தமிழ் இனிது 47: நிறுத்தக் குறிகளைத் தின்னும் புதிய மொழி!

தமிழ் இனிது 47: நிறுத்தக் குறிகளைத் தின்னும் புதிய மொழி!
Updated on
2 min read

துணையெழுத்துகள்: அனைத்து மொழிகளும் 'அ' எழுத்தையே முதன்மையாக உடையன. வாயைத் திறந்ததும் வரும் எழுத்து இதுவே என்பதுதான் காரணம். அ, இ, உ, எ, ஒ என்பன உயிரெழுத்தில் முதன்மை எழுத்துகள். ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்பன முதன்மை எழுத்து நீள்வதால் வரும் நெடில் எழுத்துகள். ஐ, ஔ என்பவற்றைக் கூர்ந்து பார்த்தால், இவை கூட்டெழுத்து என்பது புரியும்.

எழுத்துகளின் வரிவடிவம் மாறி வந்துள்ளதால், இக்காலத் துணையெழுத்துகளின் பெயரைத் தெரிந்துகொள்வது அவசியம். ‘அம்மா' – இதில் ‘அ' எழுத்து முதன்மை வடிவம். ‘ம்' மெய்யெழுத்து. ‘மா' எழுத்தில் ‘ம' முதன்மை வடிவம், அடுத்துள்ள ‘கால்' துணையெழுத்து.

துணைக்கால் – கா, சா; கொம்புக்கால் – கௌ, சௌ; பிறைச்சுழி – ஆ; ஒற்றைக் கொம்பு – கெ, தெ; இரட்டைக் கொம்பு – பே, வே; இணைக்கொம்பு – பை, வை; வளை கீற்று - கூ; சாய்வுக் கீற்று – ஏ; இறங்கு கீற்று – பு, சு; இறக்கு கீற்று கீழ் விலங்குச் சுழி – சூ, பூ; கீழ் விலங்கு – மு, கு; கீழ் விலங்குச் சுழி – மூ, ரூ; மேல் விலங்கு – கி, தி; மேல் விலங்குச் சுழி – கீ, சீ; மடக்கு ஏறு கீற்றுக் கால் – நூ, னூ, றூ முதலான எழுத்துகளைக் கொண்டு, கண்டு தெளிக.

நிறுத்தக் குறிகள்: எழுத்தைப் புரிந்துகொள்ளத் துணையெழுத்துப் போல, தொடரைப் புரிந்துகொள்ள நிறுத்தக் குறிகளை அறிவதும் அவசியம். இதற்கு, பல்வேறு நடைகளைக் கொண்ட கட்டுரை, கவிதை, சிறுகதைகளைப் படித்துப் பார்த்துத் தெளிவதே சரியான வழி. மற்றபடி நிறுத்தக் குறிகளைப் பற்றிக் கவலை கொண்டு, சொல்லவரும் சிந்தனையில் தடம் மாறிவிடவும், தேவையற்ற இடங்களில் பதிவிட்டுக் குழப்பிவிடவும் கூடாது.

நிறுத்தக் குறிகள் (Punctuation Marks) ஆங்கில வழி வரவு என்பதால் ஆங்கில வழக்குடன் சேர்த்துப் புரிந்து, பயன்படுத்துவது எளிது – இவை ஏராளமாக உள்ளன. முக்கியமானவற்றை மட்டும் எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.

l Comma (,) கால் புள்ளி - மொழி, கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்கள்.

l Semicolon (;) அரைப் புள்ளி - அறிஞர்தான்; சமூகப் பொறுப்பில்லையே

l Colon (:) முக்கால் புள்ளி / வரலாற்றுக் குறி – பின்வருமாறு:

l Full Stop (.) முற்றுப்புள்ளி - முடிந்தது.

l Exclamation (!) உணர்ச்சிக் குறி - அடடா, என்ன சிந்தனை! (பல்வேறு உணர்ச்சிகளைக் காட்டுவதால், ஆச்சரிய / வியப்புக் குறி என்பது தவறு)

ஆங்கிலத்தில் ‘Teachers’ என்றால் ‘ஆசிரியர் பலரின்’ என்பது பொருள். ‘Teacher’s எனில் ‘ஆசிரியர் ஒருவரின்’ என்று பொருள். ‘I am’ என்பதை ‘I’m’ என்று எழுதுவது போல, ஒற்றை மேற்கோள் குறி இட்டு, ‘சரி’ம்மா’ எனில், ’சரி அம்மா’ என்பதன் சுருக்கமாகப் புதியன புகுந்துள்ளது. தமிழில் மட்டுமல்ல, உலகத்தின் பற்பல மொழிகளின் நிறுத்தக் குறிகளைப் படக்குறிகள் (இமோஜி) எனும் புதிய மொழி தின்று வருகிறது. வலுத்தது நிலைக்கும். தமிழுக்கு வலிமை சேர்ப்பது நம் காலக் கடன்.

(தொடரும்)

- muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in