

இருக்கும் இடத்திலிருந்தே உலகைச் சுற்றிப் பார்க்க, பண்பாட்டு கலாச்சாரங்களை அறிய, தகவல் தெரிந்துகொள்ள ஆசையா? ‘Google arts & culture’ செயலி அதற்கு உதவுகிறது. இந்தச் செயலி கலை, பண்பாட்டுத் துறையில் ஆர்வமிகுந்தவருக்கான தகவல் களஞ்சியம்.
கற்றல் எளிது: கூகுள் ‘பிளே ஸ்டோர்’ அல்லது ஆப்பிளின் ‘ஆப் ஸ்டோர்’ தளங்களிலிருந்து இச்செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். இதில் தொகுக்கப்பட்டிருக்கும் தலைப்புகளைத் தேட, செய்திகளை வாசிக்க, தகவல் பகிர கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. செயலியைப் பதிவிறக்கம் செய்து, மின்னஞ்சல் முகவரியைப் பதிவுசெய்து பயன்படுத்தத் தொடங்கலாம்.
இதில் 'தேடு, விளையாடு, படி' என மூன்று தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். உலகின் பல்வேறு நாடுகளின் வரலாறு, கலை, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, ஃபேஷன், பயணம், உணவு, விளையாட்டு, அறிவியல் ஆகியவற்றின் தகவல்கள் சுவாரசியமாக ஒளிப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.
கிரீஸ் நாட்டின் பிரபல ‘அக்ரோபோலிஸ் அருங்காட்சியகம்’ முதல் ராஜஸ்தானின் பாரம்பரிய ‘சிந்தி சாரங்கணி’ இசைக் கருவி வரை பல்வேறு தலைப்புகளையும் தேடிப் படிக்கலாம். ஒவ்வொரு தலைப்பின் கீழும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் முறையில், ஆங்கில மொழியில் ஒரு பத்தியில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. ஒரு தலைப்பையொட்டி கிளை தலைப்புகளும் அதில் பரிந்துரைகளும் பயனர்களுக்குச் சுட்டிக் காட்டப்படுகின்றன.
கலையும் விளையாட்டும்: குழந்தைகள் முதல் பெரியோர் வரை இது அனைத்து வயதினருக்குமான செயலி. குழந்தைகளைக் கவரும் வகையில் கலை சார்ந்த தகவல்களுடன் கூடிய விளையாட்டுகளும் இச்செயலியில் உருவாக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு வசதி பொருந்திய விளையாட்டுகள், பயனர்களுடன் உரையாடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வார்த்தை விளையாட்டு, புதிர்கள், வினா விடை ஆகியவற்றுடன் வண்ணங்கள் பூசுவது, 3டி முறையில் மட்பாண்டங்கள் செய்வது போன்ற பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
வாசிக்க பார்க்க: உலகப் புகழ் பெற்ற அருங்காட்சி யகங்கள் பலவற்றின் அறியப்படாத தகவல்கள் செய்திகளாகத் தொகுக்கப் பட்டுள்ளன. உதாரணத்துக்கு, நெதர்லாந்தின் வின்சென்ட் வான் கோ அருங்காட்சியத்தின் ஓவியங்கள், வான் கோ படித்த புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு ஆகியவற்றின் தகவல்கள் வெவ்வேறு பகுதிகளாக சுவாரசியமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு பகுதியையும் தரைத் தளம், முதல், இரண்டாம், மூன்றாம் தளங்களாகப் பிரித்து ‘விர்ச்சுவல்’ பயணத்துக்குக் கூட்டிச் செல்ல இச்செயலியில் வசதிகள் உள்ளன.
என்ன பயன்? - உலக நாடுகளின் தொண்மையான கலாச்சாரம், நாகரிகம் போன்றவற்றின் தகவல்கள் எழுத்துக்களாக புத்தக வடிவில் கிடைப்பது வழக்கம். தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு எழுத்து வடிவிலான தகவல்களை ஒளிப்படங்களாக, காணொளிகளாக மாற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவற்றை இணையதளத்தில், யூடியூப் போன்ற சமூக வலைதளத்தில் தேடினால் காண வாய்ப்பு கிடைக்கும்.
திறன்பேசியின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் இந்தக் காலகட்டத்தில் கலை சார்ந்த தகவல்களை ஒரே செயலியில் உள்ளடக்கும் வேலையைத்தான் கூகுள் செய்து வருகிறது. தகவல்களைத் திரட்டத் திரட்ட இச்செயலியில் பதிவேற்றம் செய்து கொண்டே வருகிறது கூகுள். கொட்டிக்கிடக்கும் தகவல்களைப் பயன்படுத்த எளிது என்பது இச்செயலியின் சிறப்புகளில் ஒன்று. எனவே கலைத்துறை சார்ந்து இயங்குபவர், கல்வி கற்பவர், ஆராய்ச்சியில் ஈடுபடுபவருக்கான மிகவும் பயனுள்ள செயலி இது!