தமிழ் இனிது 44 - ‘ஈ’ ‘தா’ ‘கொடு’ சொற்களின் தமிழ்நுட்பம்

தமிழ் இனிது 44 - ‘ஈ’ ‘தா’ ‘கொடு’ சொற்களின் தமிழ்நுட்பம்
Updated on
2 min read

கொப்பூழா? தொப்புளா? - தாய் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உணவைக் கொண்டு செல்லும் கொடி தொப்புள் கொடி(Navel). ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளை, ‘தொப்புள் கொடி உறவுகள்’ என்பர். இதைப் பழந்தமிழ் ‘கொப்பூழ்’ என்கிறது. ‘நீள்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்’ (பெரும்பாண்-402).

கொப்பூழ் மருவி தொப்புழ்- தொப்பை –தொப்பு-உள்-கொடி –தொப்புள் கொடியானதோ! பாலூட்டிகள் அனைத்தும் தாயின் வயிற்றிலிருந்து வந்ததன் அடையாளக் குறியே தொப்புள்! மனிதர்க்கு மட்டுமே அது பளிச்சென்று தெரிகிறது.

பரிணாமமும் பரிமாணமும்: பரிணாம வளர்ச்சி பற்றி டார்வின் எழுதிய புகழ்பெற்ற நூல்- ‘உயிரினங்களின் தோற்றம்’ (1859). பரிணாமம் (Evolution) – படிப்படியாக வளர்ந்து மேம்படுவது. குரங்கிலிருந்து பரிணமித்ததே மனித இனம். தமிழில் இதைப் ‘படிவளர்ச்சி’ என்கிறார்கள்.

பரிமாணம் (Dimension) அளவு, கோணம். முப்பரிமாணம், எனும் சொல்லிலேயே அதன் விளக்கம் உள்ளது. முப்பரிமாண (3D) திரைப்படம் பார்க்க ஒரு சிறப்புக் கண்ணாடி அணிகிறோம் அல்லவா?

ஈ, தா, கொடு: ஆங்கிலத்தில் You எனும் சொல்லை, சொல்லும் முறையில்தான் மரியாதை அமையும். இதற்குத் தமிழில் நீ, நீர், நீயிர், நீவிர், நீங்கள் எனப் பல சொற்கள் உண்டு. இப்போது, ஒருமையில் ‘நீ’ யும், பன்மை மற்றும் மரியாதை ஒருமையில் ‘நீங்கள்’ என இரண்டு மட்டும் வழக்கில் உள்ளன. இதே போல ‘give’ எனும் ஆங்கிலச் சொல்லைத் தமிழில் மூன்று வகையாகச் சொல்லலாம். மூன்றும் மூன்று நுட்பமான பொருளில் வரும்!

ஈ-என்பது தாழ்மையுடன் கேட்பது. (இன்றைய தமிழில் “எனக்குக் கொஞ்சம் கொடுப்பா” எனக் கெஞ்சிக் கேட்பது).

தா-என்பது சம உரிமையுடன் கேட்பது (“மச்சான் உன் சட்டையைத் தா டா”).

கொடு-என்பது அதிகார இடத்தில் உள்ள வர்கள் அதிகாரமாகக் கேட்பது. “வரி கொடு” என்பதுபோல. இந்த விளக்கத்தை, தொல்காப்பியரை வழிமொழிந்து நன்னூலார் சொல்கிறார். “ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும், இழிந்தோன் ஒப்போன், மிக்கோன் இரப்புரை” (நன்னூல்-பொது-407) தமிழ்ச்சொற்கள் நுட்ப மானவை!

மக்கள் மொழி: இலக்கிய, இலக்கணங்களை மொழியறிஞர் உருவாக்குகின்றனர். ஆனால் மொழிகள் சாதாரண மக்களால்தான் வாழ்கின்றன! சாதாரண மக்களுக்கான இலக்கியங்கள் இருபதாம் நூற்றாண்டில்தான் எழுந்தன. பாஞ்சாலி சபதத்தை, “ஓரிண்டு வருஷத்து நூல் பழக்கமுள்ள, சாதாரண மக்களுக்காக” எழுதியதாக அதன் முன்னுரையில் சொல்கிறான் பாரதி.

பேச்சு மொழியில் பிறசொல் கலப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், நீரோடும் ஆற்றைத் தூர்வார மறந்தால் நாளடைவில் நீரோட்டமே தடைப்படும் அல்லவா? அதுபோல, மொழியைத் தூர்வார இலக்கணம் அவசியம். அறிஞர்கள் உருவாக்கும் சொற்களைவிட மக்களின் மொழி பொருத்தமாய் அமைந்து நிலைத்து விடுவதுண்டு!

ரயிலடி (தஞ்சை), இடைப் பலகாரம்-சிற்றுண்டி - (செட்டிநாட்டுப் பகுதி), மெய்யாலுமா? செம (சிறப்பு), சகோ! (சென்னை) போலும் புதிய சொற்களை மக்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனாலும் ‘ஜி’ போலும் பிறமொழி ஒட்டுச் சொற்களைத் தவிர்க்கலாம்.

மிதிவண்டி அழகான சொல்தான். அதற்குள் இருக்கும் முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறு பாகங்களில் ஒன்றுகூட தமிழில்லையே? சிந்தித்துப் பார்த்தால், புதிய கண்டுபிடிப்புகள் தமிழர்வழி வந்தால்தான் தமிழ்ப் பெயர்களை வைக்க முடியும் என்பது தனி ஆய்வுக்குரியது.

(தொடரும்)

- muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in