

அண்மையில் வெளியான முக்கியக் கல்வி நூல் களின் அறிமுகத்தோடு, ஏப்ரல் 23 உலகப் புத்தக நாளை வாசிப்புடன் கொண்டாடுவோம்.
கல்வித் துறை சார்ந்து கூர்மையான விமர்சனக் கட்டுரைகளை எழுதிவருபவர் மு.சிவகுருநாதன். ‘இந்து தமிழ் திசை’ உள்பட பல்வேறு இதழ்களில் அவர் எழுதிய 27 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கல்வி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு இடையிலான வேறூபாடுகள் தகர்ந்துவருவதாக நூலின் முன்னுரையில் கவலை தெரிவிக்கிறார்.
பொதுத் தேர்வு அழுத்தம், அரசுப் பள்ளிப் பாடநூல்களில் உள்ள பிரச்சினைகள், வினாத்தாள் குளறுபடிகள் என அன்றாடக் கல்வித் துறை பிரச்சினைகள் சார்ந்த கட்டுரைகள் மட்டுமல்லாமல், கல்வி குறித்த புரிதலையும் பார்வையையும் விசாலப்படுத்தும் கட்டுரைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.
கலையும் கல்விக் கனவுகள்
மு.சிவகுருநாதன்
பன்மை விலை: ரூ.200
தொடர்புக்கு: 9842402010
அரசுப் பள்ளி ஆசிரியர் சு.உமா மகேஸ்வரி வெவ்வேறு இதழ்களில் எழுதிய கல்வித் துறையின் செயல்பாடு தொடர்பான கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கவனப்படுத்துவதாக அவை அமைந்துள்ளன.
உயர்கல்வித் துறையின் சில நடவடிக்கைகள் தேசியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவதாக அமைந்திருப்பதை விமர்சிக்கும் கட்டுரைகளும் உள்ளன. பேராசிரியர் ஜவகர்நேசன் மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கான குழுவிலிருந்து வெளியேறியதை முற்போக்கு இயக்கங்கள் பெரிய அளவில் விவாதிக்காதது குறித்த தனது ஆதங்கத்தை ஒரு கட்டுரையில் பதிவு செய்கிறார்.
வஞ்சிக்கப்படும் பொதுக் கல்வி
சு.உமா மகேஸ்வரி
சுவடு வெளியீடு
விலை: ரூ.170
தொடர்புக்கு: 9551065500, 9791916936
அரசுத் தொடக்கப் பள்ளி ஆசிரியரான தேனி சுந்தர் குழந்தைகள் பற்றி எழுதிய நூல்கள் கவனம் பெற்றுள்ளன. இந்த நூலில் மாணவர்களுடன் வகுப்பறையிலும் வெளியி லும் அவருக்கு நேர்ந்த அனுபவங்களைக் கட்டுரை களாக வடித்திருக்கிறார். சுந்தரின் வகுப்பறையில் குழந்தைகளே முன் கை எடுத்து ஆசிரியரை வழிநடத்துகின்றனர்.
ஆசிரியரும் அதை மகிழ்ச்சியுடன் அனுமதிக்கிறார். அனைத்துக் கட்டுரைகளும் சுருக்கமாகவும் எளிமையான மொழியிலும் எழுதப்பட்டிருப்பது வாசிப்பை இணக்கமாக்குகிறது. இந்தக் கட்டுரைகளில் வெளிப்படும் மாணவர்களின் செயல்களும் பேச்சுகளும் சிரிக்கவும் நெகிழவும் சிந்திக்கவும் வைக்கின்றன. குழந்தைகளின் மனங்களைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.
மாணவர் மனசு
தேனி சுந்தர்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.70
தொடர்புக்கு: 044-24332924
தமிழ்நாட்டின் முக்கியமான கல்விச் செயற்பாட்டாளர் பேராசிரியர் வே.வசந்தி தேவி. கல்வித் துறை சார்ந்து ‘இந்து தமிழ் திசை’ உள்ளிட்ட இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் முதன்மையாக இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்டுரைகளில் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறையின் புதிய திட்டங்கள், அறிவுப்புகள் குறித்த பாராட்டுகளையும் அவற்றின் பயன்களை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் அளிக்கிறார்.
ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் முன்வைக்கிறார். நாங்குநேரி பட்டியல் சாதி மாணவர் சக மாணவர்களின் சாதிவெறித் தாக்குதலுக்கு உள்ளானது, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மதியின் மரணம் போன்ற துயரச் சம்பவங்களைத் தடுப்பதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறார். அரசுப் பள்ளிகளில் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி என்னும் இலக்கை நோக்கி அரசையும் சமூகத்தையும் தன் எழுத்துகளால் வழிநடத்துகிறார் வசந்திதேவி.
மக்கள் மயமாகும்
கல்வி
வே.வசந்தி தேவி
எதிர் வெளியீடு
விலை: ரூ.180
தொடர்புக்கு: 04259 226012, 99425 11302
சுதந்திர இந்தியாவில் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்று மகாத்மா காந்தியும் காந்தியைப் பின்பற்றியவர்களும் இணைந்து கலந்துரையாடி 1937இல் உருவாக்கிய கல்வித் திட்டம்தான் இந்த நூல். தச்சு வேலை, நெசவு, தோட்டக் கலை, பானை வனைதல் எனப் பல்வேறு பணிகளைக் கற்பிப்பதன் ஊடாகக் கணிதம், மொழிப்பாடம், சமூகவியல், அறிவியல் ஆகிய பாடங்களைக் கற்பிப்பதை உள்ளடக்கியது இந்தக் கல்வித் திட்டம். பின்னாளில் இந்தியாவின் குடியரசுத் தலைவரான ஜாஹிர் ஹுசேன் தலைமையில், ஜே.சி,குமரப்பா, வினோபா பாவே, அரிய நாயகம் உள்ளிட்ட சிலர் இணைந்து இந்தக் கல்வித் திட்டத்தை உருவாக்கினர்.
காந்தியக் கல்வி
ஜாஹிர் ஹுசேன்
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.225
தொடர்புக்கு: 044-4200 9603