பொதுத்தேர்வு: மாணவர்களின் கவனத்துக்கு..

பொதுத்தேர்வு: மாணவர்களின் கவனத்துக்கு..
Updated on
3 min read

ஆண்டுப் பொதுத்தேர்வைச் சித்திரைக் கொண்டாட்டம் என்றுதான் ஆசிரியர்கள் சொல்வார்கள். தேர்வு என்பதை மாணவர் களும் இப்படிக் கொண்டாட்டமாகவே எதிர்கொள்ள வேண்டும். ஒரு புத்தகம் படிக்கும்போது சில பக்கங்களைப் புரட்டுவது போன்றதுதான் தேர்வுகளும். புத்தகங்களைப் புரட்டுவதுபோல வாழ்க்கையின் சில பக்கங்களான தேர்வு களையும் புரட்ட வேண்டிய தருணம் இது. இதற்காகப் பதற்றப்படத் தேவையில்லை.

பன்னிரெண்டாம் வகுப்பினருக்கு இது மூன்றாவது (10, 11) பொதுத்தேர்வு என்பதால் பழகி இருப்பீர்கள்‌.‌ பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதுபவர்களுக்குத்தான் சற்று பயம் இருக்கும். இந்தப் பயம் தேவையற்றது. பள்ளியில் நடைபெறும் தேர்வு அறையில் உங்கள் வகுப்பாசிரியர் கண்காணித்திருப்பார். பொதுத்தேர்வு அறையில் வேறு பள்ளியின் ஆசிரியர் இருப்பார், அவ்வளவுதான் வேறுபாடு.

படிக்கும் நேரம்: பொதுத்தேர்வு நேரத்தில் எப்படிப் படிப்பது என்று திட்டமிடுவதில் சிலருக்குக் குழப்பம் வரலாம். மூன்று மணி நேரம் படிக்கலாம் என்று நீங்கள் உட்காரும்போது, இந்த மூன்று மணி நேரத்தில் இத்தனை பாடங்களைப் படித்து முடிக்க வேண்டும் என்கிற இலக்கு வைத்துக் கொண்டு படிக்க வேண்டும்.

இலக்கு இல்லாமல் படிக்க உட்கார்ந்தால் மூன்று மணி நேரத்தில் மூன்று பக்கங்களைக்கூடப் படித்திருக்க முடியாது.‌ படிக்கும்போது நம் நினைவுகள் எங்கெங்கோ சென்றிருக்கும். எனவே, அமைதியான சூழலில் படிக்க முயலுங்கள். படிக்கும்போது உங்கள் திறன்பேசியை ஓரமாக வைத்துவிடுங்கள்.‌

முக்கியமாகத் தேர்வு நேர வதந்திகளை நம்பாதீர்கள்.‌ தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது, ரத்து செய்யப்பட்டுவிட்டது, வினாத்தாள் ‘அவுட்’ ஆகிவிட்டது போன்ற செய்திகள் வந்தால், உங்கள் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியரிடம் தொடர்புகொண்டு செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பொதுவாக அதிகாலை நேரம் எழுந்து படிப்பது பலன் தரும் என்றாலும், நீங்கள் இரவு நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால் அதை மாற்றிக் கொள்ள வேண்டாம்.‌ படிக்கும்போது அசதியாக இருந்தால் ஒரு ‘சாக்லெட்’ சாப்பிட்டுக் கொள்ளலாம் (பபுள்கம் வேண்டாமே). உணவு வகைகளில் கவனமாக இருங்கள். தேர்வு நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவு வகைகளைச் சாப்பிட்டால் தேவையில்லாத சிரமங்கள் உண்டாகும்.

தேர்வு மந்திரம்: இயல்பான சூழலைச் சகுனம் சரியில்லை என்றெல்லாம் குழப்பிக் கொள்ளாதீர்கள்.‌ தேர்வுக்குக் புறப்படும்போது யாராவது தும்முவது, இருமுவது போன்ற செயல்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு விருப்பமான கடவுளை வணங்குங் கள் போதும்.‌ வீட்டில் தேர்வு அட்டவணையை எழுதிக் கண்ணில்படுகிற இடத்தில் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள்.‌ தினசரி அதைப் பார்த்துத் தேர்வு நாளை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

‘எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் மேற்படிப்புக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவு கிடைக்கும்.‌ அந்தப் படிப்புக்கான ஒரு வேலையும் கிடைக்கும்’. இந்த மந்திரத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’. இறுதித் திருப்புதல் தேர்வையொட்டி ஆசிரியர்கள் உங்களுக்குத் திறன்பேசியில் குறிப்புகள் ஏதேனும் அனுப்பி இருந்தால் அதனை ‘பிரிண்ட் அவுட்’ எடுத்துக்கொள்ளுங்கள். திறன்பேசியில் அவை அழிந்து விடக்கூடும்.‌

தேர்வு அறையில்... தேர்வு எழுத நீண்ட தூரம் பயணித்து செல்ப வர்கள் பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாகவே புறப்பட்டு, தேர்வு மையத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகச் சென்றுவிடுங்கள். தேர்வறைக்குச் சென்றவுடன் உங்கள் இருக்கையில் தேவை யில்லாத துண்டு பேப்பர்கள் இருக்கின்றனவா என்பதைப் பார்த்து அவற்றை அப்புறப்படுத்தி விடுங்கள். உங்களுக்குத் தேவையான தேர்வுப் பொருள்களை நீங்களே எடுத்துச் செல்லுங்கள், இரவல் வாங்க வேண்டாம்.

