

‘க்', ‘ச்' வருமா? வராதா? - தமிழ்ச் செய்தித் தாள்களின் முதன்மைச் செய்தி எதிலும் வல்லொற்று இருக்காது. பொருள் மாறா இடங்களில் ‘க்’, ‘ச்' வருமா என்று கேட்போரை அச்சுறுத்த வேண்டியதில்லை. பொருள் மாறுகிறதா என்று பார்த்தால் போதும்.
‘வல்லினம் மிகும் இடங்கள் - 34, மிகா இடங்கள் - 29’ என்று பட்டியல் தருகிறார், பொறிஞரும் தமிழ் அறிஞருமான திருச்சி கரு. பேச்சிமுத்து (நூல்: ‘பிழை தவிர்’-2018) ஆனால், எந்த இடத்தில் வேண்டும் என்பதில் புலவர்களிடம் இன்றும் கருத் தொற்றுமை இல்லை என்பதே உண்மை.
அதற்கான பட்டியலை எடுக்க, அரசுதான் முயற்சி செய்ய வேண்டும். அதுவரை ‘சந்தேகத்தின் பலனை வாதிக்குத் தரலாம்' என்னும் நீதிமன்ற நிலைக்கருத்து, தமிழுக்கும் பொருந்துமல்லவா?
பிறமொழிகளில் இல்லாத சிக்கலாக, இந்த ‘ஒற்றெழுத்து மிகுமா? மிகாதா?’ கேள்விக்கு அஞ்சியே இன்றைய இளைஞர் பலர் தமிழை விட்டு ‘தங்லீசு’க் குப் பாய்கின்றனர்.
தகுந்த தமிழ்ச் சொல் பயிற்சியும் இல்லை என்பதும் உண்மை. ஆங்கில மோகத்தின் அமோக விளைச்சலிது. இணையத்தில் ‘முக்காலே மூணுவீசம்' ‘தங்லீஷ்'ஆக, காரணம் இவை. எழுத்துப் பிழை பெரிய பாவமல்ல, தமிழில் எழுதுங்கள். ‘தங்லீஷ்’ எழுதுவதே தவிர்க்க வேண்டிய தமிழ்க் குற்றம்.
பெயர் வைப்பது பற்றி.. பிறர் ஒருவர் கண்டுபிடித்த பொருளைத் தமிழர் புழங்கும்போது, அதற்கான பெயர் அந்த மொழியில் இருப்பதை மாற்றி, எப்படித் தமிழில் தருவது என்று விவாதம் நடக்கிறது. ‘Facebook’-முகநூல்? என்பதுபோல.
இதில் அடிப்படையான கேள்விகள் இரண்டு. (1) பிறர் ஒருவர் கண்டுபிடித்த பொருள் வேண்டும், அவர் வைத்த பெயர் வேண்டாமா? (2) நாம் கண்டுபிடித்த பொருளை அவர்கள் மொழியில் பெய ரிட்டு அழைப்பதை நாம் ஒப்புவோமா? கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் கண்டுபிடிப்பு எதையும் தமிழர், தமிழில் சொந்தமாகத் தரவில்லையே, ஏன் என்பது தனி ஆய்வு.
அப்படியே தமிழில் பெயர் வைத்தாலும் ‘மகிழுந்து’ (Car) தனியாகவா வருகிறது? சிறுசிறு பகுதிப் பொருள்கள் (Spare Parts) எத்தனை? எப்படிச் சொல்வது? இது அலட்சியத்தால் வரும் வினா அல்ல. அடிப்படையில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும், சிந்தனையைத் தூண்டும் கல்விமுறை பற்றிய செயல் திட்டம் இல்லாமல் ‘சும்மா’ தமிழ்ப்படுத்துவதாக நினைத்துப் ‘படுத்துவது’ யாரை எனும் அக்கறை வினா.
பொதுவான அறிவியல் கண்டுபிடிப்பு களைத் தமிழில் தரலாம். அதிலும் விவாதங்கள் நடக்கின்றன. ‘Video’ - காண்பதும் கேட்பதுமாக இருப்பதால், ‘காணொலி’ என்றே தமிழறிஞர் செந்தலை ந.கவுதமன் உள்ளிட்ட பலரும், நானும் சொல்கிறோம். சில இதழாளர்கள் ‘காணொளி’ என்கிறார்கள். இரண்டும் புழக்கத்தில் வரட்டுமே? சரியானது நிலைக்கட்டும். இரண்டையும் விட்டுவிட்டு, ‘வீடியோ’ என இரண்டும் கெட்டானாக எழுத வேண்டாமே.
மொத்தத்தில் தமிழின் மீது அலட்சியம் வேண்டாம். எழுத்துப் பிழை பற்றி அஞ்சாமல், தமிழில் எழுத முயல வேண்டும். பழகப் பழகத் தேவையான திருத்தம் காண்பது எளிது. தமிழறிஞர்கள் மட்டும் இதைச் செய்துவிட முடியாது. மக்கள் பங்கேற்புடன் அரசுதான் செய்ய வேண்டும்.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com