

‘Party Manifesto’ என்கிறார்களே, ‘manifesto’ என்பது கொள்கைகளா? - ‘Manifest’ என்பது ஒன்றை வெளிக்காட்டுவது அல்லது வெளிப்படையாக்குவது. ஒரு கட்சி பல்வேறு விஷயங்களில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதைத்தான் ‘party manifesto’ என்கிறார்கள். ‘Manifest’ என்பதன் சம வார்த்தைகளாக ‘evident’, ‘apparent' ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஓர் அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் ‘manifesto’. அதாவது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம்’ என்பதை எழுத்தாக வெளியிடும் அறிக்கை.
***
‘Rose is a rose is a rose is a rose’ என்று ஒரு எழுத்தாளர் தன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். எதனால் இப்படி? - இந்த வாக்கியம் கெர்ட்ரூட் எமிலி என்பவர் எழுதிய ‘சேக்ரட் எமிலி’ என்கிற கவிதையில் இடம் பெறுகிறது. இந்த வாக்கியம் கவிதையில் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பொருள் மாறுபடுகின்றன. (அதில் ‘ரோஸ்’ என்கிற கதா பாத்திரமும் உண்டு). ‘முதல் முறை ஒரு ரோஜாவைப் பார்க்கும்போது ஏற்படுகிற ஒரு பிம்பம், அதன் பிறகு எவ்வளவு முறை அந்த ரோஜாவைப் பார்த்தாலும் அந்தப் பிம்பம் மாறாது’ என்று இதற்கு ஒரு விளக்கம் கூறப்படுகிறது.
என்றாலும், கட்டுரைகளில் எழுத்தாளர்கள் இந்த வாக்கியத்தைப் பயன்படுத்தும்போது ‘என்ன பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா அதற்குரிய தன்மையுடன்தான் இருக்கும். மணம் பரப்பும். அழகாகக் காட்சியளிக்கும்’ என்கிற பொருளில் குறிப்பிடுகிறார்கள். ‘ரோமியோ அண்ட் ஜூலியட்’ நாடகத்தில் ஷேக்ஸ்பியர், ‘A rose by any other name would smell as sweet’ என்று கூறியிருக்கிறார்.
அது இந்த அர்த்தத்தில்தான். ‘தனது குடும்பத்தின் எதிரியாக விளங்கும் இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்தவனாகவே ரோமியோ இருந்தாலும், அதுபற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஏனென்றால், அவன் நல்லவன். அவனது பின்னணி என்னவாக இருந்தாலும், அவன் அழகானவன், என் மனதுக்கு உகந்தவன்’ என்கிறாள் ஜூலியட்.
***
‘Indelible Ink’ என்பது என்ன? - ‘அழிக்க முடியாத மசி’ என்பது இதன் பொருள். வாக்களிக்கச் செல்லும்போது ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் மசி. இரண்டிலிருந்து நான்கு வாரங்கள் வரை இது அழியாமல் இருக்கும். பிறகு புதிய தோல், நகம் வளரும்போது இந்த மசிப் பகுதி தானாகவே மறைந்துவிடும்.
***
‘Vindicate’ என்றால் பழி வாங்குதலா? - கிட்டத்தட்ட ஒரே எழுத்துகளைக் கொண்ட இரண்டு வார்த்தைகளினால் இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். ‘Vindictive’ என்பது லத்தீன் மொழியில் ‘பழி வாங்குதல்’ என்பதைக் குறிக்கிறது. ‘Revengeful’, ‘unforgiving’ போன்றவை இதன் சம வார்த்தைகள். ஆனால், அதே லத்தீன் மொழியில் ‘vindicare’ என்கிற சொல்லுக்குப் பொருள் வேறு. ‘ஒரு குற்றத்திலிருந்து விடுவித்துக்கொள்வது’ என்கிற அர்த்தத்தைத் தருகிறது. இதுதான் ‘vindicate’ என்று ஆகிவிட்டது. ‘Acquit’, ‘absolve’, ‘exonerate’ போன்றவை இதன் சம வார்த்தைகள்.
***
மயிலை ‘peacock’ என்கிறோம். கோழிகளைப் பொறுத்தவரை ‘cock’ என்பது ஆண் இனத்தை (சேவலை) மட்டும்தானே குறிக்கிறது? - எந்த மயிலாக இருந்தாலும் நம்மில் பலரும் அதை ‘peacock’ என்கிறோம். இது தவறு. மயிலின் பெயர் ‘peafowl’. ஆண் மயிலின் பெயர் ‘peacock’. பெண் மயிலின் பெயர் ‘peahen’.
சி|ப்|ஸ்
Pinnacle of career?’ என்றால்? - பணியில் ஆரோக்கியமான உயரம் அல்லது உச்சம்.
‘சிலம்பு’ என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்? - ‘Anklet’.
‘Sneakers’ என்பது எந்த வகை காலணி? - விளையாட்டுப் பயிற்சி அல்லது போட்டி களின்போது அணியப்படும் காலணி.
- aruncharanya@gmail.com