

‘ஒரு’ ‘ஓர்’ - வரும் இடங்களை நினைவு படுத்திக்கொள்வோம். வரும் சொல் உயி ரெழுத்தில் வந்தால் ‘ஓர்’ வரும் (ஓர் உலகம்). வரும் சொல் உயிர்மெய்யில் வந்தால் ‘ஒரு’ வரும் (ஒரு வீடு). இவை போலும் சில சொற்களில் ‘இது இங்குதான் வரும்’ என்னும் படியான சொற்கள் பல உள்ளன. இவை வரக்கூடிய இடம் அறிந்து பயன்படுத்தினால் தொடர்களின் பொருளும் அழகும் கூடுமல்லவா?
‘ஆல்’ ‘ஆன்’ எங்கே வரும்? - ‘ஆல்’ ‘ஆன்’ - மூன்றாம் வேற்றுமை உருபுகள், எங்கே வரும்? வரும் சொல் உயிர்மெய்யில் வந்தால், ‘ஆல்’ வரும். ‘காலத்தினால் செய்த நன்றி’ (குறள்-102). வரும் சொல் உயிர் எழுத்தில் வந்தால், ‘ஆன்’ வரும். ‘ஒல்லும் வகையான் அறவினை’ (குறள்-33). இரண்டும், ஒரே குறளில் - ‘புறந்தூய்மை நீரான் அமையும், அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்’ (குறள் 298).
‘தொறும்’ ‘தோறும்’ எங்கே வரும்? - வரும் சொல் உயிர் மெய்யில் வந்தால் ‘தொறும்’ வரும். ‘நாள்தொறும் நாடி’ (குறள்-553). வரும் சொல் உயிரெழுத்தில் வந்தால் ‘தோறும்’ வரும். ‘உறுதோறு உயிர்தளிர்ப்ப’ (குறள்-1106). இரண்டும் ஒரே குறளில் - ‘களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படும் தோறும் இனிது’ (குறள்-1145.) இந்த இலக்கணம் பற்றிக் கவலைப்படாமல் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ என்று ஒரு புதினமே எழுதிய, புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன், இந்த இலக்கணத்தில் நிற்காதவர். சமூக இலக்கணமே குலைந்துகிடப்பது பற்றிச் சரியாக எழுதியவர் என்பதால், அவரை நாம் குறை சொல்ல வேண்டிய தில்லை. சமூகம் சரியாக இருந்தால் தான் வாழ்க்கை, மொழி, இலக்கியம், பிறகுதானே இலக்கணம்?!
‘ஒடு’ ‘ஓடு’ எங்கே வரும்? - வரும் சொல் உயிர்மெய்யில் வந்தால் ‘ஒடு’ (குறில்) வரும். ‘தவத்தொடு தானம்’ (குறள்-295.) வரும் சொல் உயிரெழுத்தில் வந்தால் ‘ஓடு’ (நெடில்) வரும்.‘பொறுத்தானோடு ஊர்ந்தான்’ (குறள்-37). இரண்டும் ஒரே குறளில் - விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றோரோடு ஏனை யவர் (குறள்-410). இவை ‘உடன் நிகழ்வு’ பொருளில் வரும் என்பதால் ‘ஒடு’ ‘ஓடு’ எனும் சொற்களின் மற்றொரு வடிவமான ‘உடன்’ என்பதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றும் இலக்கணம் சொல்கிறது.
எடுத்துக்காட்டாக - ‘சட்டமன்ற உறுப்பினருடன், அமைச்சர் வந்தார்’ என்பது சரியான சமூக-மதிப்பீடு அல்ல. ‘அமைச்சரோடு சட்டமன்ற உறுப்பினர் வந்தார்’ என்பதே சரியான தமிழ் மரபுத் தொடர் என்கிறது இலக்கணம். ‘ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே’ - (தொல்காப்பியம்-575)
‘உடன் நிகழ்வு’ இலக்கணம், அழைப்பிதழில் எந்த வரிசையில் பெயர் போடுவது, எவர் பெயரை எந்தளவில் அச்சிடுவது என்பது வரை நீள்கிறது. இந்த நடைமுறை இலக்கணம் தெரியாதவர்க்கு, உலக நடப்புப் புரியவில்லை என்றே பொருள். இவை போலும் இலக்கணம் தொடர்பான குறிப்புகள் பலவற்றை, தமிழ்நாடு அரசே வெளி யிட்டுள்ளது.
(தொடரும்)
- muthunilavanpdk@gmail.com