தமிழ் இனிது 44: தமிழை இப்படிப் ‘படுத்த’லாமா?

தமிழ் இனிது 44: தமிழை இப்படிப் ‘படுத்த’லாமா?
Updated on
2 min read

‘எண்ணும் எழுத்தும்' என்றால் என்ன? - ‘எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள்’ (குறள்-392). இதற்கு, எண் - கணிதம், எழுத்து -இலக்கியம் என்றே பலரும் விளக்குவர். ஆனால், ஆசிரியர் சி. இலக்குவனார், ‘எண் எனப்படும் அறிவியலும் (Science), எழுத்து எனப்படும் கலையும் (Arts), வையத்தில் வாழ்வார்க்கு இரண்டு கண்கள்’ என்று பொருள் சொல்லி வியக்க வைக்கிறார்.

உயர் கல்விப் பிரிவுகள் பலவாயினும், அடிப்படை இரண்டுதான். ஆனால், ‘Science’ அறிவியல் அல்லவா? அது எப்படி எண் கணக்கில் வரும் என்றால், அறிவியலும் கணக்கின் அடிப்படையில் வந்தது தானே? தண்ணீரை அறிவியல் ‘H2O’ என்கிறது. இரண்டு பங்கு ஹைட்ரஜன் ஒரு பங்கு ஆக்சிஜன்.

ஆக, அறிவியலின் அடிப்படை கணக்கே என்பதால் எண்ணறிவு அடிப்படையாகிறது. ‘எண்ணும் எழுத்தும்'தான் அடிப்படைக் கல்வி என்பது, இப்போது கலை, அறிவியல் (Arts and Science) கல்லூரிகளுக்கும் பொருந்தும் அல்லவா? இதுதான் குறள் நுட்பம்.

கண்டிப்பாகவா? கனிவாகவா? - கண்டிப்பாக, உறுதியாக, நிச்சயமாக எனும் சொற்களை ஒன்றாகவே நினைக்கிறோம். ஆனால், இட வேறுபாட்டால் பொருள் மாறு வதுண்டு. நண்பரிடம் ஓர் உதவி கேட்டபோது அவர், ‘கண்டிப்பாகச் செய்கிறேன்' என்றார். நான், ‘ஏன் கண்டிப்பாக? கனிவாகவே செய்யலாமே?’ என்றதும் அவர் சிரித்துவிட்டார்.

இந்த இடத்தில், உறுதியாக என்னும் பொருளில் அவர் சொன்னாலும், ‘கண்டிப்பு' எனும் சொல்லுக்குக் ‘கடிதல்' எனும் பொருளும் உண்டல்லவா? ‘குற்றங் கடிதல்’ என்றொரு அதிகாரமே திருக்குறளில் உள்ளதே. குழந்தைகள் வளர்ப்பில் தண்டிப்பை விட, கனிவும், தேவையெனில் கண்டிப்பும் தானே நல்ல பலனளிக்கும்?

படுத்துவது ஏன்? - ‘கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்’ (You are requested) என்பது ஆங்கில வழிச் சிந்தனை. இந்தச் செயப்பாட்டு வினையில் ஒரு அந்நியத்தனம் கலந்த அதிகாரத் தோரணை இருக்கும். உயர் அலுவலர்கள் தமக்குக் கீழுள்ள ஊழியரிடம் ‘கேட்டுக் கொள்கிறேன்' என்று சொல்ல முடியாத மேட்டிமைத்தனம், அடிமைத்தனத்தின் மறுபக்கம்.

எழுத்தர்களில் கீழ்நிலை, உயர்நிலை, ஏவலர் (பியூன்) - LDC, UDC, OA- எனும் பணி நிலைகளைப் பின்னர் முதுநிலை உதவியாளர் (Senior Asst), இளநிலை உதவியாளர் (Junior Asst), அலுவலக உதவியாளர் (OA) என்று மாற்றிய காரணமும் சரிதான். எனினும் செயப்பாட்டு வினை மாறவில்லை.

இப்போது, திருவிழா அல்லது மரண அறிவிப்புகளில், ‘கேட்டுக் கொள்ளப்படுகிறோம்’ என்கிறார்கள். தொலைக்காட்சியில் ஞாயிறு மதியம் நடக்கும் புகழ்பெற்ற விவாத அரங்கில் – ஏப்-14 அன்று - ‘பரப்பப்பட்டிருக்கிறது’, ‘தெரியப்படுகிறார்கள்’ என்றெல்லாம் வந்ததைப் பற்றி வருந்தினார், திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரி முதல்வர் முனைவர் வ.கிருஷ்ணன். தமிழர்களே, இப்படித் தமிழைப் ‘படுத்த’லாமா?

நன்பகலா? நண்பகலா? - வெக்கை அடிக்காத நல்ல பகல் ஆயினும், அது ‘நன்பகலாகாது’, ‘நண்பகல்’ என்றே சொல்ல வேண்டும். நள்-நடு. நள்ளிரவு என்னும் எழுத்து மொழி, பேச்சில் ‘நடுச் சாமம்’ ஆகிறது. யாமம்-சாமம்-இரவு. நள்ளிரவில் கூவுவது ‘சாமக் கோழி’ ஆனது. ‘நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்’ - நெடுநல்வாடை-186. ஆக, என்னதான் நல்ல இரவாக இருந்தாலும் அது ‘நல்லிரவு’ ஆகாது, ‘நள்ளிரவு’ என்பதே சரி.

(தொடரும்)

- muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in