

‘Greenhorns should be encouraged’ என்று ஒரு புத்தகத்தில் இருந்தது. ‘Greenhorn' என்பது எதைக் குறிக்கிறது? எதனால் அந்தப் பெயர்? - பல நூற்றாண்டுகளாகவே ஆங்கில மொழியில் ‘greenhorn’ என்கிற வார்த்தைப் பயன்பாட்டில் இருக்கிறது. ஒருவர் அனுபவம் இல்லாதவராகவோ, புதிதாக ஓர் அமைப்புக்கு வந்திருந்தாலோ அவரை இப்படிக் குறிப்பிடுவார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் ‘greenhorn’ என்பது இளம் காளையைக் குறித்தது.
அதன் கொம்புகள் முதிர்ச்சி அடைந்து இருக்காது. எனவே அவை ‘greenhorns’ என்று அழைக்கப்பட்டன. அதுதான் காலப்போக்கில் அனுபவமற்ற அமெச்சூர்களையும் ஏதுமறியாப் பேதைகளையும் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. குழந்தையை, வெகுளியானவரை ‘பச்சை மண்ணு’ என்று குறிப்பிடுவதுண்டு அல்லவா? (பச்சிளம் குழந்தை நினைவுக்கு வருகிறதா?).
‘I forgot my key at home’ என்று ஒருவர் பேசும்போது குறிப்பிட்டார். அவர் கூற வந்ததைப் புரிந்துகொள்ள முடிந்ததுதான்.என்றாலும் தமிழில் எப்படி ‘வீட்டில் என் சாவியை மறந்துவிட்டேன்’ என்பது தவறோ, அதுபோல இதுவும் தவறுதான்.
கவனியுங்கள், வீட்டில் சாவியை மறந்து விடுவது வேறு, வீட்டில் சாவியை மறந்து ‘வைத்துவிட்டு’ வருவது வேறு. ‘I forgot to take my key from home’ எனலாம். அல்லது ‘I left my keys at home’ என்று கூறலாம். வேண்டுமென்றால் ‘absent mindedly’ என்பதைச் சேர்த்துக்கொள்ளலாம்.
‘Grocer shop’, ‘grocery shop’ ஆகிய இரண் டையும் பெயர்ப் பலகைகளில் பார்க்கிறேன். இரண்டும் ஒன்றுதானா அல்லது வேறுபாடு உண்டா?‘ -
‘Grocer’ என்றால் மளிகைக் கடைக்காரர். பலசரக்கு வணிகர் என்றும் கூறலாம். ‘Grocery shop’ என்பதை ‘grocery’ என்று மட்டுமேகூட குறிப்பிடலாம். இது மளிகைக் கடையைக் குறிக்கிறது. எனவே ‘grocer’s shop’, ‘grocery shop’ ஆகிய இரண்டில் ஒன்று பெயர்ப் பலகைகளில் இடம்பெறலாம்.
‘Dynasty and heritage’ ஆகிய இரண்டுமே ஒரே பொருள் கொண்ட சொற்கள்தானா? - ஹர்ஷ சாம்ராஜ்யம், குப்த சாம்ராஜ்யம் எனும்போது ‘dynasty’ என்கிற சொல்லால் குறிப்பிடுகிறோம். அதாவது ஒரே வம்சாவளியைச் சேர்ந்த அரசர்கள் அடுத்தடுத்து அரசாளும்போது அது ‘dynasty.’ ‘Heritage’ என்பது வாழையடி வாழையாக வழங்கப்படுவது.
கலாச்சாரம், பண்பாடு. மரபின் வழியாக ஒருவர் அடைவது. எளிமையாகச் சொல்வதென்றால் ‘dynasty’ என்பது ஆட்சியாளர்கள் தொடர்பானது. ‘Heritage’ என்பது மரபு தொடர்பானது. ‘Inheritence’ என்பது உங்கள் வம்சத்தின் கடந்த தலைமுறைகளுக்கு உள்ள தன்மையை நீங்களும் பெறுவது.
‘Vestibule’ என்பதை ரயில் தொடர்பாக அறிந்திருக்கிறேன். இதன் சரியான அர்த்தம் என்ன? - பொதுவாக உள்ளுக்குள் இணைந்துள்ள (அதாவது ஒரு பெட்டிக்குள் ஏறினால் உட்புறமாகவே நடந்து வேறு பெட்டிக்குச் செல்லலாம் எனும்படியான) ரயிலை ‘vestibular train’ என்று பலர் குறிப்பிடுகிறார்கள்.
இதன் நிஜப் பொருள் ஒரு பெட்டியிலிருந்து இன்னொன்றுக்கு (உள்ளுக்குள்ளாகவே) செல்லும்போது அந்தப் பகுதி மேற்புறம் மூடப்பட்டிருக்கும் என்பதுதான். ஆனால் ஒரு பொது இடத்தை அல்லது வீட்டைப் பொறுத்தவரை ‘vestibule’ என்பது அதன் முக்கியப் பகுதிக்குள் செல்வதற்கு முன்னால் இருக்கும் ஒரு சிறிய பகுதி. மழைக் கோட்டுகள் போன்றவற்றை இந்தப் பகுதியில் கழற்றி வைப்பார்கள்.
‘Purse’, ‘Wallet’, ‘Pouch’ என்ன வித்தியாசம்? - ‘Purse’ என்பது பணம், சிறு பொருள்களை வைத்துக் கொள்வதற்கான சிறிய பை. ‘Wallet’ என்பது பணத்தோடு பிளாஸ்டிக் அட்டைகள் போன்றவற்றையும் வைத்துக்கொள்ளத் தோதான சிறிய பை. சிறிய தோல் பையை ‘pouch’ என்பார்கள். கங்காரு போன்ற சில விலங்குகள் தமது குட்டியைச் சுமந்து செல்லும் வயிற்றுப்பையையும் ‘pouch’ என்பதுண்டு.
சி|ப்|ஸ்
‘மூச்சிரைப்பது' என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறுவது? - ‘Panting’
‘Vagabond’ என்பது திட்டும் வார்த்தையா? - அதன் பொருள் ஊர்சுற்றி, நாடோடி (திட்டும் வார்த்தையா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்).
‘There were five hundreds people’ என்பது சரியா? - ‘Five hundred people’ என்பதே போதுமானது.
- aruncharanya@gmail.com