

தசையும் சதையும்: தமிழில் ‘தசை’ எனும் சொல்லைப் புறநானூறு (மான்தசை-177) முதலான இலக்கியங்களும், அகரமுதலிகளும் (Dictionary) சொல்கின்றன. பாரதியார், புகழ்பெற்ற ‘நல்லதோர் வீணை' பாடலில் ‘தசையினைத் தீ சுடினும்' என்கிறார். இந்தத் ‘தசை’ இப்போது, ‘சதை’ என்றே முன்-பின்னாகப் புழங்குகிறது. எழுத்தாளர் பலரும் பேச்சு வழக்கில் உள்ள இச்சொல்லையே பயன்படுத்துகின்றனர். ‘சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே' – கவிஞர் இன்குலாப். ‘ரத்தமும் சதையுமா’ வழக்கில் உள்ள இந்த மாற்றத்தை இலக்கணமும் ஏற்றுக் கொள்கிறது.
அலரி, கதுவாலி தெரியுமா? - இல்வாய்-வாயில்–வாசல், கால்வாய்–வாய்க்கால், புறநகர்-நகர்ப்புறம், முன்றில்-இல்முன், அலரி-அரளி, கொப்புளம்-பொக்குளம், கதுவாலி-கவுதாரி (கௌதாரி), தானைமுன்-முன்றானை (முந்தானை), புறக்கடை - கடைப்புறம் ; இப்போது ‘புழக்கடை’ என்றே புழங்குகிறது. இவ்வாறு, சொல்-பொருள் மாறாத வகையில், எழுத்துகள் மட்டும் இடம் மாறுவதை, ‘இலக்கணப் போலி’ என ஏற்கிறார் நன்னூலார் (267) இதற்காகப் பொருள் பொருந்தாத வகையில், சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.
புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் ‘பகலிரவு பாராமல்’ என்று எழுதியிருப்பதைப் பற்றி, திருச்சி எழுத்தாளர் நவஜீவன் வருந்தினார். பகல்தான் உழைப்பிற்கு உரியது, இரவிலும் ஓய்வில்லாமல் உழைப்பதை, ‘இராப்பகல் பாராமல்’ என, இரவை முன்னிறுத்தும் தொடரை அன்றி, ‘பகலிரவு’ எனும் சொல் எப்படி உணர்த்தும்? திருத்தம் கோரும் நண் பரின் வருத்தம் சரியானது தானே?
கலைஞ்சர், கலைஞர்? கும்பகோண மக்களின் ‘நுப்பது’ போல, கோவை நண்பர் ஒருவர், கலைஞரைக் ‘கலைஞ்சர்’ என்றும், வேறுசிலர் இளைஞரை ‘இளைநர்’ என்றும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இது தமிழில் உள்ள இன எழுத்து – ஆங்கில உச்சரிப்பு - மயக்கத்தின் ஒரு வகை என்றே தோன்றுகிறது.
இச்சொற்களை ஆங்கிலத்தில் ‘kalaignar’ என்றும் ‘Elaignar’ என்றும் எழுதுவதன் ஒலி மயக்கமே அன்றி, பிழையான உச்சரிப்புகள் இவை. ஊடகம் தவிர, மக்கள் புழங்கும் சொற்களின் உச்சரிப்புக் குழப்பம் பற்றி விரிவாக எழுத வேண்டியுள்ளது. சில சொற்களைப் பார்ப்போம்.
வடமொழிச் சொல்முன் ஒற்று மிகாது: ‘பு(Pu)த்தகம்’ என்பதை ‘பு(Bu)த்தகம்’ என்றும், ‘கா(Kaa)லி’ என்பதை கா(Gaa)லி என்றும் –பெரும்பாலும் உச்சரிப்பது தவறு. பிறசொல் புழங்கும்போதும் அது தமிழாகி, தமிழ் உச்சரிப்பே பெறும். வான்மீகி இராம கதையைத் தமிழில் எழுதிய கம்பர், பாத்திரப் பெயர்களைத் தூய தமிழில் தந்ததைக் கவனிக்க வேண்டும். கம்ப ராமாயணத்தில் ‘கிரந்த’ எழுத்துக்கு இடமில்லை. ராம்-இராமன், சீதா-சீதை, லக்ஷ்மண்-இலக்குவன், ராவண்-இராவணன் என, தமிழ்ப்படுத்திய சிந்தனை, வெறும் சொல் மாற்றம் மட்டுமல்ல பண்பாட்டுக் காப்புரிமை.
முனைவர் அ.ஞானசம்பந்தன் உலகறிந்த பட்டிமன்ற நடுவர். புலவர் கோ.ஞானச்செல்வன், தமிழ் இலக்கணக் கடல். ‘இருவரில் ஒருவர் பெயரில் மட்டும் ‘க்’ ஒற்று வருவது எப்படி?’ என்று ஒருவர் கேட்டார். ‘ஞானம்’ பொதுவாயினும், வந்து சேரும் ‘சம்பந்தன்’ வடமொழி, ஒற்று மிகாது. ‘செல்வன்’ தமிழ்ச் சொல், எனவே ஒற்று மிகும். அவ்வளவுதான்.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com