தேர்வு அறையில் நேர மேலாண்மை மிகவும் அவசியம்.‌ இரண்டு மதிப்பெண் கணக்குகளுக்கு விடை வரவில்லை என்றால் நிறுத்திவிட்டு அடுத்த கேள்விக்குச் செல்லுங்கள். கடைசி இருபது நிமிடங்களில் மீண்டும் அந்தக் கணக்கை செய்து பாருங்கள்.‌ அப்போதும் விடை வரவில்லை என்றால், வேறு ஒரு கேள்வியை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரே மாதிரியாக இருக்கும் கேள்விகளைத் தெளிவாகக் கவனித்து விடையளியுங்கள்.‌ இதில் தவறு செய்ய வாய்ப்புகள் அதிகம்.‌ (வேளாண்மைப் பருவம் என்பது வேறு, வேளாண்மை முறைகள் என்பது வேறு, அதுபோல ஜிடிபி என்பது வேறு, ஜிஎஸ்டி என்பது வேறு).

கவனம் தேவை: சம மதிப்பெண் கொண்ட கேள்விகளுக்குச் சம அளவில் விடை அளிப்பதே சிறந்தது.‌ ஐந்து மதிப்பெண் வினாக்கள் என்றால் அனைத்து வினாக்களுக்கும் தலா ஒரு பக்கம் வீதம் விடையளிக்க வேண்டும்.‌ ஒரு வினாவுக்கு இரண்டு பக்கமும் இன்னொரு வினாவுக்கு அரைப்பக்கமும் விடை எழுதாதீர்கள் (கணிதம், அறிவியல் இதற்கு விதிவிலக்கு).

தேவையான இடங்களில் படங்கள் வரைவதும் அதில் துல்லியத் தன்மை இருப்பதும் அவசியம். அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவது உங்கள் மதிப்பெண்கள் குறையாமல் பாதுகாக்கும். கணிதம், இயற்பியல் உள்ளிட்ட தாள்களில் நீங்கள் செய்யும் சின்ன கணக்கீடுகளையும் (ரஃப் ஒர்க்) விடைத்தாளிலேயே செய்யுங்கள். வினாத்தாளில் எழுதிப் பார்க்கக் கூடாது.‌

நீங்கள் எழுதும் விடைகளில் முக்கியச் சொற்களை (key words) அடிக்கோடிட்டுக் காட்டுவது சிறந்தது. படிவம் நிரப்புதல், வரைபடம் (கிராப்), நில வரைபடம் (மேப்), காலக்கோடு போன்ற வினாக்களுக்கு அவசியம் வினா எண் எழுத வேண்டும்.‌ எழுதி முடித்த பிறகு அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதி இருக்கிறோமா என்பதை உறுதிப் படுத்துங்கள். அதன் பிறகும் நேரம் இருந்தால் அறையில் அமைதியாக இருங்கள். அடுத்த மாணவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

தேர்வுகளுக்கு இடையே உள்ள விடுமுறை நாள்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு தேர்வு முடிந்த பிறகு அந்தத் தேர்வு பற்றி நண்பர்களுடன் கலந்துரையாட வேண்டாம். கேள்வித்தாளைப் பத்திரமாக வைத்துவிட்டு அடுத்த தேர்வுக்குப் படிக்கத் தொடங்குங்கள்.

தேர்வு முடிந்த பிறகு புத்தகங்களை அல்லது கேள்வித்தாளைக் கிழித்துக் கொண்டாட வேண்டாம். பேருந்துகள், இரு சக்கர வாகனங்களில் கொண்டாட்டம் எதுவும் வேண்டாம்.‌‌ உற்சாக மிகுதியில் அது ஆபத்தாக முடியலாம். கவனமாக இருப்பது அவசியம். ஏனென்றால், உங்களுக்கான தேர்வுதான் முடிந்திருக்கிறது. வாழ்க்கை இப்போதுதான் தொடங்குகிறது. வாழ்த்துகள்.

- கட்டுரையாளர், அரசுப் பள்ளி ஆசிரியர், ஆட்சிப் பேரவை உறுப்பினர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை; suriyadsk@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in