

1 நீங்கள் பெரிதும் மதிக்கும் உயர் அலுவலர் ஒருவர், உங்களிடம் கூடுதலாக ஒரு வேலை சொல் கிறார். அது உங்கள் வேலையில்லை; அது பிடிக்கவும் இல்லை. அவர் குறிப்பிடும் நேரத்துக்குள் முடிப்பதும் கடினம். எப்படி இதை மறுப்பது?
2 அன்பிற்குரிய நண்பர் / உறவினர் உங்களிடம் கடன் கேட்கிறார். அவரால் திருப்பித் தர வாய்ப்பில்லை என்று தெரிகிறது. எப்படி மறுப்பது.?
இப்படிப் பிடிக்காத, செய்ய முடியாத, சிக்கலான விஷயங்களில் நாம் ஈடுபடுத்தப் படும்போது, எனக்கு இது ‘பிடிக்கல', ‘வேண்டாம்’, ‘மாட்டேன்', ‘முடியாது' , ‘நோ' - என்று நம்மால் சொல்லிவிட முடிகிறதா?
“ஐயோ, அவர்கிட்ட எப்படி வேணாம்னு சொல்றது?”
“நம்மைவிடப் பெரியவங்ககிட்ட, எப்படி மாட்டேன்னு சொல்றது?”
“அப்படிப் பிடிக்கலைன்னு சொல்லிட்டா என்னைத் தப்பா எடுத்துப்பாங்களே...”
“இந்த இடத்தில் மறுத்துப் பேசினால் சண்டை வந்திடுமோ?”
“வேண்டாம்னு சொல்லிட்டா கோவிச்சுப்பாங்களோ!”
இப்படிப் பல காரணங்கள் நம்மிடமே இருக்கின்றன. நாம் நினைப்பதை வெளிப்படுத்த நாமே பழக்கப்படவில்லை. குழந்தை களுக்குச் சொல்லித் தருவதற்கு முன்னால் முதலில் நாம் ‘நோ' சொல்லிப் பழக வேண்டும்.
மறுத்தல் திறன்: மறுத்தல் திறன் (Refusal skill) பற்றிய போதிய விழிப்புணர்வு இங்கு இல்லை. இந்தத் திறனைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதில் அல்லது குழந்தைகள் மறுத்துப் பேசுவதை அனுமதிப்பதில் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடுகையில் நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோம்.
மறுத்தல் என்பது ஒரு திறன் எனக் கொள்வதிலேயே இங்கு சிக்கல் இருக்கிறது. குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் முன்பு பெற்றோருக்கான விழிப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
கல்வியில் ‘நோ’ இருக்கிறதா? - மறுத்துப் பேசும் திறனை (refusal skills) நாம் குழந்தைகளிடம் வளர்ப்பதில் மட்டு மல்ல; அப்படியொன்று இருப்பதையே கல்வி அமைப்பு கவனத்தில் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் கல்வியாளர் ச.மாடசாமி இந்தத் திறன் குறித்துத் தொடர்ந்து பேசிவருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு பாடத்தில் இணைக்கப்பட்டு, பின்னர் அந்தப் பகுதியை நீக்கி விட்டதையும் சுட்டுகிறார். தற்போது பள்ளிக்கல்வித் துறையின் வாசிப்பு இயக் கத்தில் ‘நோ சொல்லு’ எனும் தலைப்பில் 16 பக்க சிறு நூல் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
‘பெரியவங்க பேச்சைத் தட்டக் கூடாது’ என்கிற இந்திய மனநிலையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். சரியான புரிதலோடு மறுத்துப் பேசும் புதிய தலைமுறை உருவாக நம் பள்ளிக் கல்வித்துறை, இத்திறன் வளர்ப்பைப் பரிசீலிக்க வேண்டும்.
