

வல்லியும் வள்ளியும்: வள்ளி, வல்லி இரண்டும் ஒன்றல்ல. எனினும் இவற்றின் வேறுபாடு பற்றி விளக்க வேண்டினார் முனைவர் கு.தயாநிதி. கலப்பையால் மண்ணை உழுதபோது வள்ளிக்கிழங்குடன் கிடைத்த குழந்தையே கு(ன்)றவர் மகள் வள்ளி. ‘வள்ளி திருமணம்’ புகழ்மிக்க மரபுக் கதை.
தமிழ் ‘வள்ளி’, புராணங்களின் வழியாக ‘வல்லி’ ஆனார். வல்லி, வலிமையான கொடி. காமவல்லி (கற்பகத் தருவில் படரும் கொடி), மரகதவல்லி (தரும தேவதை/பார்வதி) போலும் பெண் தெய்வங்கள் பல. ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ என்பது பக்திப் பாடல். ‘இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தா, இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்’ – பட்டுக்கோட்டையாரின் காதல் பாடல்.
பாரியின் பறம்பு மலையில் தானாக விளையும் நால்வகைப் பொருளில் வள்ளிக் கிழங்கையும் சொல்கிறார் கபிலர். ‘கொழும் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே’-புறம்-109/6. இத்துடன், வள்ளி எனும் சொல், சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது. வல்லி–கொடி-கிழங்கு எனும் பொருளில் ஓரிடத்திலும் இல்லை. ஆக, வள்ளி என்பது தமிழ் மரபில் வந்த பெயர். வல்லி என்பது பின்வந்த புனைவுப் பெயர்.
புறமும் புரமும்: ராமநாதபுரம், விழுப்புரம் இவற்றில் இடையின ‘ர’ வருகிறது. புறநானூறு, நகர்ப்புறம் இவற்றில் வல்லின ‘ற’ வரும். வேறுபாடு என்ன?
கையின் உள்பக்கத்தை ‘உள்அகம்கை’ - ‘உள் ளங்கை’ என்றும், வெளிப் பக்கத்தைப் ‘புறம்கை’- ‘புறங்கை’ என்றும் சொல்கிறோம். சங்க இலக்கியத்தில் ‘அகம்’ (காதல்) அல்லாத வீரம், அறிவு, பண்பு போல்வன ‘புறம்’ எனப்படும். அப்படியான 400 பாக்களின் தொகுப்பே புறநானூறு. பேருந்து சிலவற்றில், ‘கரம் சிரம் புரம் நீட்டாதே’ எழுதியிருக்கும். ஆனால், இங்கு, ‘புறம்’ என்பதுதான் சரி.
‘புரம்’ என்பது நகரில் மக்கள் வாழும் பகுதி. பெங்களூருவில் ‘கே.ஆர்.புரம்’, கோவையில் ‘ஆர்.எஸ்.புரம்’, புதுக் கோட்டையில் ‘காமராசபுரம்’ போல, ‘புரம்’ என முடியும் ஊர்கள் 90 உள்ளதாக கவிஞர் மகுடேசுவரன் சொல்கிறார். சான்றோர் நினைவாக வைக்கப்பட்ட இடப்பெயர்கள் இவை. ‘கலைஞர் கருணாநிதி’ நகரை ‘கே.கே.நகர்’ என்பது போலச் சுருக்கி, நம் வரலாற்றை, அடுத்த தலைமுறை அறியாதபடி நாமே மறைக்கலாமா?
பளபள கலகல: ‘பங்குச் சந்தை ‘மளமள’வென்று சரிந்தது என்று செய்தியில் வருவது சரிதானா?’. ‘சரசர’வென்று சரிவதுதான் சரி. எனினும், விரைவுப் பொருளில் இப்படிச் சொல்லலாம். இரட்டைக்கிளவி என்பது, இரட்டைச் சொல்லாக மட்டுமே வரும், பிரித்தால் பொருள் தராது, குறிப்பாகவே பொருள் தரும். ‘இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்து இசையா’ -தொல்காப்பியம்-531. ‘மளமள’ன்னு வேலைய முடிச்சா, ‘விறுவிறு’ன்னு கிளம்பிட்டா, ‘கலகல’ன்னு இருப்பான், ‘வழவழ’ன்னு பேசுவான் - என்பன நடைமுறைப் பேச்சில் இலக்கணம்.
ஆனால், ‘சுள்ளு சுள்ளுனு கோவம் வருது’ என்றால் அது ‘அடுக்குத் தொடர்’. ஏனெனில் ‘சுள்' என்கிற ஒரு சொல்லே பொருள் தந்துவிடுகிறதே. ‘ஜல்ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி’, ‘சலசல சலசல இரட்டைக் கிளவி’ போலும் திரைப் பாடல்கள் அடுக்கி வந்தாலும் பிரித்தால் பொருள் தரா. ஓசை இனிமை கருதி, இலக்கணத்தை மீறி வந்த இரட்டைக் கிளவிகள் இவை எனலாம்.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com