ஆங்கிலம் அறிவோமே 4.0: 69 - அதென்ன ‘Friendily’?

ஆங்கிலம் அறிவோமே 4.0: 69 - அதென்ன ‘Friendily’?
Updated on
2 min read

‘Self-adulation' என்பது தன்னைப் பற்றி உயர்ந்த கருத்து கொண்டிருப்பதா? - அது மட்டுமல்ல. தன்னையே மிக அதிகமாகப் பாராட்டிக்கொள்வது என்கிற எதிர்மறை அர்த்தமும் அதில் கலந்திருக்கிறது. கவிஞர்கள், பாடலாசிரியர்கள் சில வரிகளைப் புனையும்போது தங்களைத் தாங்களே வியந்து பாராட்டிக் கொள்வதுண்டு. அது ‘self-adulation’.

‘காளிதாசன் கம்பதாசன் கவிதை நீ..’ என்கிற பாடல் வரி ‘adulation.’ வேறு கவிஞர்களை இந்தக் கவிஞர் பாராட்டுகிறார். எனவே, இது ‘self-adulation’ அல்ல. ஆனால், 'கண்கள் அருகே இமை இருந்தும் கண்கள் இமையைப் பார்ப்பதில்லை. இந்த உவமை கொஞ்சம் புதுமை’ என்று எழுதுவது மிதமான ‘self-adulation’. ‘இது கம்பன் பாடாத சிந்தனை உன் காதோடு யார் சொன்னது..?’ என்று எழுதும்போது அது அதிகப்படியான ‘self-adulation’ என்று கருதப்பட வாய்ப்பு உண்டு.

‘Ailing’ என்கிற சொல் ஒருவர் குணமாவதைக் குறிக்கிறதா அல்லது நோய்வாய்ப்படுவதைக் குறிக்கிறதா? - கிராமத்தில் இருக்கும் என் ‘ailing grandmother’ ஒருவரைக் காணச் சென்றேன் என்பது உடல்நலமின்றி இருக்கும் பாட்டியைக் குறிக்கிறது. ‘Ailing economy’ என்பது நலிவடைந்துள்ள பொருளாதாரத்தைக் குறிக்கிறது. ‘We should give a boost to our ailing economy.’

‘Toner’ என்பது ஜெராக்ஸ் கடை களில் கறுப்பு நிறப் பொடியைக் குறிக்கிறது. கறுப்பைக் குறிக்கும் இந்தச் சொல்லைப்போய் ஓர் அழகு சாதனப் பொருளாகவும் விவரிக்கிறார்களே? - கறுப்பு என்பதை எதிர்மறையாக நீங்கள் கருதுவது தவறு. மற்றபடி ‘Toner’ என்பதை அழகு சாதனப் பொருளாகக் குறிக்கும்போது தோலைச் சுத்தம் செய்யும் ஒருவித ‘லோஷ’னைக் குறிக்கிறார்கள். கணினிகளுக்கான ‘பிரிண்டர்’, நகல் எடுக்கும் இயந்திரத்துக்கான கறுப்பு மசியை ‘toner’ என்பர்.

‘Friendily’ என்று தவறாக ஒரு முறை எழுதிவிட்டேன். ‘Spell check’ சிவப்பு அடிக்கோடு இடக் காணோமே? - அடிக்கோடிடத்தான் வாய்ப்பு அதிகம். ஆனால், தவறான எழுத்துகளைக் கொண்டதாகக் (அதிகப்படி‘i’) கருதினாலும் அப்படி ஒரு வார்த்தையை இப்போது ஏற்றுக்கொள்கிறார்கள். அதை ‘adverb’ஆகப் பயன் படுத்துகிறார்கள். ‘He friendily questioned me on my goal.’

‘Breath’, ‘breathe’ என்ன வித்தியாசம்? - ‘Breath’ என்பது ‘noun’ – சுவாசம். ‘Breathe’ என்பது ‘verb’ – சுவாசித்தல். ‘Bated’ என்றொரு சொல் உண்டு. இதற்கு ‘குறைகிற’ என்று பொருள். ‘Bated hopes’ என்றால் ‘குறையும் நம்பிக்கை.’ ‘Bated enthusiasm’ என்றால் ‘குறையும் உற்சாகம்’. ‘He listened with bated breath’ என்பது ‘மூச்சே நின்றுவிட்டது’ எனப்படும் நிலை. அதாவது, மிகப் பதற்றத்துடன் கேட்டான் என்று பொருள்.

‘Proletariat’, ‘Working class’, ‘Labour’ இந்தச் சொற்கள் ‘தொழிலாளிகள்’ என்பதைக் குறிக்கின்றனவா? வேறுபாடு இருப்பின் எளிமைப்படுத்திய விளக்கம் சொல்கிறீர்களா? - ‘The working class’ என்பது தங்கள் உழைப்பை விற்பவர்களைக் குறிக்கிறது. இத்தகைய மக்களை ‘proletariat’ என்றும் குறிப்பிடுவதுண்டு. ‘Labour’ என்பது வேலை மட்டு மல்ல, கடுமையான வேலை. உடல் உழைப்பு தேவைப்படும் வேலை. இதன் காரணமாகத்தான் பிரசவத்தைக்கூட ‘labour’ என்று குறிப்பிடுகிறார்கள்.

‘Resort’ என்றால் கேளிக்கைக்கான இடம் என்பது புரிகிறது. ‘Last resort’ என்பது வேறு பொருள் கொண்டதா? - விடுமுறையைக் கழிப்பதற்காக மக்கள் அதிக எண்ணிக்கையில் வரும் இடம் ‘resort’ (இதை ரிஸார்ட் என்று உச்சரிக்க வேண்டும்). ‘Last resort’ என்றால் கடைசிப் புகலிடம். ‘Resort’ என்பது ‘verb’ஆகப் பயன் படுத்தப்படும்போது அதற்கு எதிர்மறைப் பொருள் வருகிறது. வேறு வழி இல்லை என்பதால் (அல்லது அப்படி எண்ணிக்கொள்வதால்) மனம் ஏற்றுக் கொள்ளாது ஒன்றைச் செய்வது. (இதை ‘ரெஸார்ட்’ என்று உச்சரிக்க வேண்டும்).

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in