மனிதர்கள் வாலை இழந்த கதையின் புதிய முடிவு

மனிதர்கள் வாலை இழந்த கதையின் புதிய முடிவு
Updated on
2 min read

‘வாலு போய் கத்தி வந்தது டும் டும் டும்' என்று சிறுவயதில் பாடி மகிழ்ந்திருப்போம். உண்மையில் மனிதனுக்கு வால் மறைந்தது எப்படி? சமீபத்தில் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சி இக்கேள்விக்குப் பதில் அளிக்க முற்பட்டுள்ளது. வால் என்பது பூமியில் உள்ள அனைத்து விலங்குகளின் (மனிதன் உள்பட) பொதுவான பண்பு.

அதிலும் அனைத்துப் பாலூட்டிகளும் கரு வளர்ச்சியின் ஏதாவது ஒரு நிலை வரையாவது வாலைக் கொண்டுள்ளன. குறிப்பாக மனிதர்களின் வால் வளர்ச்சி, கரு உருவாக்கத்தின் எட்டாவது வாரத்தில் மறைகிறது, ஆனாலும் அந்த வாலின் எச்சமான வால் எலும்பு (tailbone-coccyx) நமது உடலில் இன்னமும் உள்ளது.

மனிதர்களின் வால் எலும்பு (tailbone) எச்சமும், குரங்கினத்தின் மிக நெருங்கிய தொடர்புடைய வாலில்லாக் குரங்குகளும் (Apes-Gorillas, Chimpanzees, Orangutans, Gibbons, Bonobos) பரிணாம வளர்ச்சியால் வாலை இழந்தோமா என்கிற ஆச்சரியத் துக்குரிய கேள்வியை சார்லஸ் டார்வின் காலம் முதல் எழுப்பி வருகின்றன. வால் இழப்பானது மனிதர்களிலும், இதர விலங்குகளிலும் பரிணாம, உயிரியல் வாழ்க்கைமுறைக் காரணங்களுக்காக நடந்திருந்தாலும், அது எவ்வாறு நடந்திருக்கும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

புதிய ஆராய்ச்சி: இந்த ஆச்சரியமூட்டும் வினாவுக்கு மரபணு மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்பதை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் போஷியா, ஈடய் யனாய் உள்ளிட்டோர் கண்டறிந்து நேச்சர் இதழில் கடந்த மாதம் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முதல் கட்டமாக மனிதர்கள் உள்பட 6 வகை வாலில்லாக் குரங்குகள் (Apes), 15 வகையான குரங்குகளின் மரபணுக்களை ஒப்பிட்டு அவற்றிலிருந்து 140 மரபணுக்கள் வால் வளர்ச்சியுடன் தொடர்புடையவை என்பதை உறுதிப்படுத்தினர்.

அதிலும் குறிப்பாக TBXT மரபணுவானது பிராச்சுரி (Brachyury) என்கிற புரத உற்பத்திக்குத் தகவலைத் தருவதுடன் கரு வளர்ச்சியின்போது வால் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறிந்தனர். மேலும் இந்த மரபணு, முதுகுத்தண்டு, மூளை வளர்ச்சியுடன் தொடர்புடையது.

இந்த ஆராய்ச்சியில் மனிதர்கள், apes TBXT மரபணுவானது, குரங்கு TBXT மரபணுலிருந்து வேறுபட்டுள்ளது என்பதை அறிந்ததன் மூலம் ஆராய்ச்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினர். அதாவது, மனிதன், Apes TBXT மரபணுவில் AluY (300 bp) என்கிற தாவும் ஜீன் (Jumping Gene), இன்ட்ரான் (Intron) பகுதியில் செருகப்பட்டிருந்ததையும், இந்த AluY மரபணு குரங்குகளின் TBXTஇல் இல்லை என்பதைக் கண்டறிந்தனர்.

இதன் மூலம், AluY மரபணு மனிதர்கள், வாலில்லாக் குரங்குகளில் வால் இழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்பதை ஊகித்தனர். இந்த ஆராய்ச்சியின் மிக முக்கியக் கட்டமாக, மேம்படுத்தப்பட்ட மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தின் (CRISPR) மூலம் எலியின் கருவில் TBXT மரபணுவில் AluY-ஐ செருகினர். இவ்வாறு மாற்றப்பட்ட மரபணுக்களைக் கொண்ட எலிகள் பல்வேறு வால் மாற்ற விளைவுகளுடன் பிறந்தன, குறுகிய வாலோடும், வால் இல்லாமலும் பிறந்தன.

நரம்புக் குறைபாட்டுக்குக் காரணமா? - இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவை பல்வேறு மறு ஆய்வுகளுக்குப் பிறகு இப்போது வெளியிட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி முடிவானது மனிதர்களின் வால் இழப்பு ஆராய்ச்சியில் மிக முக்கிய முன்னேற்றத்தைத் தொடங்கி வைத்திருப்பதுடன், AluY மரபணுவுடன் வேறு மரபணுக்களும் வால் இழப்பில் தொடர்புடையதாக இருக்கலாம் என்கிற கூற்று, இந்த ஆராய்ச்சியைப் பல்வேறு திசைகளுக்கு இட்டுச்செல்லும்.

ஆராய்ச்சியாளர்களின் அனுமானப்படி 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நாம் வாலை இழந்திருந்தாலும், ஆராய்ச்சி முடிவானது பல்வேறு கேள்விகளுக்கும் வித்திட்டுள்ளது. அதாவது, மரபணு மாற்றம் வால் இழப்பின் வாயிலாக நாம் மரங்களில் இருந்து நிலத்துக்கு வந்து நான்கு கால் நடையிலிருந்து இரண்டு கால் நடைக்கு மாறினோமா அல்லது பரிணாம வளர்ச்சியால் இந்த நிகழ்ந்ததா என்கிற கேள்வியை எழுப்புகிறது.

இந்த ஆய்வில் மரபணு மாற்றப்பட்ட TBXT உடன் பிறந்த எலியானது நரம்புக் குழாய் குறைபாடுகளுடன் பிறந்தது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

நரம்புக் குழாய் குறைபாடானது கருவின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சியைப் பாதிக்கும். இன்றும் ஆயிரத்தில் ஒரு குழந்தை நரம்புக் குழாய் குறைபாடுகளுடன் பிறப்பதால் TBXT மரபணு மாற்றத்தின் விலையாக நரம்புக் குழாய் குறைபாட்டைப் பெற்றோமா என்கிற கேள்வியும் எழுகிறது.

இந்த ஆர்வமூட்டும் ஆராய்ச்சி முடிவானது மனிதப் பரிமாண வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியைப் புதிய தளத்துக்குக் கொண்டுசெல்லலாம். ஒருவேளை நாம் இன்று வாலுடன் இருந்திருந்தால், நமது வாழ்விடம், அன்றாட நடைமுறை போன்றவற்றைப் பற்றிய சிந்தனை பெரிதும் வேடிக்கை நிரம்பியதாகவே இருந்திருக்கும்.

- கட்டுரையாளர், மருந்தியல் துறை அறிவியலாளர்; gover.anto@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in