ஆங்கிலம் அறிவோமே 4.0: 73 - ‘Chilling effect’ எப்போது வரும்?

ஆங்கிலம் அறிவோமே 4.0: 73 - ‘Chilling effect’ எப்போது வரும்?
Updated on
2 min read

‘Blogger’ என்பவர் யார்? - இணையதளத்தில் உங்கள் கருத்துகளையோ அனுபவங்களையோ பிறர் படிப்பதற்காகத் தொடர்ந்து ஆவணப்படுத்துகிறீர்கள் என்றால் அதுதான் ‘blog’. இதில் எழுதுபவர் ‘blogger’. ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி மட்டுமே இப்படிப் பகிர்ந்துகொள்கிறீர்கள் என்றால் உங்கள் பெயருக்கு முன்னால் அதற்கேற்ப ஒரு ‘adjective’ சேரும். ‘Political blogger’, ‘food blogger’ என்பதுபோல.

நீங்கள் பிரபலமானவர் என்றால், மேற்கூறியபடி செய்யும்போது உங்களை ‘celebrity blogger’ என்பார்கள். உங்களுக்குத் தெரியுமா? ‘Vlogger’ என்றும் ஒரு சொல் உண்டு. எண்ணங்களையோ அனுபவங்களையோ காணொளிகளாக எடுத்து இணையத்தில் பதிவுசெய்பவர் இப்படி அழைக்கப்படுகிறார்.

‘கொலைகாரன் யாரென்று தெரிந்ததும் நாங்கள் அத்தனை பேரும் ‘stun’ ஆகிவிட்டோம்’ என்கிறார்களே. ‘stun’ என்றால் அதிர்ச்சியில் உறைந்துபோவது என்று பொருளா? - இல்லை. ‘அவர் அறைக்குள் நுழைந்தவுடன் நாங்கள் அத்தனை பேரும் ‘stun’ ஆகிவிட்டோம்’ என்பதை எடுத்துக்காட்டாக நீங்கள் கூறியிருந்தால், அது சரியாக இருந்திருக்கும். அழகைப் பார்த்துப் பரவசம் அடைவதுதான் ‘stun’ ஆவது. அப்படியான நபரை ‘stunner’ என்பார்கள்.

‘Chilling effect’ என்பதும் ‘மயிர்க்கூச்செறிய வைக்கும் விளைவு’ என்பதும் ஒன்றா? - அப்படி இல்லை. பரவசம், புளகாங்கிதம் ஆகியவைகூட மயிர்கூச்செறிய வைக்கும். ஆனால், ‘chilling effect’ என்பது அநியாயமான விதத்தில் ஒருவர் கட்டுப்படுத்தப்படும்போது ஏற்படுவது.

திடீரென்று அரசு ஒரு சட்டத்தை அமல்படுத்தி, சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டைப்போடுகிறது என வைத்துக்கொள்வோம். அந்தச் சட்டத்தால் வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்க வேண்டும். இது போன்ற ஒரு சூழலில் உங்களுக்குத் தோன்றக்கூடிய நிலைதான் ‘chilling effect’.

கரோனா காலத்தில் (அரசு நியாய மான காரணங்களுக்காக இப்படி கட்டுப்படுத்தியபோதிலும்) நமக்கு ‘chilling effect’ தோன்றியிருக்க வாய்ப்பு உண்டு. அரசின் சட்டங்கள்தான் என்பதில்லை, நீதிமன்றத் தீர்ப்புகள்கூட இந்த விளைவை ஏற்படுத்தலாம்.

‘Chilling’ என்பதை ‘ஜில்’ என்ற உணர்வு என்பதோடு குழப்பிக்கொள்ளக்கூடாது. இந்தச் சொல்லுக்கு அச்சுறுத்துகிற அல்லது திகிலை ஏற்படுத்தக்கூடிய என்கிற பொருள்களும் உண்டு. இப்போதெல்லாம் ‘chill out’ என்பது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கோபத்தை தணித்து விட்டு அமைதியாக இருப்பதை இது குறிக்கிறது. ‘On Sundays I chill out’ என்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் நான் எந்த வேலையும் செய்யாமல், எனக்கு தோன்றியபடி நடந்து கொள்வேன் என்று பொருள். அதாவது, ‘chill’ என்பதை ‘relax’ என்கிற பொருளில் இங்கே பயன்படுத்தப்படுகிறது.

ஆளுநர் பெண்ணாக இருந்தால் அவரை ‘governess’ என்று அழைக்க வேண்டுமா? - ‘Governess’ என்பது பெண்பால் என்கிறவரை நீங்கள் கூறியது சரி. எனினும் ஆளுநருக்கும் அந்தச் சொல்லுக்கும் தொடர்பு இல்லை. செல்வாக்குமிக்கக் குடும்பங்களில் ஆசிரியை வீட்டுக்கு வந்து குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தர ஏற்பாடு செய்வார்கள் (இந்தக் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட மாட்டார்கள்). இப்படி வீட்டுக்கு வந்து கல்வி கற்றுத்தரும் ஆசிரியையை ‘governess’ என்பார்கள்.

சி|ப்|ஸ்

# ‘Refurbished’ என்றால்? - புதுப்பிக்கப்பட்டது (பெரும்பாலும் கட்டிடம்)
# ‘Surrogate mother’ என்றால்? - வாடகைத்தாய்.
# ‘I prefer tea than coffee’; ‘I prefer tea to coffee’. எது சரி? - ‘I prefer tea to coffee’.

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in