

மார்ச் மாதம் என்றாலே தேர்வுகள்தாம் நினைவுக்கு வரும். தேர்வு என்பது மாணவர்கள் தாங்கள் பெற்ற அறிவை அளக்கும் ஓர் அளவுகோல். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாணவர்களை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் ஒரு வழியாகவே தேர்வுகள் கருதப்படுகின்றன.
குறிப்பாகப் பெற்றோருக்குத் தங்கள் பிள்ளைகளின் மதிப்பெண்கள் மரியாதை தரக்கூடிய ஒரு விஷயமாக மாறியுள்ளது. பிள்ளைகளின் மதிப்பெண்களால் தங்கள் பெருமை கூடும் எனப் பெற்றோர் நினைக்கின்றனர்.
தேர்வு முடிவுகள் வந்தவுடன் உறவினர்கள் முதல் நண்பர்கள் வரை மதிப்பெண்கள் பற்றிக் கேட்பது வழக்கமாக ஆகிவிட்டது. இது பிள்ளைகளை உளவியல் ரீதியாகப் பாதிக்கும்.
பெற்றோரின் திணிப்பு: பெற்றோரின் திணிப்பும் ஆசையும் எதிர்பார்ப்பும் பிள்ளைகளை எதிர்மறையாகச் சிந்திக்க வைத்துவிடுகிறது. பிள்ளைகள் தங்கள் அருகில், கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும், பல கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உண்டு, உறைவிடப் பள்ளியில் சேர்த்து அவர்களை ஓர் இயந்திரம் போல் மாற்றுகின்றனர்.
மருத்துவராக்க வேண்டும் என்கிற நோக்கில் நீட் போன்ற பயிற்சி வகுப்புகளுக்கும் பல லட்சங்களைக் கட்டிப் படிக்க வைக்கின்றனர். இதுதான் உனது வாழ்க்கை, இதைப் படித்தால்தான் நீ முன்னேற முடியும் என்று பிள்ளைகள் மீது திணிக்கப்படும்போது அவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு எது வாழ்க்கை என்பதை அறியாமல் புத்தகத்துக்குள்ளேயே தங்களைப் புதைத்துக் கொள்கின்றனர்.
பெற்றோரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் போய்விடுவோமோ என நினைத்து பிள்ளைகள் மனக்கவலை அடைகின்றனர். அவர்களின் கழுத்தைத் தேர்வுக் கயிறுகள் இறுக்குகின்றன.
வேண்டும் ஆலோசனைகள்: வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கிறது. ஒரு குறுகிய பாதைதான் வாழ்க்கை என்று நினைக்கக் கூடாது என்பதை நாம் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். பெற்றோருக்கும் ஆலோசனைகளை வழங்க அரசு முன்னெடுக்க வேண்டும். குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி எதிர்காலத்தில் ‘நீ இதுதான் ஆக வேண்டும்’ என்கிற எண்ணத்தைப் பெற்றோர் கைவிட வேண்டும். உலகில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
அந்த வாய்ப்புகளையெல்லாம் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். அதற்கு பெற்றோருக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் அரசு வழங்க வேண்டும். காப்பி அடித்த மாணவர்களுக்குத் தண்டனை கொடுப்பதும் அவர்களைப் பள்ளியை விட்டு நீக்குவதும் இன்னமும் சில இடங்களில் நடைபெறுகிறது. தவறு செய்யும் மாணவர்களின் மனநிலையை மாற்ற வேண்டுமே தவிர, அவர்களைக் குற்ற உணர்வுக்குள்ளாக்கி தவறான வழிக்குத் தள்ளுவது தடுக்கப்பட வேண்டும்.
- கட்டுரையாளர், அரசுப் பள்ளி ஆசிரியர், செங்கல்பட்டு.