வரலாறு உண்டு: மறுத்தலின் வழிதான் இங்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக் கின்றன. காந்தியின் ஒத்துழை யாமை இயக்கம் ஒரு மாபெரும் ‘நோ' சொன்ன இயக்கம். புத்தர் சொன்ன ‘நோ' ஒரு போரையே நிறுத்தியிருக்கிறது. பெண்சார் மூடநம்பிக்கைகள், கற்பிதங் களுக் கெல்லாம் சாவித்ரிபாய் புலே மறுத்துப் பேசியதால் தான் பெண் களுக்கான பள்ளிகளே உருவாகத் தொடங்கின.
பேருந்துப் பயணங்களில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடம் காட்டிய பாகுபாட்டிற்கு எதிராக ‘நான் எழுந்திருக்க முடியாது’ என ரோசா பார்க்ஸ் சொன்ன ஒரு ‘நோ’, அவர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தந்தது. இவ்வரலாறுகளில் புதைந்து கிடக்கும் மறுத்தல் திறன் (Refusal skill) பற்றிய பார்வையோ அதுபற்றிய கற்பித்தலோ நம்மிடம் இல்லை.
குழந்தைகள் மீதான வன்முறை: மறுத்துப் பேசுதல் என்பது ஒரு திறன்; பல சிக்கலான சூழலில் இருந்து விடுபட நம் குழந்தைகளுக்கு உதவப் போகிற திறன். சின்ன விஷயங்களில் மறுத்துப் பேசிப் பழக்கப்படுத்தப்படும் குழந்தைகளே உறவுகளால் / பெரியவர்களால் சீண்டலுக்கு ஆள்படும் நேரத்தில் தயக்கமும் பயமுமின்றி ‘நோ’ சொல்ல முடியும். இத்திறன் விளைவின் மிக முக்கியமான இடமிது; பாலியல் தொந்தரவு நோக்கிலும் இத்திறன் ஒரு தற்காப்பு.
முதலில் நம் வீட்டுக்குள் சின்ன சின்ன விஷயங்களில் மறுப்பை அனுமதிப்போம். பணிவு வேறு, மறுத்துப் பேசி தன் உணர்வை வெளிப்படுத்துவது வேறு.
‘மறுத்துப் பேசுவது மரியாதை குறைவில்லை’ என்பதைப் பெரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ‘எனக்கு இது பிடிக்கும்’ எனக் குழந்தைகள் சொல்வதை ஏற்கும் நாம், ‘எனக்கு இது பிடிக்காது’ என்பதையும் ஏற்கப் பழக வேண்டும். அதுவும் அவர்களின் சுயவிருப்பம்தான் என்பதை உணர வேண்டும். தமிழில் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘எம்டன் மகன்’ போன்ற திரைப்படங்கள் குழந்தைகளின் விருப்பத்தைப் பற்றி புரிந்துகொள்ள எளிய உதாரணங்கள்.
தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் சுதந்திரம் வீட்டில் இருந்தாலே அந்தக் குழந்தை எதையும் பெற்றோரிடம் மறைக் காது. முக்கியமாகப் பொய் சொல்லாது. ‘நம்ம சொல்றத அப்பா, அம்மா காது கொடுத்துக் கேட்கிறாங்க..' எனும் நம்பிக்கையை நம் குழந்தைகளுக்குத் தர வேண்டும். வீட்டுக்குள் மறுத்துப் பேச அனு மதிப்பதால், வெளியில் எந்தச் சூழலிலும் தைரியமாக உரையாடத் தயாராவார்கள்.
குழந்தைகள் முரண்களை நம்மிடமே பேசிப் பழகட்டும். ஜனநாயகமான உரையாடல்தான் விடுதலை உணர்வைத் தரும். வீட்டில் நம் குழந்தைகள் ‘நோ’ சொல்லட்டும்! அனுமதிப்போம்.
- சக.முத்துக்கண்ணன்; kannatnsf@gmail.com | - ச.முத்துக்குமாரி; muthukumari.15@gmail.com; கட்டுரையாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் - சிறார் எழுத்தாளர்கள்.