

‘Truth’, ‘whole truth’, ‘nothing but truth’ என்று மூன்று விதமாக நீதிமன்றங்களில் சாட்சிகளிடம் உறுதிமொழி எடுப்பது எதற்காக?
கொலை செய்யப்பட்டவருக்கு அருகே ரத்தம் சொட்டும் கத்தியோடு ஜான் என்பவர் நிற்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். உடனடியாகச் சத்தமில்லாமல் அந்த இடத்தில் இருந்து ஓடி வந்து விட்டீர்கள். உங்களைப் பின்னர் நீதிமன்றத்தில் சாட்சியாக விசாரிக்கிறார்கள்.
‘ஜான் கொலை செய்ததைப் பார்த்தேன்’ என்று நீங்கள் சாட்சி அளித்தால் அது ‘truth’ அல்ல (கொலை நடந்ததை நீங்கள் பார்க்கவில்லை). ‘கொலை செய்யப்பட்டவருக்கு அருகே ஜான் இருப்பதை நான் பார்த்தேன்’ என்றால் அது ‘whole truth’ அல்ல. (ரத்தம் சொட்டும் கத்தியோடு அவர் நின்றிருந்ததை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்).
‘சடலத்துக்கு அருகே கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் நின்றிருந்த ஜான், என்னை நோக்கி கத்தியபடி எச்சரித்தான். நான் அங்கிருந்து ஓடிச் சென்று விட்டேன்’ என்றால், அது ‘nothing but truth’ அல்ல (ஜான் உங்களைப் பார்ப்பதற்கு முன் நழுவி விட்டீர்கள்).
ஆக, பொய்களில் மூன்று வகை உண்டு. முழுப் பொய், முக்கியமான தகவல்களை விட்டுவிடுவது, பொய்யான தகவல்களை உண்மையோடு சேர்த்துக் கூறுவது. இவற்றில் எதையும் செய்யாமல் தெளிவாக முழு உண்மையைக் கூற வேண்டும் என்பதற்காகத்தான் அந்த மூன்று வித உறுதிமொழிகள்.
‘Poet laureate’ என்பதில் ‘பொயட்’ என்றால் கவிஞர் என்று விளங்குகிறது. ‘Laureate’ என்பது விளங்கவில்லையே.
சாதனைக்காக அவருக்கு ஏதோ விருது வழங்கப்பட்டிருக்கிறது அல்லது வழங்கப்பட உள்ளது என்று பொருள். ‘A Nobel Laureate’ என்று படித்திருப்பீர்களே.
‘I always support the underdog team’ என்று ஒருவர் கூறுகிறார். அதென்ன ‘underdog?’
சமூகத்தில் மிகக் குறைவாகப் பணம் படைத்த, மிகக் குறைவான அதிகாரம் கொண்ட ஒருவரை ‘underdog’ என்பார்கள். அதாவது பொருளாதாரத்திலோ சமூகரீதியாகவோ பின்னடைவு கொண்டவர்கள்.
போட்டிகளின்போது ஒரு நபர் அல்லது ஒரு குழு மிக பலவீனமாக இருந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்கிற நிலை இருந்தால், அந்த நபர் அல்லது குழுவை ‘underdog’ என்பார்கள். ‘I always support the underdog team’ என்றால், ‘போட்டிகளின்போது நான் எப்போதும் பலவீனமான அணியைத்தான் ஆதரித்து ஊக்குவிப்பேன்’ என்று பொருள்.
ஒரு செய்தித்தாளின் தலைப்பில் ‘Row in Karnataka’ என்று எழுதியிருந்தது. ‘Row’ என்பது படகு தொடர்பானது அல்லவா?
துடுப்பு போடுவது, படகு ஓட்டுவது போன்றவற்றை ‘row’ என்கிற சொல்லால் விவரிப்பார்கள். ஆனால், ‘row’ என்பதை வேறு பல விதங்களிலும் பயன்படுத்தலாம். அடுத்தடுத்து உள்ள பொருள்கள், வீடுகளைக் குறிக்க இந்த வார்த்தை பயன்படுகிறது. ‘A row of books’, ‘A row of horses’, ‘Seats in front row’. இவை போல ‘A row of houses’ என்றால் பொதுவான பக்கச் சுவர்கள் கொண்ட, அடுத்தடுத்துள்ள வீடுகள் எனலாம்.
‘He has been voted Best Actor for four years in a row’ என்றால் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நான்கு ஆண்டு களாகச் ‘சிறந்த நடிக’ருக்கான விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று பொருள். அமைதியாக இல்லாமல் சத்தமாக ஒரு விவாதமோ சண்டையோ நடந்தால், அதையும் ‘row’ என்று சொல்லலாம். ‘A row in Karnataka’ என்பதில் உள்ள ‘row’ இந்தப் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சி|ப்|ஸ்
‘Quite a few’ என்றால்?
மிகுந்த அதிக எண்ணிக்கையில் (நம்புங்கள்!).
‘Absorb’ என்பதன் பெயர்ச்சொல் வடிவம் என்ன?
‘Absorption’ (‘absorbtion’ அல்ல)
‘கவளம்’, ‘பருக்கை’ போன்று மிகக் குறைவான உணவு அளவை ஆங்கி லத்தில் எப்படிக் குறிப்பிடலாம்?
‘Morsel’
- aruncharanya@gmail.com