

‘பல்நோக்கு மருத்துவமனை’, சரியா? - தமிழ்நாடு அரசு, ‘ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை' என்று பெயர் வைத்துள்ளது. ஆனால், தனியார் பலர் ‘பல்நோக்கு மருத்துவமனை' என்று வைத்துள்ளனர். இதுதான் குழப்பம். ‘பல்நோக்குத் திட்டங்கள்' பற்றிய செய்திகளையும் பார்க்கலாம்.
பத்தாம் வகுப்பு புவியியல் பாட நூலில் ‘இந்தியா - பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்’ (பக்-169) என்றே உள்ளது. இது போல ‘Multi purpose Projects’, ‘Multi Speciality Hospital' பல உள்ளன. தமிழில் மட்டும் பல்நோக்கு ஏன் பல்லை நோக்க வேண்டும்? 'பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்' என்றால் குழப்பமே இல்லாமல் ‘பல்லை நோக்கும் ஆய்வாளர்’ என்று பொருள் வருமே. பிறகு, பல்மருத்துவர் என்னாவது?!
எனவே, ‘பலநோக்கு' என்பதை, பல வேறுபட்ட மருத்துவமும் செய்யக்கூடிய எனும் பொருளில், ‘பன்னோக்கு' என்பதே சரி. இன்னும் எளிமையாகப் புரிய வேண்டும் என்றால், ‘பல நோக்கு' என்று பிரித்துப் போடலாம். அல்லது மற்ற பல்வேறு அரசுத் துறைகளில் உள்ளது போல ‘ஒருங்கிணைந்த' எனும் சொல்லைப் பயன்படுத்தினால் கூடுதல் நலம்.
நோன்பு திறப்பா? துறப்பா? - இஃப்தார் எனில், ரமலான் மாத நோன்பு நோற்கும் இஸ்லாமியர், நோன்பு முடித்து மாலையில் அனைவரும் இணைந்து உண வருந்துவது. ஆனால், சுவரொட்டி சிலவற்றில் ‘நோன்பு துறப்பு’ என்றும் வேறு சிலவற்றில் ‘நோன்பு திறப்பு’ என்றும் போட்டிருப்பதுதான் குழப்பம்.
ஒரு நாள் உண்ணா நிலையை முடித்து, துறந்து, உண்பது எனில், தமிழில் ‘நோன்பு துறப்பு’ என்பதே சரி. பிறகு, ‘திறப்பு’ எப்படி வந்தது? ‘நோன்பு’ என்பதை வழக்கில் ‘நோம்பு’ என்கிறோம் அல்லவா? அப்படித்தான்! ‘நோன்பு துறப்பு’ என்பது எழுத்துத்தமிழ். ‘நோம்பு திறப்பு’ என்பது பேச்சுத்தமிழ். ‘நோம்புக் கஞ்சி’ குடித்தவர்களுக்குத்தான் தெரியும், அதன் தனிச் சுவை! மதம் கடந்த அன்பின் சுவை!
ஆமாவா? இல்லையா? - பேச்சு வழக்கில் இப்போது பலரும் பயன்படுத்தும் சொல் ‘ஆமா’ல்ல? என்பது! அதாவது ஆமா, இல்லை! இதன் பொருள் ஆமாம் என்பதா, இல்லை என்பதா என்று யாரும் குழம்புவதில்லை. அந்தச் சூழலில் அது தெளிவாகவே புரிந்துவிடும். இதில் ஆமா (ஆம்ஆம்), இல்லை எனும் இரண்டு சொற்களும் எதிர் எதிர்ச் சொற்கள்! அது எப்படி ஒரே தொடரில் இணைந்து வருகின்றன? அதுதான் பேச்சுத் தமிழின் பேரழகு!
‘அவனுக்கு எப்படி இது தெரிந்தது?’, ‘அவள் எப்படி இதை ஒத்துக்கொண்டாள்?’ என்பதுபோல் உரையாடலில், அவர்கள் முன்பு நினைத்திராத ஒன்று புதியதாகத் தெரிய வரும்போது, இப்படி வரும்.
ஆங்கிலத்தில் இரண்டு எதிர்ச்சொல் சேர்ந்தால் ஒரு நேர்ப்பொருள் (Two Negatives Make a positive) வருவதுபோல! அட, ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்! சொல்லுக்கான பொருள் அகரமுதலியில் இருந்தாலும், பயன்படுத்தும் சூழலில்தான் அது முழுமையாகப் புரியும். சூழல் புரியாமல் செய்வது எதுவும் தவறாகி விடுவதுபோல, சூழல் புரியாமல் எழுதுவதும், பேசுவதும்கூடத் தவறாகிவிடும்! அரசியலில் மட்டுமல்ல, பேச்சு வழக்கிலும்கூட இதெல்லாம் சகஜமப்பா!
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com