

விடுமுறையும் விடுப்பும்: அரசு அல்லது தனியார் நிறு வனம் முறையாக அறிவிப்பது ‘விடுமுறை’. விதிகளின்படி, தனது தேவைக்கு விண்ணப்பம் செய்வது ‘விடுப்பு’. விடுப்பு வேண்டுவோர், ‘விடுப்பு விண் ணப்பம்’ என்று எழுதுவதே சரி. ‘விடுமுறை விண்ணப்பம்’ என்று எழுதுவது தவறு. ஒருவரின் தனித் தேவைக்காக, அனைவருக்கும் விடுமுறை விடச் சொல்வது நியாயமாரே?
யதார்த்தமும் இயல்பும்: எதையும் ‘இயல்பாக’ ‘உண்மையாக’ எழுதுவதை, தமிழ் இயல்புக்கு மாறாக ‘எதார்த்தம்’ என்கிறார்கள். ‘எதார்த்தமாச் சொன்னதப் பிரிச்சி, பதார்த்தம் பார்த்துச் சண்டைக்கு வரலாமா?’ என்று, பேச்சிலும் இது புகுந்துவிட்டது. இதில் தமிழ் மரபின்படி வரக்கூடிய ‘எ’ எழுத்தையும்விட்டு, ‘யதார்த்தம்’ என்றே எழுதும் ‘இலக்கிய அறிவு ஜீவி’களும் உண்டு.
பெயர் சொல்லும் தமிழ் மரபு: தமிழறிஞர் ‘திரு.வி.க.’வில் உள்ள ‘திரு’ என்கிற சொல்லைப் பலரும் மரியாதைக்கானது என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் ‘திருவாரூர் விருத்தாசலனார் மகன் கலியாணசுந்தரன்’ என்பதே ‘திரு.வி.க.’வின் விரிவு. ‘சிறுப்பிட்டி வைரவநாதர் தாமோதரன்’ என்பது ‘சி.வை.தா.’வின் விரிவு. இவர், தமிழ் ஏட்டுச் சுவடிகளை அச்சுப் பதிப்பதில் புகழ்பெற்ற உ.வே.சா.வுக்கும் முன்னோடியானவர்.
சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ இருநூறு பெயர்களைப் பட்டியல் போடுகிறார் பேரா.ந.சஞ்சீவி. கோவூர் கிழார், ஒக்கூர் மாசாத்தியார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் - தந்தைக்கும் ஊருக்கும் தொழிலுக்கும் பெருமை சேர்த்த பேராண்மை புலவர்களின் பெயர்கள்.
(‘சங்க இலக்கிய ஆய்வும் அட்டவணையும்’– ந.சஞ்சீவி. தொகுப்பு – பேரா.காவ்யா சண்முக சுந்தரம்-2010) இடைக்காலத்தில் சாதிப்பெயர்கள் பின்னொட்டாக வந்தன. இதை எதிர்த்து, சாதிப் பெயர்களைத் தன் பெயரில் போட்டுக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிற பெரியாரின் 1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மான வேண்டுகோளை ஏற்று, திராவிடச் சிந்தனையாளர் பலரும் சாதிப் பெயர்களை விட்டனர்.
இப்போது தமிழர் பலரும் சாதிப் பெயரின்றித் தம் பெயரைக் குறிப்பிடுவது பொதுத் தன்மையானது. வட இந்திய - தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், திரைத்துறைக் கலைஞர், விளையாட்டு வீரர் பெயர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும்.
சாதிப் பின்னொட்டை விட்டபின், தந்தை பெயரின் முதல் எழுத்தை மட்டுமே முன்னெழுத்தாக(initial) இட்டனர். ஜெயலலிதா தம் ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை அரசாணை வெளியிட்ட தாலும், கருணாநிதி வலியுறுத்தி யதாலும் தாயின் முதல் எழுத்தையும் முன்னெழுத்தில் சேர்த்துத் தன் பெயர் எழுதி வருவது நடைமுறைக்கு வந்தது. இந்தச் சமத்துவத் தமிழ்ப் பெயர் மரபைப் பிறநாட்டினரும் பெருமையுடன் பின்பற்றலாம்.
எது சான்று? - அரசு வழங்கும் ‘தடையில்லாச் சான்று’ (No Objection Certificate- NOC) பற்றி அறிந்திருக்கலாம். இதைத் ‘தடையின்மைச் சான்று’ என்பதே சரியானது. இல்லாத தடையை இருப்பதாகச் சொல்லி அதற்குத் தடையில்லை என்பது சரியானதல்லவே. அரசு விளம்பரங்களில் சரியாக வந்தாலும் ‘ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு நிரந்தரமாகக் கொண்டு செல்லப்படும் வாகனங்களுக்கு, படிவம் 28இல் தடையில்லாச் சான்றிதழ் தேவை’ என்பது போலும் சிலவற்றை, அரசும் மக்களும் மாற்றியமைக்க வேண்டும்.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com