நேரெதிராக, அதாவது இரவில் தூங்கிப் பகலில் இயங்கும்.
‘Expensive’ என்பதற்கும் ‘luxurious’ என்பதற்கும் வேறுபாடு உண்டா?
‘Expensive’ என்பது ஒரு பொருளின் விலை,ஒருவரது பொருளாதார வசதி ஆகிய இரண்டுடனும் தொடர்பானது. ஒருவருக்கு ‘expensive’ ஆக இருக்கும்ஒரு பொருள், பணம் படைத்த மற்றவருக்கு அப்படி இல்லாமல் போகலாம்.
‘Luxury’ என்பது ஆடம்பரம். அதாவது தேவைக்கு அதிகமானது. ‘Expensive’ ஆன பொருள் நமக்குத் தேவைப்படலாம். ஆனால் ‘luxurious’ ஆன பொருள் அவசியம் என்பதில்லை. விலையின் அடிப்படையில் ‘Luxurious’ பொருள்கள் ‘expensive’ ஆகத்தான் இருக்கும்.
‘Sufferance’ என்பது ‘suffering’ என்கிற சொல்லின் சம வார்த்தையா?
இல்லை. ‘Suffering’ என்பது ‘verb’. ‘Sufferance’ என்பது ‘noun.’ ஆனால், அவை ஒரே வார்த்தையின் இரண்டு வடிவங்கள் அல்ல. ‘Suffering’ என்பது துன்பப்படுவது அல்லது வேதனையை அனுபவிப்பது. ‘As I am suffering from fever’ - நாம் அறிந்த, நாடறிந்த பயன்பாடு.
‘Sufferance’ என்பது வேதனையைத் தாங்குவது. ‘Her sufferance of hardship was remarkable’ என்றால் கடுமையான சூழலிலும் துன்பத்தைத் தாங்கும் அவளது இதயம் பாராட்டத்தக்கது என்று பொருள்.
(நிறைவடைந்தது)