

‘Crowbar’, ‘crowcatch’ ஆகிய சொற்களுக்கும் காகத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? - ‘Crowbar' என்பது கடப்பாரை. இதற்கும் காகத்துக்கும் (இரண்டுக்கும் கறுப்பு நிறம் என்பதைத் தவிர) எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘கால், கை பிடிப்பது’ என்பது ‘காக்கா பிடிப்பது’ என்றானதாகச் சிலர் கூறுவார்கள். அதாவது, காரியம் ஆக வேண்டும் என்பதற்காக உரியவர் மனம் மகிழும் வகையில் சில காரியங்களைச் செய்வது.
‘Crowcatch’ என்பது காக்கா பிடிப்பது என்பதாக நாமாக ஆங்கிலத்தில் மாற்றிக் கொண்ட ஒரு ‘சொல்’. ஆனால், ‘cow-catcher’ என்றொரு சொல் உண்டு. இது ரயிலில் என்ஜினுக்கு முன்னால் உள்ள ஓர் உலோகச் சட்டகம். இது ரயில் பாதையில் குறுக்கிடும் (கால்நடைகள் போன்ற) தடைகளை அழித்து ரயில் தடையின்றிச் செல்ல உதவுகிறது.
'Premier show’ என்பது என்ன? - ஒரு நாட்டின் ஆட்சித் தலைவரை ‘premier' என்பதுண்டு. ‘Premier' என்றால் முதன்மையான அல்லது உயர் சிறப்புடைய என்று அர்த்தம். ஒரு கலைப்படைப்பு (திரைப்படம் போன்றவை) பொதுவெளிக்கு வருவதற்கு முன்பாகவே சிலருக்காகத் திரையிடப்படும். அதைத்தான் ‘premier show’ என்பார்கள்.
‘Rap rock crossover album’ என்று படித்தேன். என்ன அர்த்தம்? - ‘Crossover’ என்பது மாறுபட்ட இரண்டின் இணைப்பு. ‘Rap rock crossover album’, ‘a jazz–classical crossover album’ போன்றவை இருவேறுபட்ட இசைகளை இணைத்து உருவாக்கிய இசை ஆல்பங்கள்.
‘Punchline’ என்பது என்ன? - ‘Punch’ என்றால் துளையிடுதல், குத்துதல். ‘Punchline’ என்பது ஒரு கதை அல்லது நகைச்சுவையின் இறுதிப் பகுதி. அதற்கு முன் அதில் இடம் பெற்றவற்றை அது வேடிக்கையானதாக ஆக்கிவிடும். ‘What’s the best thing about Switzerland?’ - ‘Well the flag’s a big plus’ (அந்த நாட்டுக்கொடியில் ஒரு பெரிய கூட்டல் குறி காணப்படும்).
இது ‘Punchline’. ‘Punch’ என்கிற பெயரில் லண்டன் வார இதழ் ஒன்று வெளிவந்ததுண்டு. 1841இல் தொடங்கப்பட்ட இந்த இதழ், அங்கதம், நகைச்சுவைக்குப் புகழ்பெற்றது. ‘கார்ட்டூன்’ என்கிற சொல் உருவாகக் காரணம் இந்த இதழ்தான் என்பார்கள்.
‘Can I come in?’, ‘May I come in?’ இரண்டில் எது சரி? - நுழையவிருக்கும் பாதை மிகக் குறுகலானதாகவும், நீங்கள் உடல் பருமனானவராகவும் இருந்தால் மட்டுமே ‘can I come in’ என்கிற சந்தேகம் உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், உள் நுழைவதற்கான அனுமதியை நீங்கள் யாரிடமோ கேட்கிறீர்கள் என்றால் ‘May I come in’ என்பதே பொருத்தமானது.
‘Great’ என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘greatful’ என்கிற சொல் இருக்கிறதா? - அதே போன்ற உச்சரிப்பு உள்ள ‘Grateful’ என்கிற சொல்தான் உண்டு. அதற்கு ‘நன்றியுள்ள’ என்று பொருள்.
சி|ப்|ஸ்
ஒரு பாட்டிலை வேக மாகக் குலுக்குவது என்பதை எப்படி விவரிக்கலாம்? - Jiggle
‘Majestic’ என்றால் அழகா? - கம்பீரம், கண்ணியம் கூடிய அழகு.
‘Simple’ என்பதன் சம வார்த்தைகள் எவை? - ‘Straight forward’, ‘easy’, ‘elementary’
- aruncharanya@gmail.com