

‘Folio’, ‘Portfolio' வேறுபாடு உண்டா?
ஒரு தாள் ஒரு முறை மடிக்கப்பட்டாலே அது ‘folio’ எனப்படுகிறது. ‘Ledger Folio’ என்றால் (கணக்கு பரிவர்த்தனைகளைக் குறித்துவைக்கப் பயன்படுவது) அது போன்ற தாள்கள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தில் உள்ள ஒரு பக்கம். ‘Portfolio’ என்பது ஆவணங்களை எடுத்துச்செல்லக் கையில் தூக்கிச் செல்லப்படும் பெரிய பெட்டியைக் குறிக்கும்.
‘Portfolio of work’ என்பது ஆவணங்களின் தொகுப்பு அல்லது கலைப் படைப்புகளின் தொகுப்பு. அரசு ஊழியர் ஒருவருக்கு அளிக்கப்படும் பொறுப்பான பதவியையும் ‘Portfolio’ என்ற சொல்லால் குறிப்பிடுவதுண்டு. ‘Defence portfolio’, ‘Foreign Affairs portfolio.’
‘Pro' என்பதன் எதிர்ச்சொல் என்ன? - எந்தவிதத்தில் ‘pro’ பயன்படுத்தப் படுகிறது என் பதைப் பொறுத்து இது மாறுபடும். ஒன்றுக்கு ஆதர வானவற்றை ‘pro' என்பார்கள். அப்போது எதிர்மறைக் கருத்துகளை ‘cons’ என்பார்கள். ‘Pros and Cons’-நன்மை தீமைகள்.
‘Anti’ என்பதும் ‘Pro’ என்பதற்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படும். ‘Pro globalization’ என்றால் உலகமயமாக்கலுக்கு ஆதரவு. ‘Anti globalization' என்றால் உலகமயமாக்கலுக்கு எதிர்ப்பு. ‘Professional’ என்பதன் சுருக்க மாகவும் ‘pro’ பயன்படுத்தப்படுகிறது. நாடகத்தில் நடிப்பதையே தொழிலாக ஒருவர் கொண்டிருக்கிறார் என்றால், அவர் ‘pro'.
அப்படி இல்லாமல் வேறு வேலை அல்லது தொழிலில் இருந்துகொண்டு நடிப்பதையும் செய்கிறார் என்றால், அவர் ‘அமெச்சூர்’ (amateur). நாடகம்தான் என்றில்லை, விளையாட்டுக்கும் இது பொருந்தும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஒருவர் ‘pro’ என்றால், அந்த விஷயத்தில் அவர் சிறந்து விளங்குபவர் என்று பொருள். ‘Expert’, ‘Veteran’ ஆகியவை அதன் சம வார்த்தைகள். ‘Novice’ என்பதை அதன் எதிர்ச்சொல்லாகக் கொள்ளலாம்.
‘Upside down’ என்பதை நல்ல விதத்தில் பயன்படுத்துவார்களா? எதிர்மறை அர்த்தத்திலா? இரண்டுமா? - ‘தலைகீழாக’ என்று இதற்கு பொருள். நிலைமை தலைகீழாக மாறியது என்பதைத் தமிழில் குறிப்பிடும்போது இரண்டு பொருளிலும் குறிப்பிடுகிறோம். அதாவது, இறைவன் அருளால் அந்த ஏழையின் நிலை தலைகீழாக மாறியது என்று நேர்மறையாகவும் குறிப்பிடுவோம். ஆனால், ஆங்கிலத்தில் எதிர்மறையாக மட்டும்தான் குறிப்பிடுகிறார்கள். ‘His imprisonment made his world upside down’.
ஒரு சொல்லைத் தலைகீழாகப் படித்தா லும் அதே உச்சரிப்பு கிடைக்குமென்றால் அதை ‘palindrome’ என்பார்கள். ‘Madam’, ‘Radar’, ‘Noon’, ‘Level’, ‘Racecar’ ஆகிய சொற்கள் இப்படித்தான். சொல் என்பதில்லை, வாக்கியமேகூட ‘Palindrome’ஆக இருக்க முடியும். இதோ சில எடுத்துக்காட்டுகள். ‘Madam, I’m Adam’, ‘A man, a plan, a canal, Panama’, ‘Nurse, save rare vases, run!’
தமிழில் ‘விகடகவி’, ‘தாத்தா’ போன்ற சில ‘Palindrome’ சொற்கள் உள்ளன. சொல்லப்போனால் ஒரு சினிமாப் பாடல் முழுவதுமே இப்படி ‘Palindrome’ சொற்களால் அமைந்திருக் கிறது. அதில் ‘மேகராகமே, மேள தாளமே, மாறுமா கைரேகை மாறுமா’ போன்ற சொற்கள் இடம்பெறுகின்றன.
‘Coffee table book’ என்கிறார் களே, அது எந்த வகை புத்தகம்? - அது பெரிதாக இருக்கும். கடின அட்டை கொண்டதாக இருக்கும். அதில் நிறையப் படங்கள் இருக்கும். ஆழமாகப் படிப்பதைவிட மேம்போக்காக அதன் பக்கங்களைப் புரட்டுவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். பலரும் படிக்கும்படியான ஓர் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். மேலே உள்ள நிபந்தனைகளைப் படித்ததும் உங்களுக்கு எந்த வகை நூல் மனதில் தோன்றுகிறதோ அதுதான் ‘Coffee table book’.
நேற்று வரை ஓர் அரசியல் கட்சியில் இருந்து, இன்று அந்தக் கட்சிக்கு நேர் எதிரான மற்றொரு கட்சியில் சேர்ந்தவரை ‘எதனால் இந்த 360 டிகிரி மாற்றம் என்று பார்ப்போம்’ என்கிற வகையில் கூறிவிட்டு, ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் அதை அலசத் தொடங்கினார்கள். அது தவறு.
‘360 டிகிரி மாற்றம்’ என்றால் ‘சிறிதும் மாற்றமில்லாத’ என்று பொருள். ஏனென்றால் ‘360 டிகிரி’ திரும்பினால் ஒரு முழுமையான வட்டம் நிறைவடைந்துவிடும். கிளம்பிய இடத்துக்கே வந்து விடுவீர்கள். அந்த சேனலில் ‘180 டிகிரி மாற்றம்’ என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
சி|ப்|ஸ்
‘Service’ என்றால் சேவை. ‘Disservice’ என்றால்?
கேடு, தீங்கு, பொல்லாமை.
‘Ultra’ என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?
மிக அதிக அளவில். ‘Extremely’. ‘Ultra-thin loudspeakers’, ‘Ultra-fast optic cable’, ‘Ultra-white’.
படிப்பதில் ‘மூழ்கிப் போவதை’ எப்படிக் கூறலாம்?
‘Engrossed in reading’
- aruncharanya@gmail.com