

அமெரிக்கா தொடர்பான செய்தி ஒன்றில் ‘It is a battleground state’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு என்ன அர்த்தம்? - தேர்தலில் வெற்றி பெற அந்த மாநிலம் முக்கியமானது என்று பொருள். அங்கு பிரச்சாரத்துக்கு அதிக நேரமும் அதிக தொகையும் செலவழிப்பார்கள். வரும் தேர்தலில் இப்படிப்பட்ட மாகாணங்கள் என அரிசோனா, ஜார்ஜியா, மிஷிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை கூறப்படுகின்றன.
‘Confidant’, ‘confident’, ‘confidante’ என்ன வித்தியாசம்? - ‘Confidant’ என்பது ஒரு நபரைக் குறிக்கிறது. அதாவது, அவரை நம்பி ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ளலாம். அந்த நபர் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். முன்பெல்லாம் இப்படிப்பட்ட நம்பகமான நபர் பெண்ணாக இருந்தால் ‘confidante’ என்று குறிப்பிடப்பட்டது. ‘Confident’ என்பது ‘adjective’. ‘I am confident’ என்றால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ‘Be confident’ என்றால் நம்பிக்கையோடு இரு என்று பொருள்.
‘ஜுகல்பந்தி’ என்பது எந்த மொழி யிலிருந்து வந்த வார்த்தை? அதன் உண்மையான பொருள் என்ன? - இது சம்ஸ்கிருதத்தை அடிப்படை யாகக் கொண்ட சொல். ‘ஜுகல்’ என்றால் ஜோடி. ‘பந்தி’ என்றால் பிணைப்பு. இரண்டு இசைக்கலைஞர்களிடையே நடைபெறும் இசை இணைப்புதான் ‘ஜுகல்பந்தி’. பெரும்பாலும் இந்துஸ்தானி இசையில் இது நடைபெறுகிறது.
என்றாலும் இந்துஸ்தானி இசைக் கலைஞரும் கர்நாடக இசைக்கலைஞரும்
இணைந்து நடத்தும் ஜுகல்பந்தியும் பிரபலமாகி வருகிறது. இதில் ஒவ்வோர் இசைக்கலைஞரும் தலைமைக் கலைஞர்தான். பொதுவாக இசைப்பதில் தேர்ந்த இரண்டு கலைஞர்கள்தாம் ஜுகல்பந்தியில் ஈடுபடுவார்கள்.
‘அமெரிக்காவில் காங்கிரஸ்தாம் சட்டங்களை இயக்குகிறது’ என்பதைப் படித்த பிறகு குழப்பமாக இருக்கிறது. ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவருமே ‘காங்கிரஸ்’ கட்சி இல்லையே. பின் ‘காங்கிரஸ்’ என்கிற வார்த்தையின் பொருள் என்ன? - அமெரிக்காவில் ‘காங்கிரஸ்’ என்பது ஒரு கட்சியல்ல. அது அந்த நாட்டின் கூட்டரசின் நிர்வாகப் பிரிவு. அதுதான் விவாதங்களை நடத்திச் சட்டங்களை இயற்றும். ஏதாவது நாட்டின் மீது போர் புரிய வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். பட்ஜெட் அறிவிப்பதும் அதுதான். பலதரப்பட்டவர்கள் கருத்துகள் பரிமாறிக் கொள்ளவும் விவாதிக்கவும் கூடும் கூட்டம், ஆங்கில மொழியில் ‘காங்கிரஸ்’ எனப்படுகிறது.
‘To rest one’s oars’ என்றால் என்ன பொருள்? - ‘Oar’ என்றால் துடுப்பு. படகை ஓட்டும்போது சிறிது நேரம் துடுப்பு போடாமல் இருந்தாலும் படகு தண்ணீர் ஓடும் திசைக்கேற்ப தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். ‘To rest one’s oars’ என்றால் எடுத்த முயற்சிகளைக் கொஞ்ச காலத்துக்கு, நிறுத்தி வைப்பது என்று பொருள். இது புத்திசாலித்தனமாகவும் இருக்கலாம், முட்டாள்தனமான
முடிவாகவும் இருக்கலாம்.
‘Fabricate’ என்பது நல்ல சொல்லா? கெட்ட சொல்லா? - அதாவது ‘அது நேர்மறை அர்த்தத்தைக் கொடுக்கிறதா அல்லது எதிர்மறை அர்த்தத்தைக் கொடுக்கிறதா’ என்று கேட்கிறீர்கள் இல்லையா? தொழில்முறையில் பார்க்கும்போது ‘fabricate’ என்பது பல்வேறு மூலப் பொருள்களில் இருந்து ஒன்றை உருவாக்குவதைக் குறிக்கும்.
‘The finest craftsmen fabricated this machine’. மற்றபடி, பிறரை ஏமாற்றுவதற்காகக் கட்டுக் கதைகளை உருவாக்குவதையும் ‘fabricate’ எனலாம். ‘He was late to the office. So he fabricated an excuse’ என்றால் அலுவலகத்திற்குத் தாமதமாக வந்ததைச் சமாளிக்க ஒரு காரணத்தை அவன் உருவாக்கினான் என்று பொருள்.
சி|ப்|ஸ்
‘Harass’ செய்யாதே என்றால்? - தொடர்ந்து தொந்தரவு செய்யாதே.
‘Faction’ என்றால்? - புரட்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு குழு.
‘Hale and hearty’ என்பதில் ‘hale’ என்பது எதைக் குறிக்கிறது? - ‘Healthy’.
- aruncharanya@gmail.com