

சென்னை இந்தியத் தொழில்நுட்ப கழக (ஐஐடி) வளாகத்தில் அண்மையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் 60-க்கும் மேற்பட்ட மாணவக் குழுக்கள் தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தின. ‘வளங்குன்றா வளர்ச்சிக்கான ஸ்டார்ட்-அப் தீர்வுகள்’ என்கிற தலைப்பின் கீழ் மாணவர்கள் தங்களுடைய திட்டங் களை உருவாக்கியிருந்தனர்.
சூரிய மின் ஆற்றலில் இயங்கும் சைக்கிள் முதல் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் இயங்கும் இயந்திரம் வரை பல்வேறு படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
அறிவியல் ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வழிகாட்டவும் சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்களின் ‘பிஏஎல்எஸ்’ எனும் அமைப்பு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
அறிவியலில் வெவ்வேறு துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய இந்த அமைப்பு, தென்னிந்தியாவின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆர்வமுள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கி, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வழிகாட்டுகிறது.
பெண்கள் அணி: பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைப் பல நேரத்தில் தடுக்க முடிவதில்லை. காணாமல் போகும் குழந்தைகளை இடரிலிருந்து மீட்பது பெரும் சவாலான காரியமாக உள்ளது. சமூகத்தில் பேசுபொருளாக இருக்கும் குழந்தைக் கடத்தலைத் தடுப்பதற்கான ‘பெல்ட் டிராக்கர்’ கருவியைத் தயாரித்திருந்த திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மகளிர் குழு கவனத்தை ஈர்த்தது.
இத்திட்டம் குறித்து மாணவி பவதாரணி பேசினார். “நாட்டில் குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதைத் தடுக்க, குழந்தைகளுக்குச் சில முன்னெச்சரிக்கை செயல்களைக் கற்றுத் தந்தாலும்கூட, தவிர்க்க முடியாத சில சூழலில் தொழில்நுட்பம் கைகொடுக்கும். குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘ஜிபிஎஸ்’ பொருந்திய பாதுகாப்பு கருவிகள் சில ஏற்கெனவே இருக்கின்றன. இருந்தாலும் ‘பெல்ட்’ டிசைனில் இந்தக் கருவியை வடிவமைத்துள்ளோம்.
இந்தக் கருவியைக் குழந்தைகள் சாதாரண ‘பெல்ட்’ போல அணியலாம். இதில் ‘ஜிபிஎஸ்’ மட்டுமல்ல, ஒலியுடன் காணொளியைப் பதிவு செய்யக்கூடிய கேமரா, ‘அலெர்ட்’ பொத்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தக் கருவியின் செயல்பாடுகளைப் பெற்றோர் அவர்களது திறன்பேசி மூலம் ‘டிராக்’ செய்யலாம்.
குழந்தை விழுகிற நிலையில் இருந்தால், பெற்றோரின் திறன்பேசிக்குத் தகவல் வந்துவிடும். சில நேரம் தவறுதலாகக்கூட ‘அலெர்ட்’ பொத்தான் அழுத்தப்படலாம். அவசர தகவல் அனுப்பலாம். இதுபோன்ற சூழலில், ஆபத்தை உறுதிப்படுத்த ‘பெல்ட்’டில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா பேருதவியாக இருக்கும். இந்த மாடல் சந்தைக்குச் செல்லும்போது, இதன் விலை ரூ.2000 இருக்கும்.”
இதுபோன்று கண்காட்சியில் இடம்பெற்றிருந்த மாணவர்களின் கண்டுபிடிப்புகளில் சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப் பட்டன. எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லவும், மாணவர்கள் தொழில்முனைவோர் ஆவதற்கான வழிகாட்டுதலையும் வழங்க இருப்பதாக ‘பிஏஎல்எஸ்’ அமைப்பைச் சேர்ந்த அனுராதா தெரிவித்தார்.
“அறிவியல் கண்டுபிடிப்பு என்பது பயனுள்ளதாகவும், வாடிக்கையாளர் எளிதில் பயன்படுத்தும் வகையில், சந்தைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டியது அவசியம். இதனால் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு மாணவர்கள் சமர்ப்பித்த 100க்கும் மேற்பட்ட திட்டங்களிலிருந்து 12 திட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன” என்கிறார் அனுராதா.