ஆங்கிலம் அறிவோமே 4.0: 74 - ‘Cartel’ என்றால் கூட்டுச் சதியா?

ஆங்கிலம் அறிவோமே 4.0: 74 - ‘Cartel’ என்றால் கூட்டுச் சதியா?
Updated on
2 min read

‘Gherao’ என்பது ஒருவரைச் சுற்றி வளைத்தலைக் குறிக்கிறதா? - ஒரு தலைவர் வந்தால் தொண்டர்கள் அவரையும், ஒரு நடிகர் வந்தால் ரசிகர்கள் அவரையும் சுற்றிவளைத்துக்கொள்வது இயல்பு. ஆனால் ‘gherao’ என்பது இந்த வகையைக் குறிப்பது அல்ல. ஒருவரது பேச்சு அல்லது செயல்பாடு உங்களுக்குப் பிடிக்கவில்லை, அவற்றோடு நீங்கள் உடன்படவில்லை என்றால் ஒரு கூட்டமாக அவரைச் சுற்றி வளைத்தலைத்தான் ‘gherao’ (கேரோ) என்கிற சொல் குறிக்கிறது.

பெரும்பாலும் ‘நாங்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டால்தான் உங்களை வெளியே போக விடுவோம்’ என்கிற அளவுக்கு இது சென்றுவிடும். ஆக ‘gherao’ என்பது ஒரு மறைமுக வன்முறைதான். ஒருவரை மிரட்டுதல், சிறைப்பிடித்தலுக்குச் சமம். இந்திய குற்றவியல் சட்டப்படி இது ஒரு குற்றம்.

‘Rebalance' என்பதன் பொருள் என்ன? - இதனை ‘Readjust’, ‘restore balance’ என்றும் சொல்லலாம். ‘I have to rebalance my investment' என்றால் உங்கள் முதலீடு சரி யில்லாமல் இருக்கிறது, அதைச் சீரமைக்க வேண்டும் என்று பொருள். அதாவது ஒன்றை மறுபரிசீலனைக்கு உள்படுத்திச் சரியான நிலைக்குக் கொண்டு வருவதை ‘rebalance’ என்பார்கள்.

‘These herbs will rebalance hormones’ என்றால் உடலில் போதிய அளவில் சுரக்காத ஹார்மோன் களைச் (குறைவாகவோ அதிகமாகவோ சுரந்தால்) சரியான அளவில் சுரக்க வைக்க இந்த மூலிகைகள் உதவும் என்று பொருள்.

‘Freight’ என்பது பொருளா? வரியா? - ‘Freight’ என்பது சரக்கைக் குறிக்கிறது. அதாவது ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கப்பல், விமானம், ரயில், லாரி இப்படி ஏதோ ஒன்றில் சரக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்று பொருள்.

‘Cargo’, ‘Consignment’, ‘Shipment’, ‘Truckload’ ஆகியவற்றை இதன் இணை வார்த்தைகளாகக் கூறலாம். ‘Freight charges’ என்றால் குறிப்பிட்ட சரக்கைக் குறிப்பிட்ட போக்குவரத்து முறையில் எடுத்துச்செல்வதற்கான கட்டணம்.

‘Drug Cartel’ என்பது என்ன? - உங்கள் பகுதியில் மூன்று பேர் மட்டும் மளிகைக் கடை உரிமையாளராக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள் வோம். உங்களால் அதிக லாபம் வைத்துச் சாமான்களை விற்க முடியவில்லை. அப்படிச் செய்தால் குறைவான விலைக்கு விற்பனை செய்யும் மற்ற இரண்டு கடை களுக்குக் கூட்டம் சென்றுவிடுகிறது.

இந்நிலையில் நீங்கள் மூவரும் சேர்ந்து ஒரு உடன்படிக்கைக்கு வருகிறீர்கள். அதாவது ‘இந்த அளவுக்கு அதிக லாபம் வைத்து அதிக விலைக்குப் பொருள் களை விற்போம்’ என ஒப்பந்தம் செய்து கொள்கிறீர்கள். இதனால் போட்டி தவிர்க்கப்படுகிறது (ஒரு விதத்தில் இது கூட்டுச் சதி).

இது போல இயங்கும் குழுக்களை ‘cartels’ என்பார்கள். மளிகைப் பொருள்களுக்கான கூட்டு என்றால் ‘grocery cartel’, போதைப் பொருள்களுக்கான கூட்டு என்றால் ‘drug cartel’ என ஒவ்வொன்றுக்கும் பெயர் மாறுபடும்.

‘Elder’, ‘Older’ என்ன வேறுபாடு? - உங்கள் அண்ணனை அறிமுகம் செய்யும்போது ‘elder brother’ என்றுதான் கூறவேண்டும் (உங்களுக்கு வயதில் மிகவும் மூத்தவர் என்றாலும்), ‘older brother’ என்று கூறக்கூடாது..

ஒப்பிடும் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் என்றால் ‘Between the two, he is elder’. ஒரே குடும்பத்தைச் சேராத இரண்டு பேர் என்றால் ‘Between the two, he is older’. ஆனால் ‘elderly’ என்று ஒரு சொல் இருக்கிறது. ‘Elderly group’ என்றால் மூத்தவர்கள் குழு. ‘They are building new houses for the elderly’.

சி|ப்|ஸ்

புதன்கிழமையை ஆங்கிலத்தில் எப்படி உச்சரிக்க வேண்டும்? - ‘வென்ஸ்டே' (வெட்னஸ்டே அல்ல)

‘You speak English good’ – சரியா? - யார் எந்த மொழியைச் சரியாகப் பேசினாலும் அது சரிதான். ஆனால், ‘You speak English well’ என்பதுதான் சரி.

கை விரலை ‘finger’ என்கிறோம். கால் விரலை? - ‘Toe’

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in