தமிழ் இனிது 37 - ‘முதற்கண்’ பாவம் இல்லையா?

தமிழ் இனிது 37 - ‘முதற்கண்’ பாவம் இல்லையா?
Updated on
2 min read

தடையமா? தடயமா? - ‘வரலாறு கொந்தளித்து எரிந்து அணைகிறது. தடையங்களாக இடிபாடுகளை விட்டுச் செல்கிறது’ - குறுங்கதை ஒன்றில் வரும் வாக்கியம்.

தடயம் - துப்பு அல்லது அறிகுறி எனப் பொருள்தரும் சொல். தடையம் - தடை என்பதிலிருந்து தோன்றும் சொல் எனப்படுகிறது. இப்போது, அந்தத் தொடரை மீண்டும் பாருங்கள். ஐகாரக் குறுக்கம், புடைவை-புடவை, உடைமை-உடமை என வழக்கில் வரும். இல்லாத ஐ-யை ஏற்றி ‘தடையம்’ என்பது தவறான சொல், ‘தடயம்’ என்பதே சரி.

ஒருவற்கு, ஒருவர்க்கு: அனைவர்க்குமான கருத்துகளை, கற்பனையான ஒருவரை முன்னிறுத்திச் சொல்வது, உலக அளவிலான ஓர் இலக்கிய உத்தி. யாப்பருங்கலக் காரிகை இலக்கண நூலே இப்படி உள்ளது. ‘ஒருவற்கு’ என்பது, ‘ஒருவனுக்கு’ என்னும் பொருளில் இலக்கியங்களில் வரும். குறளில் பல இடங்களில் வந்துள்ளது - 40, 95, 398, 400, 454, 600. மூதுரை - 01, நாலடி - 73, 142. இவற்றில் ‘ஒருவற்கு’, என ஒருமையில் சொன்னாலும் பால்கடந்து அனைவர்க்கும் சொல்லும் உத்திதான்.

அவர்கள், அவைகள்: நமது தொடரில் ‘திரு’ எனும் முன்னொட்டு, பெயருக்கு முன்னால்தான் வரும், பதவிக்கு முன்னால் வராது’ என்றதை ஏற்றுக்கொண்ட பலரும் கேட்ட கேள்வி, ‘பெயருக்குப் பின்னால் ‘அவர்கள்’ போடுவது சரியா’, ‘அது எப்படி ஒருமைப் பெயருக்குப் பன்மையைச் சேர்ப்பது?’ என்கிறார்கள்.

‘அவர்கள்’ என்னும் சொல், சொல்லளவில் பன்மைதான் எனினும் தொடரில் வரும்போது ஒருவரையே குறிப்பதால் ஏற்கலாம். ‘அமைச்சர் அவர்கள் வருகிறார்கள்’ என்பதை ‘அமைச்சர் வருகிறார்’ என்பது மரியாதைக் குறைவானது என்பது புரியாதா என்ன? புரியாதவர்க்கு, ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ புரிய வைக்கும்.

இதனை, ‘ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி’ என, தொல்காப்பியம் ஏற்கிறது (சொல்-கிளவியாக்கம்-510). எனினும் இதை, ‘பால்வழு அமைதி’ என்னும் தலைப்பிலேயே சொல்லியிருப்பது, இது, பொதுப்படை அல்ல என்பதையும் புரிய வைக்கும் நுட்பம். அதற்காக, ‘அவை’ என்னும் சொல்லோடு, மேலும் ஒரு ‘கள்’ விகுதி போட்டு ‘அவைகள்’ என்பது தவறு. ஆக, ‘அவர்கள்’ சரி, ‘அவைகள்’ தவறு. ‘கள்’ போடும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

முதற்கண் வணக்கம்? - பேச்சாளர் சிலர், ‘….. அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கம்’ என்று தொடங்குவதைப் பார்க்கலாம். நல்ல வேளையாக, ‘இரண்டாம் கண் வணக்கம் யாருக்கு?’ என்று யாரும் அவரிடம் கேட்பதில்லை. ‘At first’ எனும் பொருளில் முதற் கண்ணைப் பயன்படுத்தும்போது, ‘முதற்கண் எனது வணக்கம்’ என்று சொல்வதே சரியானது. ‘எனது முதல் வணக்கம்’ என்பது இன்னும் தெளிவானது. இதில், தேவை இல்லாமல் கண்ணை ஏன் இழுக்க வேண்டும்? பெண்பாவம் போல கண்பாவம் இல்லையா?!

(தொடரும்)

- muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in