வேலைவாய்ப்பு தரும் அறிவியல் படிப்புகள்

வேலைவாய்ப்பு தரும் அறிவியல் படிப்புகள்
Updated on
3 min read

பிளஸ் 2 முடித்த பெரும் பாலான மாணவர்களின் உயர்கல்வி தேர்வாக மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளே முதன்மையானதாக இருக்கும். ஆனால், அறிவியல் துறையில் வேலை வாய்ப்புகளைக் கொட்டிக் கொடுக்கும் பல படிப்புகள் உள்ளன. அந்தப் படிப்புகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

l கடல்சார் உயிரியலாளர் (Marine Biologist) - கடலைப் பார்த்து வியக்காதவர்களே இருக்க முடியாது. கடலைப் பற்றி படிக்கவும் படிப்பு உள்ளது. அதுதான், கடல்சார் பொறியியல் படிப்பு. பிளஸ் 2 முடித்த பிறகு இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். இதிலும் முதுநிலைப் படிப்புகளைப் படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

முதுகலையில் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய சிறப்புப் படிப்பைப் படிக்கலாம். இதைத் தவிர கடல் போக்குவரத்து, கடல் வணிகம், சுற்றுலா, கட்டுமானம், பராமரிப்பு போன்றவற்றை எடுத்துப் படிக்கலாம். இத்துறைகளில் வேலைவாய்ப்புகள் ஏராளம் உள்ளன. இத்துறை சார்ந்து படிக்க அதிக செலவாகும். சவாலான இத்துறையில் கைநிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

l தாவரவியலாளர் (Botanist) - உயிரியல், தாவரவியல் போன்ற படிப்புகளில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் தாவரவியலாளராகப் பணியாற்ற முடியும். இத்துறையைப் பொறுத்தவரை பட்டப் படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாலும், முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளைப் படிப்பது நலம் தரும். இதை மனதில் வைத்துக்கொண்டு உயிரியல், தாவரவியல் படிப்புகளைப் படிக்க வேண்டும். இயற்கையை நேசிப்பவர்களும் ஆராய்ச்சியில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர்களும் தாவரவியல் துறையில் உயரங்களை எட்டலாம்.

l வானிலை ஆய்வாளர் (Meteorologist) - நம் வாழ்க்கையில் வானிலை ஓர் அங்கமாகிவிட்டது. மழையோ புயலோ, அதீத வெயிலோ வானிலை சார்ந்த சந்தேகங்களுக்கு வானிலை மையத்தைத்தான் நாடி வருகிறோம். வானிலை சார்ந்து இயங்கும் துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

வானிலை ஆய்வாளராவதற்கு இயற்பிலை ஒரு பாடமாகக் கொண்ட ஏதாவது ஓர் அறிவியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதைத் தவிர கடலியியல் (Oceanography), வானிலையியல் (Meteorology) ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இத்துறையில் வேலை வாய்ப்புகள் உண்டு.

l அறிவியல் தகவல்தொடர்பாளர் (Science Communicator) - அறிவியல் தொடர்பான விளக்கங்கள் புரியாத புதிராக இருக்க வேண்டும் என்ப தில்லை. யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைதளங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் இந்தக் காலத்தில் அறிவியல் விளக்கங்களை எளிமையாகவும் சாமானியருக்குப் புரியும் வகையிலும் எடுத்துரைப்பவர்தான் அறிவியல் தகவல் தொடர்பாளர்கள்.

இந்தப் பணியில் சேர வேண்டுமென்றால், ஏதேனும் அறிவியல் தொடர்பான இளங்கலைப் படிப்பு அல்லது இதழியலில் இளங்கலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, அறிவியல் தரவுகளை எளிதாகச் சொல்லும் வகையில் சுவாரசியமாக விளக்கும் திறனும் இருக்க வேண்டும். இந்தத் திறன்கள் இருந்தால் இத்துறையில் ஜொலிக்கலாம்.

l உணவுத் தொழில்நுட்பவியலாளர் (Food Technologist) - ஆரோக்கியமாக உடலைப் பேணுவதற்குத் தரமான, பாதுகாப்பான, சமச்சீரான உணவு மிகவும் அவசியம். பெரும்பாலும் வீட்டில் சமைக்கப்படும் உணவு பாதுகாப்பானதாக இருந்தாலும், உணவகங்களில் சாப்பிடும் பழக்கம் இன்று அதிகரித்துவிட்டது. ஆனால், உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு குறித்து உறுதிசெய்வது உணவுப் பாதுகாப்பு அலுவலர்களின் பொறுப்பே.

இதற்கான தேர்வைத் தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணிகளுக்கான தேர்வு வாரியம் நடத்துகிறது. வேதியியல், உணவு அறிவியல், உணவு தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். எழுத்துத் தேர்வு / கணினி வழித் தேர்வின் மூலம் ஆள்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

புள்ளியியல் நிபுணர் (Statistician) - அறிவியல் மாற்றத்திலும், வளர்ச்சியிலும் எப்போதும் தரவுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இணையப் பயனர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பதால், தரவுகளின் எண்ணிக்கையும் மாறிக்கொண்டே இருக்கிறது. புள்ளியியல் என்பது தரவுகள் அடிப்படையிலான அறிவியல்.

மாறும் தொழில்நுட்பம், வளர்ச்சிக்கேற்ப சிறப்பான உத்தியோடு தரவுகளைக் கையாளப் புள்ளியல் நிபுணர்களின் தேவை அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. கணிதம், புள்ளியியல், தரவுப் பகுப்பாய்வு (Data analysis) போன்ற பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர் இத்துறையில் பணியாற்றலாம்.

மரபணுவியல் ஆலோசகர் (Genetic Counsellor) - மரபணு ஆராய்ச்சித் துறை இன்று வேகமாக வளரும் துறைகளில் ஒன்றாக உள்ளது. உயிரியல் தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி), மரபணுவியல் (Genetics) போன்ற தலைப்புகளில் மேற்படிப்பைப் படித்தவர்கள் மரபணு ஆராய்ச்சித் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.

மரபணு சார்ந்து இன்னும் தீர்க்கப்படாத புதிர்கள், சந்தேகங்கள் ஆகியவற்றுக்கு விடை காண்பதிலும், மரபணு ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளைத் தேடிச் செல்லவும் விருப்பமுள்ளவர்கள் இத்துறையைத் தேர்வுசெய்யலாம். ஆராய்ச்சிப் படிப்பை விரும்பாதவர்கள், படிப்பு முடித்தவுடன் மருத்துவத் துறை - மரபணுவியல் சேர்ந்த துறையில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in