

தடியடியும் அடிதடியும் ‘மக்களிடையே அடிதடி, காவல் துறை தடியடி' என்னும் செய்தியை ஊடகங்களில் பார்க்கிறோம். ஒன்று போலவே இருந்தாலும் இரண்டு சொற்களுக்கும் வேறுபாடு உண்டு. 'தடியடி' (Lathi Charge) கூட்டத் தைக் கலைக்க, அரசால் திட்டமிட்டு நடத்தப்படுவது.
இதற்குக் காவல்துறை உயர் அலுவலரின் முன் அனுமதி தேவை. ‘அடிதடி' என்பது வேண்டாதவரைத் திட்ட மிடாமலே தாக்குவது அல்லது ஒரு குழுத் தலைவரால் திட்டமிட்டு நடத்தப்படுவது. அடிதடி, கலவரம் நடக்கும் இடத்தின் நிலவரம் அறிந்து காவல் துறை நடத்துவது தடியடி.
‘செல்வந்தர்’ வேண்டாம் செல்வம் உடையவர் ‘செல்வர்’. எனவேதான் தமிழர் பெயர்களில் ‘செல்வன்’, ‘செல்வி’, ‘தமிழ்ச்செல்வன்’, ‘கலைச் செல்வி’ பலர் உள்ளனர். ‘செல்வர்’ என்பதை, வடமொழியில் ‘தன்வந்தர்’ என்பர்.
அது, தனவந்தர்-செல்வந்தர் எனும் பொருளற்ற சொல்லாகி, நூறாண்டுக்கு முந்திய ‘மணிப் பிரவாள நடை’ காலத்தில், கலப்புத் தமிழாக நுழைந்துவிட்டது.
செல்வம் என்பதற்குத் தமிழில் வேறு பொருளும் உள்ளது. ‘பொருட் செல்வம், பண்புகள் இல்லாதவரிடமும் சேரும். அருள் என்னும் செல்வமே சிறந்த செல்வம்’ என்பது குறள் (241). ‘அருட்செல்வர்’, ‘கருணைச் செல்வி’, ‘குழந்தைச் செல்வம்’, ‘போதும் செல்வம்’ (கடைசிக் குழந்தையாக இருக்கட்டும் என்று வைக்க, அதன் பிறகும் குழந்தை பிறப்பதுண்டு) இப்படியான பொருள் விளக்கம் ‘தனவந்தர்’, ‘தன்வந்தர்’, ‘செல்வந்தர்’ எனும் சொற்களில் இல்லையே. எனவே, செல்வர் என்பதே நுட்பமான பொருள் கொண்ட இனிய தமிழ்ச் சொல். செல்வந்தர் எனும் கலப்படம் வேண்டாம்.
குறிப்பாக - சிறப்பாக: எதிர்ச்சொற்களைக் கையாளும்போது, நம்மை அறியாமலே சில தவறுகளைச் செய்கிறோம். காலை-மாலை, ஒளி-இருள் என்பது போல, ஆண்-பெண் சொற்களை எதிர்-எதிர்ச்சொல்லாகக் கருதுவது, ‘ஆணும் பெண்ணும் சமம்’ என்னும் இக்காலக் கருத்துக்கு எதிரான தவறல்லவா? இதுபோலவே, ‘பொதுவாக’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்லாக ‘குறிப்பாக’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர். ‘அவர் பொதுவாக எல்லாரிடமும் அன்பு காட்டுவார், குறிப்பாக என்னிடம் மிகுந்த அன்பு காட்டினார்’ என இரங்கல் தெரிவிக்கிறார்கள்.
இது தவறு. ‘வெளிப்படையாகச் சொல்ல முடியாத பலவற்றை, குறிப்பாக எனக்கு உணர்த்துவார்’ என்பதுதான் சரி. ‘குறிப்பு’ என்பதன் எதிர்ச்சொல் ‘வெளிப்படை’ என்பதே. அதே போல, ‘பொதுவாக’ என்பதன் எதிர்ச்சொல் ‘சிறப்பாக’ என்பதே. இதை உணர்ந்து, பொதுவாக அல்லாமல் சிறப்பாகப் பயன்படுத்துவது, வெளிப்படையாக எல்லார்க்கும் குறிப்பாகத் தமிழுக்கு நல்லது.
மன்னன் - நிலைபெற்றவனா? - ‘மன்னன்’ எனில் ‘நிலையானவன்’ என்பது பொருள். இதனால்தான் ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்றது புறநானூறு (186). எனினும், ‘முடி சார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆவர்’ என்பதை உணர்ந்து, ‘மக்களே உயிர், மன்னன் உடல்தான்’ என்று மன்னராட்சிக் காலத்திலேயே மக்களாட்சிக் கோலத்துக்கு புள்ளியிட்டார் கம்பர்.
உலகில் யாரும் ‘நிரந்தரமானவர்‘ இல்லை என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆக, தமிழ் மன்னன் உடலால் அல்ல, புகழால் நிலைத்தவன் என்றே புரிந்துகொள்ள வேண்டும். ‘மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே’ (புறநா-165).
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com