

தமிழ்ப் பெயர்தானா? - நண்பர்கள் சிலர், ‘என் பெயர் தமிழ்தானா?’ என்று கேட்டனர். பொதுவாக ‘அன்’, ‘உ' என முடியும் ஆண் பெயரும் ‘அள்’, ‘ஐ' என முடியும் பெண் பெயரும் தமிழ்ப் பெயராக இருக்கும். ‘இ' இருபால் பெயரிலும் வரும். இதனால்தான் ‘பாரதி’, ‘மணி' என்பன இருபாலிலும் உள்ளன. இதைக் கேட்ட ஒருவர், ‘ஐயோ! நான் பெருமாள், இது, பெண் பெயரா?' என்று பதறிவிட்டார். இன்னொருவர் ‘நடிகை சிம்ரன் ஆண் பாலா?’ என்று என்னை மடக்கினார்.
தமிழில்தான் ‘அன்' ஆண்பால், ‘சிம்ரன்' தமிழ்ப் பெயரல்ல என்றதும் சற்றே நிம்மதியடைந்தார். கடவுள் பெயர்களுக்கும், ‘ஜ, ஸ்ரீ, ஷ, க்ஷ, உற, ஸ' கிரந்த எழுத்துப் பெயர்களுக்கும் தமிழ் விதி பொருந்தாது. ‘ஆ' என முடியும் வடமொழிப் பெயர்கள் தமிழாகும்போது ஆண் எனில் ‘அன்' எனவும் பெண் எனில் ‘ஐ' எனவும் மாறும். அதர்வா-அதர்வன், சீதா-சீதை போல. தமிழில் பெயர் வைக்கும் உணர்வு இப்போது பெருகி வருவது மகிழ்ச்சி. பெயர் வெறும் பெயரல்ல, பண்பாட்டின் அடையாளம். குழந்தைப் பெயர்கள், தமிழ்ப் பெயரெனில் நல்லதுதான். அதைவிட சாதி, மதம் காட்டாத பெயராக இருந்தால் மிகவும் நல்லது.
நோக்கும் பார்வையும்: ‘நோக்கம்’, ‘பார்வை' இரண்டும் ஒன்றுபோல் தோன்றினாலும் வேறு வேறு பொருள் தருவன. பயணத்தின்போது, நம் கையில் உள்ள செய்தித்தாளைக் கேட்பவர், 'ஒரு பார்வை (Glance) பாத்துட்டுத் தர்ரேன்' என்பது மேலோட்டமான பார்வை. காதலி யைக் காதலன் ஒரு நோக்கத்தோடு (Sight) பார்ப்பது நோக்கம். ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ - கம்பன். இதை, 'இவள் இருவித நோக்கம் கொண்டவள், ஒரு நோக்கு நோய் தரும், மற்றது அந்நோய்க்கே மருந்தாகும்’ (குறள்1091) என்பது கதைக் கவிதை.
ஒற்றுமையும் ஒருமையும்: ‘பன்மையில் ஒருமை’, ‘ஒற்று மையே வெற்றிக்கு வழி’ என்பதை அடிக்கடி கேட்கிறோம். ஒருமை, ஒற்றுமை இரண்டும் ஒன்றல்ல. போர்க்கால நிலையில் ‘இந்தியர் அனைவரும் ஒரு தாய் வயிற்று மக்கள்’ என்பது உணர்ச்சியூட்டும் ஒருமைப்பாடு. எல்லா நிலைக்கும் இது பொருந்தாது. மதம், மொழி, இனம், பண்பாடு கடந்து, ‘இந்திய உணர்வில்’ ஒருவருக்கு இன்னொருவர் உறவு சொல்லி வாழ்வது ஒற்றுமை.
இதுதான் இந்தியாவின் பெருமை. இலக்கணத்தில் சொன்னால், ஒருமை ‘தற் கிழமை' (என் கை) போல, பிரிக்க முடியாதது. ஒற்றுமை பிறிதின் கிழமை (என் பேனா) போல, தேவைக்கேற்பப் பிரிந்தும் சேர்ந்தும் இருக்கலாம். ‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி, ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து’ (குறள்-398). ‘ஒருதலைமுறையில் கற்கும் கல்வி, ஏழு தலைமுறைக்கும் உதவும்’ எனும் பொருளன்றி ஒற்றுமைப் பொருளல்ல.
காலமும் நேரமும்: அழைப்பிதழ்களில் நிகழ்ச்சி நடக்கும் நேரத்தை ‘காலம்: காலை 10 மணி’ என்று அச்சிடுகிறார்கள். இந்த இடத்தில் 'நேரம்' என்பதே சரியானது. காலம், ஆண்டின் பெரும்பிரிவு. நேரம், நாளின் சிறுபிரிவு. இதைப் பெரும்பொழுது, சிறுபொழுது என்பது தமிழ் நுட்பம். கடந்த (தமிழ்இனிது-42) கட்டுரையில் ‘இது தேர்தல் நேரம்’ என்று எழுதிவிட்டேன். ‘தேர்தல் காலம்’ என்பதே சரி. சுட்டிக்காட்டாத நண்பர்களுக்கு நன்றி. 'கால நேரம் பாப்பமா, கல்யாணத்த முடிப்பமா?’ என்பது திரைப்பாடல்.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com