ஆங்கிலம் அறிவோமே 4.0: 70 - ‘மாஸ்டர்’ யார்?

ஆங்கிலம் அறிவோமே 4.0: 70 - ‘மாஸ்டர்’ யார்?
Updated on
2 min read

# ‘Reunion’ என்பது தம்பதிக்கிடையே நடைபெறுவது மட்டுமா?

‘Family reunion’, ‘high school reunion’ போன்றவற்றைக் கேள்விப்பட்டதில்லையா? நீண்டநாள் பார்க்காமல் இருந்த ஒரு குழுவினர் திட்டமிட்டு ஒரு நாளில் கூடும்போது அதை ‘reunion’ என்கிற சொல்லால் குறிப்பிடுவார்கள்.

# ‘Remainder’, ‘reminder’ என்ன வேறுபாடு? அடிக்கடி இவற்றை மாற்றிப் பயன்படுத்திவிடுகிறேன்.

‘Remainder’ என்பதன் அடிப்படை ‘remain’. ‘Reminder’ என்பதன் அடிப்படை ‘remind’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். ‘I ate most of the food and gave the remainder to a beggar’ என்றால் உணவின் பெரும் பகுதியை நான் உண்டுவிட்டு மீதத்தை ஒரு யாசகருக்குக் கொடுத்துவிட்டேன் என்று பொருள்.

கணிதத்தைப் பொறுத்தவரை மீதம் என்பதுதான் ‘remainder’. இருபது என்கிற எண்ணை மூன்றால் வகுத்தால் ஆறு என்பது ஈவு. இரண்டு என்பது ‘remainder’. ஆக ‘remainder’ என்பது மீதம். ‘Remind’ என்பது நினைவுபடுத்துதல். ‘He forgot to pay the rent. So the landlord sent him a reminder.’ ‘She kept the peacock feathers as a reminder of her school days.’

# ‘மாஸ்டர்’ என்பது சிறியவர்களைக் குறிக்கிறதா அல்லது பெரியவர்களையா?

திரைப்படக் காணொளிகளில் ‘மாஸ்டர் பிரபாகர்’, ‘மாஸ்டர் தர்’ என்று சிறியவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதைக் கவனித்திருக்கலாம். கடந்த மூன்று நூற்றாண்டுகளாக, வளர்ந்த ஆண்களை ‘Mister’ என்றும், சிறுவர்களை ‘Master’ என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், ‘மாஸ்டர்’ என்பது பொதுவாக, அதற்கும் முந்தைய காலக்கட்டத்திலிருந்தே இரண்டு வகையைச் சேர்ந்தவர்களைத்தான் குறிக்கும். ஒன்று, தனக்கெனப் பணியாள்கள் வைத்திருப்பவர். ‘Master and servant.’ இரண்டு, ஏதாவது ஒரு பெரும் ஆற்றல் கொண்டவர் அல்லது திறமைசாலி. ‘Stunt master’, ‘dance master.’

இப்போதெல்லாம் தங்கும் இடங்களில் ‘விசாலமான’ என்பதைக் குறிக்கவும் மாஸ்டர் என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘Master bedroom’ (Master bathroom என்பதும் உண்டு என்பது சிலருக்கு வியப்பை அளிக்கலாம். ‘Verb’ஆகப் பயன்படுத்தப்படும்போது ஒரு திறமை கைவரப் பெறுவதை அது குறிக்கிறது. ‘I have mastered Tamil.’ ஒன்றைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதையும் அது குறிக்கும். ‘I managed to master my phobia.’

# ‘Mockery of justice’ என்பது எதைக் குறிக்கிறது?

ஒன்றை ‘mock’ செய்வது என்றால் கேலி செய்வது என்று பொருள். ஒருவர் பேசும் விதத்தைக் கிண்டலாக அதே போல பேசிக் காட்டினால் அதை ‘mockery’ என்பதுண்டு.

எள்ளல், பரிகாசம், நக்கல் போன்றவை ‘mockery’ என்பதற்கான நடைமுறைச் சொற்கள். வழக்கு தொடங்குவதற்கு முன்பாகவே நீதிபதி அது தொடர்பாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்றால் ‘the trial would be a mockery’ என்பார்கள்.

# காசநோயை எதனால் ‘TB’ என்று அழைக்கிறார்கள்?

அது ‘tuberculosis’ என்பதன் சுருக்கம். லத்தின் மொழியில் ‘tuber’ என்றால் வீக்கம். ‘-osis’ என்றால் பாதிக்கப்பட்ட அல்லது நோய் வாய்ப்பட்ட தன்மை. நுரையீரலை பாக்டீரியாக் கிருமிகள் பாதிக்கும்போது உண்டாகக்கூடிய காசநோயை ‘டி.பி' என்கிறார்கள். அப்போது நுரையீரலில் சிறிய வீக்கங்கள் போன்றவை புலப்படுவது வழக்கம்.

ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் இந்த நோயை ‘consumption’ என்று குறிப்பிட்டனர். ஆரோக்கியத்தைப் பெரிதும் ‘உண்டுவிடும்’ தன்மை கொண்டது என்பதால் இந்தப் பெயர். மருத்துவம் முன்னேறாத காலக்கட்டத்தில் மிகப் பலரும் காசநோயால் இறந்ததுண்டு. அந்தவிதத்தில் ஆயுளையும் ‘உண்ணக் கூடிய’தாக இருந்தது இந்த நோய்.

சி|ப்|ஸ்

‘Dongle’ என்பது என்ன? - ஒரு கணினியை இன்னொரு சாதனத்துடன் இணைக்கும் ஒரு சிறிய ‘hardware’.

‘Gist’ என்றால்? - ஒன்றின் முக்கியப் பகுதி.

அந்திவேளை என்பது ஆங்கிலத்தில்? - ‘Twilight’. ‘Dusk’.

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in