

தெரிந்துகொள்வோம்: ‘புயல் உருவாக வாய்ப்பு’, ‘கனமழை நீடிக்க வாய்ப்பு’ என அவ்வப்போது எச்சரிக்கிறது வானிலை ஆய்வு மையம். நோய் ஆபத்துக் காலங்களில் ‘கரோனா பரவக்கூடிய வாய்ப்புள்ளது’, ‘புற்றுநோய் வர வாய்ப்புள்ளது’ என்று மருத்துவர்களே எழுதுகின்றனர். ஆபத்து வாய்ப்புக் கேட்டு வருமா என்ன?
‘வாய்ப்பு’ என்பதை ஆங்கி லத்தில் ‘Opportunity’, ‘Chance’ என்னும் சொற்களால் சொல்கிறார்கள். கெடு வாய்ப்பை ‘Bad luck’ என்றும் நல்வாய்ப்பை ‘Good luck’ என்றும் சொன்னால் இன்னும் எளிதாக விளங்கும். தமிழில் ‘வாய்ப்பு’ என்பதை இன்றைய தமிழில் நல்வாய்ப்பு எனும் பொருளில் சொல்வதே சரியானது. ஆனால், கெடுவாய்ப்பாக, ஆபத்து வருவதைக்கூட ‘வாய்ப்பு’ என்ற சொல்லால் தெரிவிக்கும் நிலையே உள்ளது.
‘புயல் வரும் ஆபத்து உள்ளது’, ‘நோய் வரக்கூடிய ஆபத்து உள்ளது’ என்று எச்சரிக்கையாகவே சொல்லலாம். இதை, வானிலை ஆய்வில், மருத்துவத் துறையில், ஊடகங்களில் பணியாற்று வோர் புரிந்துகொண்டால் தமிழுக்கு நல்வாய்ப்பு.
‘திரு’ - எங்கே வரும்? - ஒருவர் பெயரைக் குறிப்பிடும்போது, ‘மரியாதைக்குரிய’ என்னும் பொருளில் ‘திரு’ என்னும் முன்னொட்டுச் சேர்ப்பது வழக்கம். பெயருக்கு முன் மட்டுமே ‘திரு’ பயன்படுத்த வேண்டும், பதவிக்கு முன் போடுவது சரியல்ல. ‘உயர்திரு. வட்டாட்சியர்’ என்பது தவறு. ‘திரு. முத்து, வட்டாட்சியர்’ என்று தனிப்பட்ட தருணங்களில் போடலாம். அலுவலக முறையில் தவறு.
திருமணம் ஆன பெண்ணை, ‘திருமதி’ என்கிறோம். திருமணம் ஆனாலும் ஆகா விட்டாலும் ஆணுக்குத் ‘திரு’ அடைமொழியே நீடிக்கிறது. எப்போதும் ‘திருதிரு’ என்று இருப்பது (முழிப்பது) ஆண்கள்தானா என்ன? இப்போது இதை மாற்றி, திருமணம் ஆன, ஆகாத ஆண்- பெண் என யாவருக்கும் ‘திருமிகு’ என்னும் ஒற்றைச் சொல்லையே பயன்படுத்தும் புதிய சிந்தனை பரவி வருவது பாராட்டுக்குரியது.
‘உப்பக்கம்’ என்றால்? - ‘அப்பக்கம்’ புரியும், ‘அ’ சேய்மைச் சுட்டு, தூரத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டுவது. ‘இப்பக்கம்’ தெரியும், ‘இ’ அண்மைச் சுட்டு, அருகில் உள்ளதைக் குறிப்பது. தமிழில் ‘அ’ ‘இ’, ‘உ’ என, சுட்டிக் காட்டும் எழுத்துகளைச் ‘சுட்டெழுத்துகள்’ என்பார்கள்.
‘அந்த’, ‘இந்த’, ‘உந்த’, ‘அப்படி’, ‘இப்படி’ என்றும் இவை வழக்கில் உள்ளன. ‘அ’, ‘இ’ தவிர எஞ்சியுள்ள ‘உ’ எதைக் குறிக்கிறது? அது புழக்கத்தில் இல்லையே ஏன்? தமிழ்நாட்டில் புழக்கம் இழந்த சொல், ஈழத்தமிழில் உள்ளது எப்படி? தமிழ்நாட்டில் மறைந்ததற்கும் ஈழத்தில் இருப்பதற்கும் சமூகக் காரணம் உள்ளது.
அருகில், நம் எதிரில் இல்லாமல், முதுகு காட்டி நிற்கும் ஒருவரை எப்படிக் குறிப்பது? – ‘உப்பக்கம்’ இருப்பவர் என்கிறது குறள்-620. ‘உந்த’ என்பதை இப்படித்தான் ஈழத்தமிழர் சொல்கின்றனர். ஒரு சொல் புழக்கத்தில் இருப்பதும், தொடர்வதும், மறைவதும், புதிதாகத் தோன்றுவதும் அந்தச் சமூகத்தின் சூழலைப் பொறுத்தது என்பதற்கு இந்த எழுத்தே நல்ல சான்று. வேறென்ன சொல்ல?
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com