இளங்கலைப் படிப்பை எப்படித் தேர்ந்தெடுப்பது?

இளங்கலைப் படிப்பை எப்படித் தேர்ந்தெடுப்பது?
Updated on
2 min read

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் வழக்கம் போல் மேற்படிப்பு வாய்ப்புகள் குறித்த பல்வேறு உரையாடல்கள், பல்வேறு துறை சார் நிபுணர்களின் கருத்துகள் பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களிலும் வலம் வருகின்றன.

குறிப்பாக, தற்போது ‘பயோ டெக்னாலஜி’, (உயிரி தொழில்நுட்பம்) ‘பயோ கெமிஸ்ட்ரி’ (உயிரி வேதியியல்), செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் சார்ந்த படிப்புகளைப் படித்தால் விரைவில் கை நிறையச் சம்பாதிக்கலாம், அதற்கு நல்ல எதிர்காலம் உண்டு என்கிற கருத்தைப் பார்க்க முடிகிறது.

உண்மையிலேயே இது சரிதானா? மாணவர்கள் இதுபோன்ற படிப்புகளை இளங்கலைப் படிப்பாகத் தேர்ந்தெடுக்கலாமா என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியது அவசியம்.

திறன் சார்ந்த படிப்புகள்: செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தரவு அறிவியல், போன்றவை திறன் சார்ந்த படிப்புகள். இன்று வேகமாக வளர்ந்து வரும் துறைகளும்கூட. ஆனால், ஒன்றை மறந்துவிடக் கூடாது. எப்போதுமே வரலாற்றில் ‘ஆகா ஓகோ’வென புகழப்பட்ட பல விஷயங்கள், வந்த வேகத்தில் மறைந்தும் போயிருக்கின்றன.

இது தொழில்நுட்பத்துறைக்கும் பொருந்தும். இன்று தேவைப்படும் ஒரு திறன் இன்னும் சில ஆண்டுகள் கழித்து பயனற்று, இன்னொரு புதிய திறன் தேவைப்படும் சூழல் உருவாகவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, திறன் சார்ந்த படிப்புகளை இளங்கலைப்படிப்பாகத் தேர்ந்தெடுக்கும்போது பல்வேறு கோணங்களில் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

எப்போதுமே இளங்கலைப் படிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் பரந்துபட்ட பார்வையை வழங்கக்கூடிய ஒரு படிப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் இளங் கலை முடித்து மேலே படிக்க விரும்பும்போது, பல்வேறு துறைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும்.

ஆனால், இளங்கலையிலேயே ஒருவர் தரவு அறிவியல் அல்லது செயற்கை நுண்ணறிவு சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, அவரின் துறை குறுகிவிடுகிறது. எதிர்காலத்தில் வேறு ஒரு துறை சார்ந்த மேல்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் குறைகிறது.

அறிவோடு திறன்: செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், இயந்திரக் கற்றல் போன்ற திறன்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளாதாரம், தடயவியல், வானியல், தொல்லியல், காலநிலை மாற்றம் எனப் பலதரப்பட்ட துறைகளில் நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு உதவியாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், இந்தத் திறன்களைக் கற்பதற்கு முன்னால், அந்தக் குறிப்பிட்ட அறிவியல் துறை சார்ந்த அடிப்படை அறிவைப் பெற வேண்டியது கட்டாயம். அறிவோடு சேர்ந்த திறன்தான் எப்போதுமே நிலைத்து நிற்கும்.

வெறுமனே திறன் சார்ந்த படிப்பு என்பது வாழ்நாள் முழுவதும் பொருளாதாரத்தை ஈட்ட உதவாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதிவேகமாக மாறிவரும் உலகச் சூழலில் அதே திறன் சார்ந்த படிப்பு முக்கியத்துவம் இழந்தும் போகலாம்.

இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பெற்றோரும், மாணவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தரவு அறிவியல் போன்ற படிப்புகளுக்கு நல்ல கணித அறிவும், கணினி அறிவும் தேவை. இவை இரண்டையும் முதலில் திறம்படக் கற்ற பிறகுதான், மேற்கொண்டு செயற்கை நுண்ணறிவு சார்ந்த படிப்புகளைப் படிக்க வேண்டும்.

மாணவர்கள் இளங்கலையில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணினியல் சார்ந்த ஏதேனும் ஒரு துறையில் படித்து, அத்துறை சார்ந்த அடிப்படை அறிவைப் பெற்றுவிட்டு, அதன்பிறகு இது மாதிரியான திறன் சார்ந்த படிப்புகளைப் படிக்க வேண்டும்.

‘இரட்டைப் படிப்பு’ முறை: செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன் படிப்புகளை இன்று இணையத்தில்கூடப் படிக்கலாம். ஆனால், இளங்கலை இயற்பியலையோ அல்லது எந்த அறிவியல் துறை சார்ந்த படிப்பையோ இணையத்தில் கற்றுக்கொள்ள முடியாது. இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த இளங்கலைப் படிப்புகளை, மாணவர்கள் வேறோர் இளங்கலைப் படிப்பைப் படித்துக்கொண்டே படிக்கவும் முடியும்.

சென்னை ஐ.ஐ.டி வழங்கும் இளங்கலை செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் படிப்பில்கூட இந்த ‘இரட்டைப் படிப்பு’ வசதி இருக்கிறது. அதேபோல் ‘பயோ கெமிஸ்ட்ரி’, ‘பயோ டெக்னாலஜி’ போன்ற படிப்புகளையும் இளங்கலையில் படிப்பதைவிட முதுகலைப் படிப்பாகவோ அல்லது ஆராய்ச்சிப் படிப்பாகவோ தேர்வு செய்து படிப்பது, சிறந்தது.

அப்போதுதான் எதிர்காலத்தில் அத்துறையில் நடக்கும் மாற்றத்துக்கேற்ப மாணவர்கள் தங்களை எளிதாகச் செழுமைப்படுத்திக்கொள்ள இயலும். வெறுமனே தற்போது உயர்த்திக் காட்டப்படும் வேலைவாய்ப்பையோ சம்பளத்தையோ மட்டுமே மனதில் வைத்து, மாணவர்கள் தங்களது எதிர்காலத்தைக் குறித்து முடிவெடுக்கக் கூடாது.

இன்று கல்வியும் ஒரு சந்தைப் பொருளாகிவிட்ட நிலையில், உலகளாவிய கல்விச் சந்தையில் நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப, போட்டி மிகுந்த சூழலில் நிலைத்து நிற்குமளவுக்கு, மாணவர்கள் எதிர்கால படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

- josephprabagar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in