

உலகம் போற்றும் இந்திய அறிவியல் அறிஞர் சர்.சி.வி. ராமன். அவரைச் சிறப்பிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28ஆம் தேதி, ‘தேசிய அறிவியல் தினம்’ கொண்டாடப்படுகிறது.
சர்.சி.வி. ராமன் கண்டுபிடித்த ‘ராமன் விளைவுக் கொள்கை’யை இவ்வுலகுக்கு எடுத்துரைத்த நாள்தான் பிப்ரவரி 28. ‘ராமன் விளைவு’ கண்டுபிடிப்புக்காக 1930இல் அவர் இயற்பியலுக்கான ‘நோபல் பரிசு’ பெற்றார். இந்தியாவில் மட்டுமே படித்த ஒருவர், நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறை.
அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அறிவியல் கருத்துகளை மக்களிடையே பரப்புவது, அறிவியல் செயல்பாடுகள், கண்டு பிடிப்புகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவது, புதிய தொழில்நுட்பங்களைச் செயல்படுத்த வைப்பது போன்ற நோக்கங்களுக்காக ‘தேசிய அறிவியல் தினம்’ கொண்டாடப் படுகிறது. ஆண்டுதோறும் அறிவியல் தினத்துக்கான கருப்பொருள் அறிவிக்கப் படுவதும் வழக்கம். 2023ஆம் ஆண்டின் கருப்பொருள்: ‘உலகளாவிய நல்வாழ்வுக் கான உலகளாவிய அறிவியல்' என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
2024ஆம் ஆண்டின் கருப்பொருள்: ‘நிலையான எதிர்காலத்துக்கான அறிவியல்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, கழிவு மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்புக்கான உத்திகளைப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அதுமட்டுமல்ல, சுற்றுச்சூழலைப் பாதுகாத்துப் பொருளாதாரம் வளர்ச்சி பெற அனைத்து அறிவியல் நுட்பங்களையும் பயன்படுத்துவோம் என அனைவரும் உறுதியேற்போம்.