தமிழ் இனிது - 32: முகம் ‘சுழிக்க' வைக்கலாமா?

தமிழ் இனிது - 32: முகம் ‘சுழிக்க' வைக்கலாமா?

Published on

சுளித்தல் - சுழித்தல்: தமிழாசிரியர் முனைவர் மகா.சுந்தர், ‘முகம் சுளித்தல்’ என்பதை, பலரும் ‘சுழித்தல்’ என்றே எழுதுவதாக வருத்தப்பட்டார், உண்மைதான். ‘மனநிறைவு இன்மை’யை முகத்தில் காட்டுவதை, ‘முகம் சுளித்தல்’ என்பார்கள். கோவக் குறிப்பை, ‘முகம் கறுத்தான் / கண் சிவந்தான்’ என்பர். எனினும், ‘சுழித்தல்’ என்பது தவறான வழக்கு, ‘சுளித்தல்’ என்பதே சரி. ‘ளி-ழி’ குழம்பியது எப்படி? நம் தமிழர்களின் உச்சரிப்புச் சிறப்பு, ‘உலகப் புகழ்’ பெற்றதாயிற்றே. பழம்-பலமாகும், உளுந்து-உழுந்தாகும்.

அதுவே நாளடைவில் எழுத்திலும் வந்து குழப்பும். பொருளில் தெளிவாகக் கவனமாக இருந்தால், எழுத்துப் பிழையும் குறையும். உதடு ‘சுழிப்பது’ என்றால், நெருங்கியவரிடம் ‘பொய்க்குறிப்பு’ காட்டுவது. ‘சுழி’ என்பது ‘இன்மை’ (0-ZERO) என்பதற்கான அழகு தமிழ்ச் சொல். இதை, ‘பூஜ்ஜியம்’ என்று சொல்வது, ‘முகம் சுளிக்க’ வைக்காதோ?

தொடர்ப் பிழை கவனிக்க: ஜனவரி 11 2024, காலை 6.45 மணி - கோடைப் பண்பலை வானொலிச் செய்தியாளர், ‘அனைத்து மத்திய அரசின் துறைகளும்...’ என்னும் தொடரைச் சிலமுறை சொன்னார். மத்திய அரசு எத்தனை இருக்கிறது? ஒன்றுதானே? செய்தி வாசித்தவர், இந்தத் தொடரை, ‘மத்திய அரசின் அனைத்துத் துறைகளும்’ என அமைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். ஊடகச் செய்தியாளரும், வாசிப்போரும், அச்சிடுவோரும், இவை போலும் தொடர்களின் நுட்பம் அறிந்து, தொடர்களை அமைத்தால், இளந்தமிழர் அறிந்து வளர்வார்கள்.

சீண்டுதல் - சீந்துதல் - 2017ஆம் ஆண்டு, பொங்கலை ஒட்டிய நாள்களில், சென்னை மெரினாவை மையமிட்டு, உலகமே வியந்து பார்த்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், தீயாய்ப் பற்றித் தெறித்த முழக்கம் - ‘சீண்டாதே! சீண்டாதே! தமிழர்களைச் சீண்டாதே’. சீண்டுதல் – வெறுப்பேற்றுதல். லட்சக்கணக்கான இளைஞர் முழக்கங்களின் பக்கவிளைவாக, அதே மணல்வெளியில் ‘சீந்து’வாரற்றுக் கிடந்தன பன்னாட்டுக் குளிர்பானக் குப்பிகள். சீந்துதல் – மதித்தல். இவ்விரு சொற்களையும் இவற்றின் வேறுபாடறிந்து பயன்படுத்த வேண்டும்.

ஐந்நூறா? ஐநூறா? - பாரதி சொல்வதுபோல, ‘ஓரிரண்டு வருஷத்து நூல் பழக்கமுள்ள’ எளிய மக்களை மறந்த எந்த மொழியும் வளர முடியாது. மக்கள் மொழி, கொஞ்சம் ‘கலப்பட’மாகத்தான் இருக்கும். மொழிக்கு முதலிடம் தரும் ‘தூய புலவர் மொழி’ வேறு. இரண்டுக்கும் பயனுண்டு. இவற்றை, இடமறிந்து பயன்படுத்தி மொழி வளர்க்கும் இலக்கணமே நமது தேவை. ‘ஐநூறு’, ‘செய்நன்றி’, ‘பொய்மை’, ‘கைமாறு’ என்பன மக்கள் தமிழ்.

‘ஐந்நூறு’, ‘செய்ந்நன்றி’, ‘பொய்ம்மை’, ‘கைம்மாறு’ - இலக்கியத் தமிழ். ‘கைம்மாறு’ – திருவாசகம் - திருச்சதகம்-5, ‘செய்ந்நன்றி’ –குறள்-110, ‘பொய்ம்மை’ - கம்பராமாயணம்-9106 என இலக்கியங்கள் சொல்ல, ‘தனிக் குற்றெழுத்தை அடுத்த ‘ய’ முன்னும், தனி ‘ஐ’ முன்னும் வரும் மெல்லினம் மிகும்’ (158) என்று இலக்கணமும் சொன்னார் நன்னூலார்.

தமிழ் வளர்ச்சித் துறையின் ‘சொற்குவை’யிலும் ‘ஐநூறு’ உள்ளது. ‘பொய்மை’, ‘செய்நன்றி’, ‘கைமாறு’ என ‘மெய் மிகா’ச் சொற்கள், அச்சு நூல்களிலும் வந்துவிட்டன. இவற்றை ஏற்கலாம் என்பதே என் கருத்து. மக்கள் வளர்ச்சிக்கான மொழிக்கு நாம் செய்யும் ‘கைமாறு’ இதுதான்.

(தொடரும்)

- muthunilavanpdk@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in