

எண்களை ஆங்கிலத்தில் பயன் படுத்தும்போது எப்போது ஆங்கிலச் சொல்லாகவும், எப்போது எண்ணாகவும் பயன்படுத்த வேண்டும்? - பொதுவாகச் சிறிய எண்களை (ஒன்றிலிருந்து ஒன்பது வரை) எழுதும்போது ஆங்கிலத்திலும், பெரிய எண்களை எண்ணாகவும் எழுத வேண்டும். ‘He had three pens’, ‘He had 22 pens’. தேதிகள் (சிறியதோ பெரியதோ எதுவாக இருந்தாலும் எண்ணில் எழுதுவது வழக்கம்) ‘February 2’, ‘30th May’. மிகப்பெரிய எண் என்றால் இரண்டும் கலந்து எழுதுவதுண்டு. ‘The sale was 80 million’. தோராயமான எண்கள் என்றால் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதுவார்கள். ‘His first hundred days in the office was wonderful’. ‘He arrived about thirty days ago’.
1=3, 2=3, 4=4, 5=4, 6=3, 7=5, 8=5, 9=4, 10=3, 11=?, 12=? விடையைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இந்தப் பகுதிக்கு இப்படி ஒரு கேள்வி வந்தது, கொஞ்சம் வியப்பாக இருந்தது. என்றாலும் இது ஆங்கிலம் தொடர்பான ஒரு கணிதக் கேள்வி என்பது பிறகு புரிந்தது. இந்த 'க்ளூ’வை வைத்துக்கொண்டு நீங்களும் கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள்.
‘Vegetable’ என்கிற சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும்? - ‘வெஜிடபிள்’ என்று பலரும் குறிப்பிடு கிறார்கள். ஆனால், அந்தச் சொல்லை ‘வெஜ்டபுல்’ என்றுதான் உச்சரிக்க வேண்டும். சில ‘vegetables’இன் ஆங்கிலப் பெயர்கள் குறித்து அறிந்துகொள்வோமே. பீன்ஸ், அவரை, கொத்தவரை இந்த மூன்றையும் ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடுவார்கள் என்பது தெரியுமா? பீன்ஸை ‘french beans’ என்றும் அவரைக்காயை ‘flat beans’ என்றும் கொத்தவரங்காயை ‘cluster beans’ என்றும் குறிப்பிடுவார்கள்.
நமக்கு நன்கு அறிமுகமான உணவு பொருள்கள்தாம் இவை. ‘Amaranth leaves’ – முளைக்கீரை; ‘Chayote’ - பெங்களூரு கத்தரிக்காய், செளசெள; ‘Eggplant’ – கத்தரிக்காய்; ‘Capsicum’ – குடைமிளகாய்; ‘Elephant yam’ – சேனைக்கிழங்கு; ‘Wonder berry’ – மணத்தக்காளி; ‘Bottle gourd’ – சுரைக்காய்; ‘Asafoetida’ – பெருங்காயம்; ‘Curry leaves’ – கறிவேப்பிலை; ‘Colocasia’ – சேப்பங்கிழங்கு; ‘Coriander’ - கொத்துமல்லி
கடிதத்தில் கையெழுத்திட்ட பின் அதற்கும் கீழ் ‘P.S’ என்று குறிப்பிட்டு வாக்கியங்களைச் சிலர் எழுதுகிறார்கள். ‘P.S’ என்பதை ‘Post Script’ என்று புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, கடிதம் எழுதிய பிறகு சேர்க்கும் பகுதி. சிலர், கடிதம் எழுதி முடித்த பிறகு அதற்குக் கீழே ‘N.B’ என்று குறிப்பிட்டு, சில வாக்கியங்களை எழுதுகிறார்களே, அதற்கு என்ன பொருள்?
‘Nota bene’ என்பதன் சுருக்கம்தான் ‘N.B’. லத்தீன் மொழியில் ‘nota bene’ என்றால் ‘இதை முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவும்’ என்று பொருள். எனவே, ‘N.B’ என்பதில் தொடரும் செய்தி நன்கு கவனிக்கப்பட வேண்டியது. ‘P.S’ என்பது முக்கியமானதாகவும் இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம்.
| ஆங்கில - கணிதக் கேள்விக்கான விடை இது. ஒவ்வோர் எண்ணையும் ஆங்கிலத்தில் எழுதினால், எத்தனை எழுத்துகள் வருகின்றனவே அதுதான் விடை. ‘One’, ‘Two’ ஆகிய ஒவ்வொரு சொல்லிலும் உள்ள எழுத்துகள் மூன்று. எனவே, 1=3, 2=3. ‘Four’, ‘Five’ ஒவ்வொரு சொல்லிலும் உள்ள எழுத்துகள் நான்கு. எனவே, 4=4, 5=4. இதே தர்க்கத்தில் யோசித்தால் 11=6, 12=6. ஏனென்றால், ‘Eleven’, ‘Twelve’ ஆகிய ஒவ்வொரு சொல்லிலும் உள்ள எழுத்துகள் ஆறு. |
சி|ப்|ஸ்
# ‘துரோகம்’ என்பதை ஆங்கிலத் தில் எப்படிக் குறிக்கலாம்? - ‘Betrayal’, ‘treachery’
# ‘Determine’ என்பதை எப்படி உச்சரிக்க வேண்டும்? - ‘டிடெர்மின்' (டிடர்மைன் அல்ல)
# ‘Processed food’ என்றால்? - பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்.
- aruncharanya@gmail.com