

3000 ஆண்டுக்கு மேலாகப் பேச்சு, எழுத்து இரண்டிலும் மக்கள் மொழியாகத் தொடர்வது தமிழ். எழுத்து வடிவங்கள் மாறினாலும் பொதுவான பேச்சில் பெரிய மாற்றமில்லை. ஆக, கற்காலம் தோன்றித் தற்காலமும் நாம் பேசும் தமிழை, ‘வயது ஏற ஏற வனப்பேறும் அதிசயமே' என்று அப்துல் ரகுமான் வியக்கிறார்.
அவ்வப்போது தோன்றும், மறையும் சொற்களைப் பற்றியும், பாடும் எழுதும் பாவகைக்கு ஏற்பவும் இலக்கண நூல்களும் மாறி வந்துள்ளன. விருத்தங்கள் எல்லாம் அப்படி வந்தவையே. இப்போது இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் இலக்கணத்தை மீறிய புதுக்கவிதை வந்து, பலரையும் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. புதிய சிந்தனைகளில் இலக்கி யங்கள் தோன்ற, தமிழ்ச் சமூகம் ஒரு பாய்ச்சல் வேகத்துக்கு மாறி வருவதும் உண்மை.
மாறிவரும் இலக்கண மரபுகள்: தொல்காப்பியரே, ‘மொழி, காலத்தாலும் இடத்தாலும் மாறும்’ என்பதை ‘புறனடை’ இலக் கணமாகச் சொல்லிவிட்டார். ‘கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும் கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே’ எனும் நூற்பாவை இருவேறு இடங்களில் (602, 781) அமைத்த தொல்காப்பியர், கால மாற்றத்துக்கேற்ப மொழி மாற்றத்தை முன்மொழிகிறார்.
தொல்காப்பியர்க்கு, 1,500 ஆண்டு பின்வந்த நன்னூலாரும், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகை யினானே’ என வழிமொழிகிறார். தமிழை அழிக்க நினைப்போர்க்கு இரையாகி விடாமலும், வளர்க்க நினைப்போர்க்குச் சுமையாகி விடாமலும் புதிய இலக்கணத்தில் இரட்டைக் கவனம் தேவை.
புதிய இலக்கணத்தின் தேவை: ‘ச’ எழுத்து, ‘அ’, ‘ஐ’, ‘ஔ’ எனும் ‘மூ’ எழுத்துகளில், சொல்லின் முதலில் வருவதில்லை (ச, சை, சௌ எனத் தமிழ்ச் சொற்கள் தொடங்குவதில்லை) என்கிறது தொல்காப்பிய நூற்பா - 62. ஆனால், சங்க இலக்கியத்திலேயே ‘ச’ எழுத்து நூறு இடங்களில் மொழி முதலில் வந்திருப்பதைப் பட்டியலிடுகிறார். ‘சங்க இலக்கியம் தொடரடைவு’ செயலியை, தனது பேருழைப் பால் தொகுத்திருக்கும் மதுரை ப.பாண்டியராஜா. ஆக, தொல்காப்பியர் கருத்தும், பின்னர் மாறியிருப்பதைப் பார்க்கிறோம்.
1990களின் பின், பன்னாட்டுப் பண்பாடு பரவியபோதே, ‘புதிய மணிப்பிரவாள நடை’ ஆங்கில, கிரந்த எழுத்துகளில் பரவியது. பள்ளி மாணவர் பெயர்கள் 99 விழுக்காடு கிரந்தக் கலப்பில் உள்ளனவே? ஆக, பயன்பாடற்ற இலக்கணத்தைக் கைவிட்டு, புதிய இலக்கணம் தொகுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பேராசிரியர் பொற்கோ, தமிழண்ணல் போன்றோர் இதைப் பற்றிக் கவலையோடு சொல்லி யிருக்கிறார்கள்.
உரைநடையில் இலக்கணம் தேவை: தொல்காப்பியம் ‘உவமஇயல்’ என்றே தனித்துச் சிறப்பித்த உவமையை, நன்னூல் 12ஆகச் சுருக்கியது (நூற்பா-366). இவற்றி லும் ஒன்றுகூட இப்போது வழக்கில் இல்லை. மாறாக, ‘ஆட்டம்’ ‘மாதிரி’ ‘கணக்கு’ போலும் புதிய உவம உருபுகள் வந்துவிட்டன. (‘குரங்காட்டம் தாவுற’, ‘ஆந்த மாதிரி முழிக்கிற’, ‘கிளி கணக்கா பொண்ணு’) இவற்றுக்குப் புதிய இலக்கணம் தேவை. இது ‘ஒரு சோற்றுப் பதம்’தான்.
இலக்கணத்தைப் பழைய முறையில் (1) நூற்பா, (2) எடுத்துக்காட்டு, (3) பொருத்த/விளக்கம் என்று இல்லாமல், உரைநடைச் சொற்களைக் கொண்டே சுமையற்ற வகையில் மாணவர்க்குக் கற்றுத்தர வேண் டும். எளிமையும், நடைமுறைத் தெளிவும், வலிமையும் கொண்டதாக, புதிய இலக்கணம் ‘தமிழ் இனிது’ என மாற வேண்டும்.
(அடுத்த வாரம் நிறைவடையும்)
- muthunilavanpdk@gmail.com