

எனக்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தி ருக்கிறது. நிய மனக் கடிதத்தில், வேலையில் சேருவதற்கு முன் ‘NDA'வில் கையெழுத்திட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதென்ன ‘NDA?’ -
‘Non Disclosure Agreement.’ நிறுவனம் தொடர்பான முக்கியமான தகவல்களை வெளியே யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று நீங்கள் உறுதி அளிக்கிறீர்கள். இது சட்டப்படி செல்லக்கூடிய ஓர் ஒப்பந்தம்தான்.
ஒரு நிறுவனத்தின் முக்கியத் தகவல்களெல்லாம் போட்டி நிறுவனங்களுக்குக் கசிந்துவிட்டால் பாதகம் உண்டாகும். எனவே, நிறுவன ஊழியர்கள் ரகசியம் காக்க வேண்டும். இதற்கான உத்தரவாதம்தான் ‘Non-disclosure Agreement.’
***
‘அலாரம்' என்பது நமக்கு விழிப்பூட்டுகிறது. அப்படி இருக்க, ‘பயங்கரமான’ என்கிற பொருளில் ‘alarming' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்களே! - அலாரம் அடித்ததும் நீங்கள் மென்மையாகப் புன்னகை பூத்தபடி மகிழ்வுடன் கடிகாரத்தையோ திறன்பேசியையோ அமைதிப்படுத்து வீர்களோ என்னவோ.
ஆனால், பலருக்கும் அந்த ஒலியைக் கேட்டதும் தூக்கிவாரிப்போடும். அதனால்தான் பயங்கரமான, கிலியை ஏற்படுத்துகிற என்கிற பொருளில் ‘alarming’ என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
***
ஒருவரது தனித்தன்மையைக் குறிப்பிடுகையில் ‘He is more unique’ என்று ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார்.
இது தவறு. ‘Unique’ என்பது பிற யாரிடமும் அல்லது எதனிடமும் இல்லாத தனித்தன்மை. எனவே, அதை ஒப்பிட முடியாது. ‘He is unique’ என்பதே போதுமானது. ‘உன் கையெழுத்தை என்னால் எங்கிருந்தாலும் அடையாளம் காண முடியும். It is unique.’ ‘இது கிடைத்தற்கரிய வாய்ப்பு. ‘Do not miss this unique opportunity.’
***
‘Bite your tongue’ என்று ஓர் ஆங்கிலப் புதினத்தில் படித்தபோது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. எதையோ தவறாகக் கூறிவிட்டு, ‘நாக்கை கடித்துக் கொள்வது’ என்று தமிழில் கூறுவதை அப்படியே ஒத்திருக்கிறது என்பதால்தான் அந்த வியப்பு. நண்பரே, தமிழைப் பொறுத்தவரை அசந்தர்ப்ப மாக எதையோ கூறிவிட்டு அப்படிக் கூறிவிட்டதை உணரும்போது ‘நாக்கைக் கடித்துக்கொள்வோம்.'
ஆனால், ஆங்கிலத்தில் எதையும் தவறாகக் கூறி விடக் கூடாது என்பதற்காக முன்னதாகவே வலிந்து வாயை மூடிக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கையைத்தான் ‘Bite your tongue’ என்பார்கள். ஆக, முன்னது செய்த தவறை உணர்வது. இது தவறு நடைபெறாமல் தடுப்பது.
***
‘Bonafide certificate’ என்பது என்ன வகைச் சான்றிதழ்? இதுவும் ‘conduct certificate’ என்பதும் ஒன்றுதானா? - ‘Bonafide’ என்பது நன்னம்பிக்கை என்பதைக் குறிக்கிறது (in good faith). ‘He is the bonafide person’ என்றால், குறிப்பிட்ட அடையாளத்துக்கு உரியவன் அவன்தான் என்று பொருள்.
குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட வகுப்பில் ஒரு மாணவன் படிப்பை முடித்திருக்கிறான் என்பதற்கான சான்றாகக் கல்வி நிறுவனங்களால் ‘bonafide certificate' அளிக்கப்படுகிறது. சில நேரம் ஒரு நிறுவனமும் தன்னிடம் குறிப்பிட்ட காலத்தில் ஒருவர் பணிபுரிந்ததற்கு அடையாளமாக இந்தச் சான்றிதழை அளிக்கக்கூடும்.
பிற கல்வி நிறுவனங்களில் சேர, பணி விசா பெற, கல்விக் கடன் பெற, ஒரு புராஜெக்ட் செய்வதற்காக ஒரு நிறுவனத்தை அணுக, பிற நிறுவனங்கள் நடத்தும் கருத்தரங்குகளில் கலந்துகொள்ள, வெளி நாடுகளில் வங்கிக் கணக்குத் தொடங்க எனப் பல காரணங்களுக்கு ‘Bonafide certificate’ தேவைப்படும்.
‘Character certificate’ அல்லது ‘conduct certificate’ என்பது உங்கள் நடத்தையைக் குறிக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் ஒரு நிறுவனத்தில் இருந்தபோது உங்கள் நடத்தை திருப்திகரமாக இருந்தது (அல்லது அப்படி இல்லை) என்பதைக் குறிப்பிடும் சான்றிதழ் அது.
சி|ப்|ஸ்
‘Rebuke’, ‘Reproach' ஆகியவை ஒரே பொருள் கொண்டவையா? - ஆம். கண்டித்தல், நிந்தித்தல்.
‘Cumulative’ என்றால்? - படிப்படியாகப் பெருகுகிற.
‘Dislike’, ‘despise’ இரண்டும் ஒன்றா? - ‘Dislike’ என்பது விருப்பமின்மை. ‘Despise’ என்பது அதற்கும் ஒரு படி மேலே, வெறுப்பு எனலாம்.
- aruncharanya@gmail.com