

‘Honey trap’ என்பது என்ன? - ‘Trap’ என்றால் பொறி என்பது தெரிந்திருக்கும். ‘Mousetrap’ என்றால் எலிப்பொறி. பெரும் சட்டவிரோதச் செயலை ஒருவர் செய்கிறார். ஆனால், அதற்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் இல்லை. இந்தச் சூழலில் காவல்துறையின் நம்பிக்கைக்குரிய ஒரு பெண்ணை அந்தக் குற்றவாளியிடம் பழக வைத்து, சட்டவிரோதச் செயல்களுக்கான ஆதாரங்களைத் திரட்டும் உத்திதான் ‘Honey trap’. ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். ஜெய்சங்கர் திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கும்தான் (தென்னக ஜேம்ஸ்பாண்ட்!).
***
‘Prime property' என்று விளம்பரப்படுத்துகிறார்களே, அது என்ன? - முக்கியப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த இடத்துக்கு எளிதாகப் பயணிக்கலாம், ஏராளமான வசதிகளும் இருக்கும். இப்படிப்பட்ட இடத்தைதான் மனை விற்பனையாளர்கள் ‘prime property’ என விளம்பரப்படுத்துகிறார்கள்.
இந்த இடத்தில் அமைந்துள்ள வீடு அல்லது அடுக்ககத்தின் விலை நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். ‘Prime’ என்றால் முதன்மையான என்று பொருள். பலர் மீது சந்தேகம் இருந்தாலும் ஒரு குற்றத்தைக் குறிப்பிட்ட ஒருவர் செய்திருக்க அதிக வாய்ப்பிருக்கும் என எண்ணினால் அவர் ‘prime suspect’.
***
‘Burglar’ என்பவருக்கும் ‘thief’ என்பவருக்கும் உள்ள வேறுபாடு என்ன? - ‘Burglar’ என்பவர் வீடு புகுந்து பொருள்களைக் கொள்ளையடிப்பவர். அதனால்தான் வீடுகளில் ‘burglar alarms’ பொருத்தப்படுகின்றன. ‘Thief’ என்பவர் திருடர். அவர் எந்த இடத்திலும் பொருளைத் திருடுபவர். ‘Robber’ என்பவரும் கொள்ளையர்தான். ஆனால், இவர் பெரும்பாலும் வன்முறையைப் பயன்படுத்துவார். அதாவது, சத்தமில்லாமல் திருட மாட்டார்.
***
நான் கடினமாக உழைப்பவன் என்பதை நேர்முகத் தேர்வில் எப்படி விவரிக்கலாம்? - இப்போதெல்லாம் கடினமாக உழைப்பவரைவிட (hard worker), சமயோசித மாக உழைப்பவருக்குத்தான் (smart worker) முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்புறம் இன்னொன்று, ‘I am a hard worker’ என்று நீங்கள் கூறலாம். மாறாக ‘I hardly work’ என்று கூறி விடாதீர்கள். நீங்கள் பெரும்பாலும் வேலை செய்ய மாட்டீர்கள் என்ற அர்த்தத்தை அது தரும்.
***
‘Promenade’ என்பதன் பொருள் என்ன? - கடல், ஏரி, நதிக்கு அருகே நடப்பதற்காக அகலமான பாதையொன்றை உருவாக்கி இருப்பதைப் பார்த்திருப்போம். அந்தப் பகுதியைத்தான் இப்படிக் குறிப்பிடுவார்கள். இந்தப் பகுதியில் கடைகள் இருக்காது (இருக்கவும் கூடாது). இயற்கையை ரசித்தபடி நிதானமாக நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பாதை.
***
முள்ளம்பன்றியை ‘porcupine’ என்கிறார்களே. அந்தப் பெயர் எப்படி வந்தது? - லத்தின் மொழியில் ‘porcus’ என்பது பன்றியைக் குறிக்கும் வார்த்தை. ‘Spina’ என்பது இறகுகளைக் குறிக்கும். இறகுகள் அமைந்த பன்றி என்று அர்த்தத்தில் அதற்கு இந்தப் பெயர் இடப்பட்டது.
- aruncharanya@gmail.co