தமிழ் இனிது 38 - ‘பிரிப்பது’ எப்போது பிழையாகும்?

தமிழ் இனிது 38 - ‘பிரிப்பது’ எப்போது பிழையாகும்?
Updated on
2 min read

‘வாழைத்தார்’ வேண்டாமே: ‘அடையாறு’, ‘அடையார்’ ஆனது. ‘வாழைத்தாறு’, ‘வாழைத்தார்’ ஆகிவிட்டது. ‘தாறு’ - யானையை ஏவும் கைக்கருவி, குறிஞ்சிப் பாட்டு-150. இதை இப்போது ‘அங்குசம்’ என்பர்.

யானையை வேலை வாங்குவது குறைந்து, மாட்டைப் பயன்படுத்தும் இக்காலத்தில், உலோகத்தாறு, மரத்‘தாறு’ ஆகி, ‘தார்க்கோல்’ – ‘தார்க்குச்சி’ ஆகிவிட்டது. தாறு, ஒழுங்கான வடிவம் கொண்டது.

முறையற்ற பேச்சைத் ‘தாறு மாறாக’ பேசுவதாகச் சொல்வதில் இச்சொல் புரியும். ‘வாழைத் தாறும்’ ஓர் ஒழுங்கில், அழகிய வடிவில் ஆனது அல்லவா?

வீரமாமுனிவர்
வீரமாமுனிவர்

சொற்களைப் பிரிப்பது: தாறுமாறாகச் சொற்களைப் பிரிப்பதும், நிறுத்தக் குறிகளைத் தேவையின்றி இடுவதும், சொல்ல வருவதைப் புரிய விடாமல் செய்துவிடும். இவையற்ற ஓலைச் சுவடியிலிருந்து அச்சில் பதிப்பித்த தமிழறிஞர், எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டு நமக்குத் தந்திருக்கிறார்கள்.

புரிந்து, புரியும்படி எழுத வேண்டும் அல்லவா? ‘கட்டுண்டோம்‌’, ‘பொறுத்திருப்போம்‌’ என்பதைக்‌ ‘கட்டு உண்டோம்‌’, ‘பொறுத்து இருப்போம்‌’ எனப்‌ பிரிப்பது பிழையாகிவிடும்‌. 'பன்மணிமாலை' என்பது ஒரு நூல்வகை. அதைப்‌ 'பல்மணி மாலை' என்று சொல்லிப் பாருங்கள்‌. சிரிப்புக்கு இடமாகும்‌ என்கிறார் தமிழண்ணல்.

‘காலச்சுவடு’ வெளியிட்டுள்ள ‘பாரதி கவிதைகள்’ நூலை, பதம்(சொல்) பிரித்து, தந்திருக்கிறார் பழ.அதியமான். ‘பதம் பிரிக்கும்போது, ஓசை இன்பம் தடைபடும். எனினும் பொருள் உணர அப்படிப் பிரிப்பது தவறாகாது’ என்னும் இவரது முன்னுரையை இன்றைய எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டும்.

தமிழ் வளர்ச்சித் துறையும், பாடநூல் கழகமும் இணைந்து வெளியிட்டுள்ள ‘செவ்வியல் நூல்கள் - உரை வரிசை’ பயன்தரும் தொகுப்பு. இலக்கிய வாசிப்பு, சொற்களைப் பிரித்துப் பயன்படுத்தும் முறை என இரண்டு பயன் கிடைக்கும்.

அங்குசம் (தாறுகோல்)
அங்குசம் (தாறுகோல்)

‘ஔ’ – துணை யெழுத்து சரிதானா? - ஓவிய எழுத்து, ஒலியெழுத்து, வட்டெழுத்து, பிராமி (எ) தமிழி எழுத்து எனத் தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் மாறி வந்துள்ளது. இதை வேடிக்கையாக, ‘இன்றைய திருக்குறளை, வள்ளுவருக்கே படிக்கத் தெரியாது’ என்பார்கள்.

17ஆம் நூற்றாண்டு வரை, ‘எ’ ‘ஒ’ தலையில் புள்ளி வைத்துக் குறில் என்றும், புள்ளியில்லாத ‘எ’ ‘ஒ’ எழுத்துகளே நெடில் என்றும் இருந்தன. இவற்றை மாற்றி, இப்போதைய - எ(குறில்), ஏ(நெடில்), ஒ(குறில்), ஓ(நெடில்) எழுத்து வடிவ மாற்றத்தை நமக்குத் தந்தவர் இத்தாலியப் பாதிரியார், வீரமாமுனிவர் எனும் தமிழறிஞர்.

எனினும் தமிழின் துணையெழுத்துகளில் இன்னும் தெளிவு தேவை. ‘ளகர’ வர்க்கத்திலுள்ள ‘ள’ எழுத்து ‘ஊ’, ‘ஒள’ எனும் கூட்டெழுத்துகளிலும் உள்ளது. ஆனால், கூட்டெழுத்தில் வரும் ‘ள’ எழுத்து தன் ஒலியை இழப்பதன் அடையாளமாக, சிறிதாகப் போட வேண்டும்.

கணினி, செல்பேசி எழுத்துருக்களில் உள்ள ‘ஊ’ வசதி, ‘ஔ’ எழுத்துக்கு இல்லை. எனவே, ஆரம்பப் பள்ளி மாணவர், ஔவையாரை, ஒ-ள-வை-யா-ர் என்றே படிக்கிறார்கள். கையால் எழுதும் போது ‘ஊ’, ‘ஔ’ எழுத்தில் வரும் ‘ள’ எழுத்தைச் சிறிதாக எழுதிப் பழ(க்)க, வேண்டும். அதுமட்டுமின்றி, ‘ர’ இன்னும் - ஒருங்குறி தவிர்த்த பல எழுத்துருக்களில்- துணைக்காலாகவே உள்ளதும் கவலைக்குரியது.

(தொடரும்)

- muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in